நாட்டில் இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றினால் மூவர் மரணமடைந்துள்ளனர். அதன்படி இதுவரை கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.
மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த 84 வயதான பெண்ணொருவரும் கொழும்பு 10 ஐச் சேர்ந்த 70 வயதான ஆணொருவரும் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 75 வயதான ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. தற்போது அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்ற போதிலும் அதனை விட இரு மடங்கு எண்ணிக்கையிலானோர் குணமடைந்துள்ளனர். எவ்வாறிருப்பினும் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 229 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 516 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 5652 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு , 11 806 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதே வேளை 464 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் பல தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும் என்பதால் 58 கொரோனா சிகிச்சை நிலையங்களில் மேலதிகமாக சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்கள் மாத்திரமே தற்போது அபாயம் மிக்கவையாக சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமையவே குறித்த இரு மாவட்டங்களிலும் எச்சரிக்கை மிக்க 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
2593 மேலதிக சிகிச்சை படுக்கைகள்
தற்போது வரை 58 சிகிச்சை நிலையங்களில் 9432 சிகிச்சை படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 6494 சிகிச்சை படுக்கைகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2593 சிகிச்சை படுக்கைகள் தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அதே போன்று 15 தீவிர சிகிச்சை பிரிவுகளும் அவற்றில் 146 சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை மாலை வரை அவற்றில் 7 படுக்கைகள் மாத்திரமே பயன்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள 24 பொலிஸ் பிரிவுகள்
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் தற்போது 24 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடை, வத்தளை, ஜாஎல, கடவத்தை, ராகமை, நீர்கொழும்பு மற்றும் களனி ஆகிய பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் புளுமென்டல், வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கிரான்பாஸ், தெமட்டகொடை, பொரளை, வெல்லம்பிட்டி, மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனிவீதி, டாம் வீதி என்பவற்றோடு மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று கொழும்பு மாவட்டத்தில் அங்குலானை வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தொற்றாளர் எண்ணிக்கையில் கம்பஹாவை மிஞ்சிய கொழும்பு
மினுவாங்கொடை கொத்தணி இனங்காணப்பட்டதன் பின்னர் கம்பஹா மாவட்டமே அபாயமுடையதாகக் காணப்பட்டது. எனினும் தற்போது கம்பஹாவை விட கொழும்பிலேயே அதிக தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பில் மாத்திரம் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி மினுவாங்கொடை கொத்தணியில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டது முதல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 5668 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹாவில் 4956 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவை தவிர களுத்துறையில் 598 , குருணாகலில் 239, கேகாலையில் 185, கண்டியில் 137, காலியில் 126, இரத்தினபுரியில் 111, மட்டக்களப்பில் 70, புத்தளத்தில் 61, நுவரெலியாவில் 47 பதுளையில் 34, மாத்தளையில் 29, மாத்தறையில் 27, அம்பாறையில் 22, அம்பாந்தோட்டையில் 20, யாழ்ப்பாணத்தில் 19, வவுனியாவில் 14, அநுராதபுரத்தில் 14, திருகோணமலையில் 11, மன்னாரில் 10, மொனராகலையில் 8, பொலன்னறுவையில் 6, கிளிநொச்சியில் 3 மற்றும் முல்லைத்தீவில் 1 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் மாத்திரமே நூற்றுக்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவாகினர். இங்கு 541 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். எனினும் கம்பஹாவில் 39 தொற்றாளர்கள் மாத்திரமே இனங்காணப்பட்டனர். இதே வேளை களுத்துறையில் 3, இரத்தினபுரியில் 4, காலியில் 8, கேகாலையில் 3, மாத்தளையில் 1, குருணாகலில் 5, மட்டக்களப்பில் 7, பொலன்னறுவையில் 1, புத்தளத்தில் 2 மற்றும் பதுளையில் 3 என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.