ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் “நொருக்கும் பதிலடி” கொடுப்போம் என ஈரான் 2020-11-17 செவ்வாய்க்கிழமை சூளுரைத்தது. இஸ்ரேலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யாதது ஒன்று உண்டென்றால் அது ஈரான் மீது தாக்குதல் நடத்தாததுதான். டிரம்ப் பதவியில் இன்னும் இரண்டு மாதங்களே இருக்க முடியும் என்ற நிலையில் அதையும் செய்ய முயல்கின்றார் எனச் செய்திகள் வெளிவந்துள்ளன.
குறைந்தது ஈரானின் நடான்ஸ் நகரத்தில் உள்ள யூரேனியம் பதப்படுத்தும் நிலையிலாவது தாக்குதல் நடத்த வேண்டும் என டிரம்ப் தனது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளார்.
டொனால்ட்டிரம்பும் இஸ்ரேலும்
டொனால் ட்டிரம்பின் மகளின் கணவர் ஜரார்ட் குஷ்ணர் ஒரு யூதராவார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் உயர் ஆலோசகராக பதவி வகிக்கும் குஷ்ணர் அங்கு செல்வாக்கு மிக்கவராக இருக்கின்றார். அவரும் சவுதி அரேபியபட்டத்துக்குரிய இளவரசரும் நெருங்கிய நண்பர்கள்.
அதனால் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கு சாதகமான பல நகர்வுகள் மேற்காசியாவில் நடந்தன.
பலஸ்த்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் தமது தலைநகரம் எனக் கொண்டாடிய கிழக்கு ஜெருசேலம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
அத்துடன் ஜெருசேலம் இஸ்ரேலின் தலைநகர் என இஸ்ரேல் அறிவிக்க அதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
சிரியாவிடமிருந்து இஸ்ரேல் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேல் சிரியாவிடமிருந்த அபகரித்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோலான் குன்றுகள் இஸ்ரேலின் ஒரு பகுதி என அமெரிக்கா ஏற்றுக்கொண்டது.
பலஸ்த்தீனியர்களின் மேற்குக் கரைப்பிரதேசத்தில் இஸ்ரேல் செய்த யூதக்குடியேற்றங்களை அமெரிக்கா சட்டவிரோதமாக கருதமாட்டாது என்றும் டொனால் ட்டிரம்ப் பிரகடனம் செய்தார்.
ஐக்கியஅமீரகம், பாஹ்ரேன், சூடான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் அரச உறவுகளை உருவாக்க டிரம்பின் ஆட்சி முன்னின்று உழைத்தது.
இஸ்ரேல் மிகவும் வெறுத்த ஈரானின் படைத்தளபதி கசீம் சுலேமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொலை செய்தது.
பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம்
பாதுகாப்புச் செயலர் எனப்படும் பாதுகாப்பு அமைச்சுப் பதவியில் இருந்த மார்க் எஸ்பரை நவம்பர் 6-ம் திகதி நடந்த தேர்தலில் தான் தோல்வியடைந்த பின்னர் டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்.
ஆப்கானிஸ்த்தானில் இருந்தும் ஈராக்கில் இருந்தும் அமெரிக்கப் படையினரை வெளியேற்றாமை போன்ற காரணங்களுக்காக அப்பதவி நீக்கம் நடந்ததாக சொல்லப்பட்டாலும் ஈரான் மீது தாக்குதல் நடத்த மார்க் எஸ்பர் மறுத்தமையும் ஒரு முக்கிய காரணமாகும் எனக் கருதப்படுகின்றது.
இதற்கிடையில் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிறையன் தான் பதவியில் இருந்து விலக முன்னர் கட்டார்(கத்தார்) நட்டிற்கு எதிராக ஐக்கிய அமீரகம், சவுதிஅரேபியா, எகிப்த்து, பாஹ்ரேன் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்டுள்ள முற்றுகையை நீக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டார்(கத்தார்) நாட்டின் மீதான முற்றுகையால் அந்த நாடு ஈரானில் தங்கியிருக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஈரானின் இந்த அரசுறவியல் நெம்புகோலை வலிமையிழக்கச் செய்யவே இந்த நடவடிக்கை.
சிரியாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் சிரிய எல்லையில் ஆட்கொல்லி கண்ணி வெடிகளை புதைக்கப்பட்டதற்கு பதிலடியாக சிரியாவில் உள்ள ஈரானியப் படைநிலைகள் மீது இஸ்ரேல் 2020 நவம்பர் 18-ம் திகதி தாக்குதல் நடத்தியது.
அதில் இரு சிரியப்படையினர் கொல்லப்பட்டதாக சிரிய அரசு அறிவித்தது. அந்த தாக்குதலைத் தொடர்ந்து பாஹ்ரெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லத்திஃப் அல்ஜயானியும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்பொம்பியோவும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணம் செய்தனர்.
அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் பாஹ்ரேனிய அதிகாரிகள் சூழ ஒரு பேச்சுவார்த்தை இஸ்ரேலியத்தலை நகரில் நடந்தது.
பாஹ்ரேனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை சுமூகப்படுத்தவே அமெரிக்க மற்றும் பாஹ்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பயணம் செய்ததாக சொல்லப்பட்டது. இருவரும் இணைந்து இஸ்ரேலுக்கு பயணித்தமை மிகவும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
யூரேனிய பதப்படுத்தல் ஒப்பந்தம்
2015-ம் ஆண்டு P-5+1 எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, இரசியா,பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து வல்லரசு நாடுகளையும் ஜேர்மனியையும் கொண்ட குழுவுடன் ஈரான் தனது யூரேனியப் பதப்படுத்தல் தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தை செய்தது.
அந்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் 90 நாட்களுக்கு ஒருதடவை புதுப்பிக்கும் கையொப்பம் இடவேண்டும்.
இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் கடுமையாக எதிர்த்தன. டொனால் ட்டிரம்ப் 2016 நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று 2017 ஜனவரியில் பதவி ஏற்றார்.
2017 ஒக்டோபரில் அந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க மறுத்து கையொப்பமிடவில்லை. அதனால் மற்ற ஆறுநாடுகளுடன் இணைந்து அமெரிக்கா செய்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான் மீது அமெரிக்கா மேலதிகப் பொருளாதாரத் தடைகளையும் விதித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜொன்பைடன் தான் மீண்டும் அந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பேன் எனச் சொல்லியுள்ளார்.
அப்படி அங்கீகரிக்கும் போது ஈரான் அந்த ஒப்பந்தப்படி மட்டுப்படுத்தப்பட்ட யூரேனியப் பதப்படுத்தலைச் செய்யலாம்.
அதை இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் விரும்பவில்லை. இஸ்ரேலிய தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெத்தன்யாகூவுடனும் சவுதி அரச குடும்பத்துடனும் தனிப்பட்ட அடிப்படையில் அதிக நட்புக் கொண்ட டொனால்ட் டிரம்ப் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற முன்னர் ஈரானின் யூரேனியப் பதப்படுத்தலை தடுக்கும் நடவடிக்கையை செய்ய முயல்கின்றார் என நம்பப்படுகின்றது.
பாஹ்ரேய்னின்முக்கியத்துவம்
ஈரானின் யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் பாறைகளுக்கு உள்ளே அறுபது அடிகளுக்கு மேற்பட ஆழத்தில் உள்ளன.
அவற்றின் மீது அமெரிக்கா தாக்குதல் செய்வதற்கு பாஹ்ரேனில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப்பிரிவின் பங்கு மிக முக்கியம்.
அதற்கு பாஹ்ரேனின் ஒத்துழைப்பு அவசியம். பாஹ்ரேயின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரும் ஒன்றாக இஸ்ரேலுக்கு பயணித்ததின் நோக்கம் பாஹ்ரேனின் ஒத்துழைப்பைப் பெறுவதாக இருக்கலாம்.
சியா இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாஹ்ரேனில் சுனி இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி நடக்கின்றது.
அங்கிருந்து சுனி இஸ்லாமிய நாடான ஈரானின் மீது தாக்குதல் செய்யப்பட்டால் பாஹ்ரேனில் உள்ள சுனி இஸ்லாமியர்கள் கிளர்ந்து எழலாம். அதை அடக்குவதற்கான முன்னேற்பாட்டை செய்யவேண்டும். அதற்கு இஸ்ரேலிய உளவுத்துறையின் பங்களிப்பு அவசியம்.
ஈரானின் மீதான தாக்குதல் சுனி இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராக கொண்ட ஈராக்கிலும் பெரும் குழப்பத்தை உருவாக்கலாம்.
ஈரானின் ஆதரவு பெற்ற சுனி இஸ்லாமியப் போராளிகள் அமைப்பான ஹிஸ்புல்லாவும் மற்ற போராளி அமைப்புக்களும் மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்தலாம்.
இதனால் அமெரிக்க படைத்துறை மற்றும் வெளியுறவுத்துறை நிபுணர்கள் ஈரான் மீதான தாக்குதலை எதிர்ப்பார்கள்.
ஆனால் ஜோன் பைடனின் வெற்றி இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போரைக் கொண்டுவரும் என இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் எக்காளமிட்டுள்ளார்.
– வேல்தர்மா –