ஹாங்காங்கில் அதிருப்தியாளர்களின் வாயடைக்கும் வேலையை சீனா செய்கிறது என விமர்சனம் வந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் அடங்கிய கூட்டணிக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.

இந்த ஐந்து நாடுகளையும் ஐந்து கண் கூட்டணி என்று அழைப்பார்கள்.

ஹாங்காங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் புதிய விதிகளை சீனா அமல்படுத்தியிருப்பதை இந்த ஐந்து கண் கூட்டணி விமர்சனம் செய்தது. அத்துடன் இந்த நடவடிக்கையை திரும்பப் பெறவேண்டும் என்றும் இந்தக் கூட்டணி சீனாவை வலியுறுத்தியது.

இது தொடர்பாக பெய்ஜிங்கில் பத்திரிகையாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவ் லீஜன் “அவர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் கண்கள் பிடுங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

“சீனா எதைக் கண்டும் அஞ்சுவதில்லை”

“சீனா எப்போதும் தொல்லை கொடுப்பதில்லை. எதைப் பார்த்தும் அஞ்சுவதும் இல்லை. அவர்களுக்கு 5 கண்கள் இருக்கிறதா அல்லது10 கண்கள் இருக்கிறதா என்பது பிரச்சனையே அல்ல” என்றும் அவர் கூறினார்.

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கருதும் சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்குவதற்கு ஹாங் காங் நிர்வாகத்துக்கு அதிகாரம் அளித்து சீனா ஒரு தீர்மானம் கொண்டுவந்தது.

இதையடுத்து கடந்த வாரம் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரைப் பதவி நீக்கியது ஹாங் காங் நிர்வாகம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்தனர்.

ஹாங்காங் – வரலாற்றுப் பின்னணி

1997ல் பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் திரும்பி ஒப்படைத்தது முதல் இந்த சட்ட அவையில் எதிர்ப்புக் குரல் ஒன்றுகூட இல்லாமல் போவது இதுவே முதல் முறை.

இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கிய செயல், ஹாங்காங்கின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்று என பலரும் கருதினர். ஆனால், இதை சீனா மறுக்கிறது.

பதவி நீக்கப்பட்ட நால்வரையும் மீண்டும் பதவியமர்த்தும்படி மேற்குறிப்பிட்ட ஐந்து கண் கூட்டணி நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சீனாவை வலியுறுத்தினர்.

இந்த பதவி நீக்கம், ஹாங்காங் பிராந்தியத்தின் சுதந்திரங்கள் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றை பாதுகாப்பது தொடர்பான சட்டபூர்வமான கடமைகளை சீனா மீறுவதாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கு தங்களுக்கு உள்ள உரிமையும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த ஐந்து கண் கூட்டணியில் உள்ள நாடுகள் அனைத்துமே ஆங்கிலம் பேசும் நாடுகள். பனிப் போர்க் காலத்தில் அப்போதைய சோவியத் சோஷியலிஸ்ட் ஒன்றியத்தையும், அதன் கூட்டாளிகளையும் கண்காணிப்பதற்காக ஆரம்பத்தில் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கூட்டணியில் உள்ள நாடுகள் தங்களுக்குள் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்கின்றன.

ஹாங்காங்கில் சலுகைகளை அறிவிக்கும்படி சீனாவுக்கு அழுத்தம் தருவதற்கு வெளிநாடுகள் மேற்கொள்ளும் முயற்சி தோல்வியே அடையும் என்று ஹாங்காங்கில் உள்ள சீனாவின் வெளியுறவுத்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.

“ஒரு நாடு. இரு அமைப்பு முறைகள்” என்ற கொள்கையின் அடிப்படையில் 1997ல் பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது. இந்த கொள்கையின்படி சீனாவுக்கு இருப்பதைவிட சில கூடுதல் உரிமைகள் 2047 வரை ஹாங்காங்குக்கு இருக்கும்

சிறப்பு நிர்வாகப் பகுதியான ஹாங்காங் தனக்கென தனியான சட்ட அமைப்பைக் கொண்டிருக்கும். அங்கே ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கும். பேச்சுரிமையும், கூடும் உரிமையும் அங்கே இருக்கும் என்று அப்போது ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், பல ஆண்டுகளாக சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் அங்கு நடந்த நிலையில், சர்ச்சைக்குரிய அதிக அதிகாரங்கள் பொருந்திய தேசியப் பாதுகாப்பு சட்டம் ஒன்றை இயற்றியது சீனா. அது ஹாங்காங்கின் தன்னாட்சி உரிமைகளைப் பறித்தது. போராட்டத்தில் ஈடுபடுவோரை தண்டிப்பதை எளிதாக்கியது.

Share.
Leave A Reply