யுத்தம் முடியும் கட்டத்தில் விடுதலைப் புலிகள் என்னிடம் உதவி கோரினார்கள். அது கடைசிக்கட்டம் ஒன்றும் செய்ய முடியாது.

அவர்களை சரணடையுமாறு சொன்னேன். கொஞ்சம் நேரகாலத்துடன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டிருந்தால் அவர்களை காப்பாற்றியிருப்பேன் என புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் யாழ்ப்பாண ராஜா ரெமிஜியஸ் கனகராஜா.

யாழ்ப்பாண ஆரியசக்கரவர்த்தி அரச குடும்பத்தின் தற்போதைய தலைவரான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா தற்போது நெதர்லாந்தில் வசித்து வருகிறார். புலம்பெயர் தமிழ் சமூக ஊடகமொன்றில் வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் என்னை தொடர்பு கொண்டு உதவி கோரினார்கள். நான் பல நாடுகளுடனும், அரச குடும்பங்களுடனும் தொடர்பில் இருந்தேன். குறிப்பாக நோர்வே அரச குடும்பத்துடன் தொடர்பில் இருந்தேன்.

தொலைபேசியிலும், நேரிலும் விடுதலைப்புலிகள் என்னுடன் பேசினார்கள். சர்வதேச நாடுகளில் உங்கள் குரலுக்கு மதிப்புள்ளதால் எமது மக்களிற்காக நீங்கள் பேச வேண்டுமென கேட்டுக் கொண்டனர். நான் அதை இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறேன்.

2009இல் யுத்தம்முடிவதற்கு 5 நாளின் முன்னரும் விடுதலைப் புலிகள் என்னிடம் வந்து உதவி கோரினர்.

அப்போது நான் சொன்னேன் சரணடையும்படி. அவர்கள் நேரத்துடனேயே அல்லது அங்கிருந்தபடியே என்னை தொடர்பு கொண்டிருந்தால் பல விசயங்களை நான் பார்த்திருப்பேன்.

ஆனால் அங்கிருக்கும் புலிகள் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இங்கிருப்பவர்களே தொடர்பு கொண்டு உதவிகள் கேட்டார்கள்.

தமிழர்களிடம் ஒற்றுமையில்லாததே அனைத்து பிரச்சனைக்கும் காரணம். 2009 இல் யுத்தம் முடிந்த பின்னரும் பிரிந்து போய் நிற்கிறார்கள். யுத்தம் முடிந்ததும் அனைவரும் என்னிடம் வந்து, பலமான அணியாக நாம் முன்னகர்ந்திருக்க வேண்டும்.

இப்பொழுது யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் இலங்கை இராணுவத்துடன் சண்டை பிடித்து முரண்படும் போக்கில் இருக்கிறார்கள்.

அது தவறானது. உங்களிற்கு மழை வெள்ளம் போன்ற ஆபத்தான நேரத்தில் யார் உதவுவார்கள்? இராணுவம்தான் உதவும். உங்கள் அரசியல்வாதிகள் ஓடிஒளிந்து விடுவார்கள் என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண ராசா.

Share.
Leave A Reply