இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிப்பை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 48 மணிநேரத்தில் புயலாகவும் மாறும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ‘நிவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த புயல், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக ஒரு தாழமுக்கமாக மேலும் விருத்தியடைந்து மேற்கு-வடமேற்குத் திசையில் வரும் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் இலங்கையின் வடக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் அதிக கடற்கொந்தளிப்பு, கடும் காற்று, மழை ஏற்படுமென இலங்கை வளிமண்டலவிய்ல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், குறித்த பகுதிகளிற்கு இன்று மாலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாண மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply