சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஷாங்காய் நகரில் இருவருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இந்த மாதத் ஆரம்பத்தில் கொவிட்-19 தொற்று பாதிப்புக்குள்ளான விமான நிலைய ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பாதிப்புக்குள்ளானவர்கள் பணிபுரிந்த இடத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏராளமானோருக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷாங்காயில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலைய பணியாளர்கள் 17,719 பேருக்கு திங்கட்கிழமை காலையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
தியான்ஜின் நகரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நகரைச் சேர்ந்த 22 இலட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
2 இலட்சம் மக்கள்தொகை கொண்ட மன்சௌலி நகரில் கடந்த சனிக்கிழமை இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்நகரில் வாழும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில், குறிப்பிட்ட இடங்களில் பொது முடக்கம், பாடசாலைகள் மூடல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.