வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பிரெஞ்சுக் குடியுரிமையை வழங்கும் நடைமுறைகள் அடுத்த ஆண்டு செப்ரெம்பர் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

எனவே இக்காலப் பகுதிக்குள் விரைந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்போர் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குடியுரிமை கோருவதற்கான ஏனைய எல்லா தகுதிகளுடனும் குறைந்தது இரண்டு ஆண்டுகாலம் பிரான்ஸில் வதிவிட அனுமதியுடன் வசித்துவரும் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

கொரோனா பேரிடரின்போது தொற்று ஆபத்து அதிகம் உள்ள முன்னரங்குகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் முன்னுரிமை அடிப்படையில் பிரெஞ்சு குடியுரிமை பெறத் தகுதி உடையவர்கள் ஆவர். அத்தகையோர் தமது விண்ணப்பங்களை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி உடைய தொழில் நிலைகள் எவை என்ற விவரங்களை உள்துறை அமைச்சு ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது.

சுத்திகரிப்புப் பணியாளர்கள் முதல் பலசரக்கு கடைகளை நடத்துவோர் வரை அந்தத் தொழிலாளர் பட்டியலில் உள்ளனர்.

அத்தகையோர் தாங்கள் சுகாதார அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் பணிபுரிந்ததைத் தமது தொழில் வழங்குநர்கள் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்வதற்குரிய அத்தாட்சிப் படிவமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே குடியுரிமைக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தாங்கள் நெருக்கடி காலத்தில் பணியாற்றியதை உறுதிப்படுத்தும் ஆவணத்தை அனுப்பிவைத்தால் அவர்களது விண்ணப்பங்கள் இக்காலப்பகுதிக்குள் விரைவாகப் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாடு எதிர்கொண்ட பெரும் சுகாதார நெருக்கடியை அடுத்து அமுல்செய்யப்பட்ட பொது முடக்க காலப்பகுதியில் முன்னரங்கத்தில் நின்று பணியாற்றிய வெளிநாட்டு மருத்துவர்கள், தாதியர், அவசர சேவையாளர்கள், காசாளர்கள், கழிவு அகற்றுவோர், துப்புரவுப்பணியாளர்கள் போன்றவர்களது குடியுரிமை விண்ணப்பங்களை துரிதகதியில் விசாரணைக்கு எடுக்க பிரெஞ்சு அரசு முடிவு செய்திருந்தமை தெரிந்ததே. அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

Share.
Leave A Reply