நிவர் புயல் கரையை கடந்து பலவீனமான நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் உள்வாங்கி உள்ளது மக்களுக்கு பீதியை உண்டாக்கியுள்ளது.

இதனிடையே, புயல் கரையைக் கடந்திருந்தாலும், கனமழை பெய்யும் வாய்ப்பிருப்பதால் வீட்டிலேயே இருக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டுள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாராயணசாமியுடன் புயல் நிலவரம் குறித்துப் பேசியுள்ளார். நிவர் தொடர்பாக நடந்து வரும் பல்வேறு செய்திகளின் விவரம்:

உள்வாங்கிய பாம்பன் கடல்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில நாள்களுக்கு முன்பு நிவர் புயலாக மாறியது. புயல் உருவானதையடுத்து வழக்கத்துக்கு மாறாக பாம்பன் வடக்கு கடல் பகுதி சூறைக்காற்றுடன், சீற்றத்துடன் காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரிக்கும் மரக்காணத்துக்கும் இடையே புயல். கரையை கடந்தது.

இதன் எதிரொலியாக கடந்த 3 நாட்களாக கடும் சீற்றத்துடன் காணப்பட்ட பாம்பன் வடக்கு கடற்கரை அமைதியானது.

இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் கடல், கரையில் இருந்து 8 மீட்டர் தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜ புயலின் போது பாம்பன் வடக்கு கடற்கரை இதே போல் அமைதியாக இருந்தது பின்னர் திடீரென சீற்றம் ஏற்பட்டு விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகள் ஒன்றோடு ஒன்று மோதிய காரணத்தினால் படகுகள் சேதமடைந்தது.

தற்போது மீண்டும் இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் பால கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ராட்சத கிரேன் மற்றும் ஜெனரேட்டர் பொருத்தப்பட்ட மிதவைகள் கடல் சீற்றம் காரணமாக பழைய ரயில் பாலத்தில் மோதி சேதம் ஏற்படக் கூடும் என்பதால் கட்டுமானப் பொருட்களை கரையில் நிறுத்தி வைத்தனர்.

தற்போது கடல்நீர் உள்வாங்கியதால் கனரக மிதவைகள் மற்றும் கிரேன்கள் தரை தட்டி மணலை புதைந்து நிற்கின்றன. நிவர் புயல் காரணமாக பாம்பன்,தூத்துக்குடி தூறைமுகங்களில் கடந்த மூன்று நாட்காளக ஏற்றப்பட்டிருந்த 3ம் எண் புயல் எச்சரிக்கை இறக்கப்பட்டது.

Share.
Leave A Reply