யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன.

இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாக வீடொன்றின் கூரை வீழ்ந்து ஏற்பட்ட பாதிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதால் இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேலணை பகுதியைச் சேர்ந்த இருவர் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மூவர் காணாமல் போயுள்ளதாகவும், மூவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக யாழ். மாவட்டத்தில் இதுவரை 15 வீடுகள் முழு அளவிலும் 141 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்பவர்களைத் தங்கவைப்பதற்காக நான்கு இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply