மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வியாழக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த் தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன், “மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல், வியாழக்கிழமை மாலை ஐந்தரை மணியளவில் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக பாம்பனுக்கு தென்மேற்கு திசையில் 20 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து ராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை இரவு – வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரையைக் கடக்கக்கூடும்” என்று கூறினார்.
இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக்கூடும். இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக பகுதியில் 50 -60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் கன மழைக்கான வாய்ப்பு உண்டு எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

