அரசியல் களத்தில் ஒன்றாக இணைந்து செயல்படும் சூழல் உருவானால் ரஜினியும், கமலும் விரைவில் சந்தித்து பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் பரபரப்பான பேச்சாக மாறி வருகிறது. ஜனவரியில் புதிய கட்சியை அவர் தொடங்குகிறார். எந்த தேதியில் கட்சியை தொடங்குவது என்பது பற்றிய அறிவிப்பை வருகிற 31-ந்தேதி அவர் தெரிவிக்கிறார்

புதிய கட்சி தொடர்பாக ரஜினி வெளியிட்ட அறிவிப்பில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் வருகிற தேர்தலில் அதிசயம் அற்புதம் நிகழும் என்றும் கூறியிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த அரசியல் பிரவேசம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக ரஜினி அளித்த பேட்டியில், ‘அரசியல் மாற்றம் இப்போது இல்லன்னா எப்போதும் இல்லை’ என்று கூறி இருந்தார்.

அதேநேரத்தில் தனித்து நின்று அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் நம்மால் வீழ்த்த முடியுமா? என்றும் ரசிகர்கள் மத்தியில் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதன்மூலம் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு எதிராக ரஜினிகாந்த் வருகிற தேர்தலில் மாற்றத்தை விரும்பும் கட்சிகளோடு கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் கைகோர்ப்பதற்கு கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கமல் அளித்த பேட்டியில், ‘வருகிற சட்ட மன்ற தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று கூறியிருந்தார். இதற்கு முன்பு கமல்ஹாசன் அளித்துள்ள பல பேட்டிகளிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவருடன் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவே தெரிவித்து இருந்தார்.

தற்போது இதற்கான சூழல் ஏற்பட்டு இருப்பதாகவே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக 2 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் அடுத்த மாதம் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் களத்தில் ஒன்றாக இணைந்து செயல்படும் சூழல் உருவானால் ரஜினியும், கமலும் விரைவில் சந்தித்து பேசுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணத்திலேயே அரசியல் களம் கண்டுள்ளனர்.

இதன்மூலம் அரசியலில் இருவரும் ஒரே நோக்கத்துடன் பயணிக்க இருப்பதும் உறுதியாகி உள்ளது. இருவருக்கும் இடையே உள்ள இந்த ஒற்றுமையே அவர்களை ஒன்று சேர்க்கும் என்றும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சினிமாவில் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

அந்த படங்கள் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளன என்றும் அதுபோல அரசியலிலும் இருவரும் கைகோர்த்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்றும் கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதனை உறுதிபடுத்தும் வகையில் கமல் பலமுறை கருத்துக்களை தெரிவித்துள்ளார். சினிமாவில் இருக்கும் போதே ரஜினிக்கும், எனக்கும் போட்டி இருந்துள்ளது. பொறாமை இல்லை. ரஜினி எப்போதும் எனது நண்பர் என்று கமல் கூறியிருக்கிறார்.

இந்த நட்பு அரசியலில் இருவரும் கைகோர்த்து பயணிக்க நிச்சயம் உதவும் என்று ரஜினி ரசிகர்களும், மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளும் கருதுகிறார்கள்.

Share.
Leave A Reply