நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை அண்மித்துள்ள அதே வேளை, 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை இன்றைய தினத்தில் மாத்திரம் 694 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,072ஆக உயர்வடைந்துள்ளது.

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 21 800 பேர் குணமடைந்துள்ளதோடு , 7795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணங்களின் எண்ணிக்கை 142 ஆகக் காணப்படுகிறது. இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 316 பேர் பேலியகொடை கொத்தணியுடனும் 43 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளுடன் தொடர்புடையவர்கள் எண்ணிக்கை 26 181 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் 12 000 தொற்றாளர்கள்

ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்னர் இன்று புதன்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பில் மாத்திரம் 526 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இரண்டாம் அலையில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 12 604 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதே வேளை கம்பஹாவில் 7019 , களுத்துறையில் 1589, குருணாகலில் 417, இரத்தினபுரியில் 401, காலியில் 338, அம்பாறையில் 329, கேகாலையில் 272, நுவரெலியாவில் 206 மற்றும் மாத்தளையில் 54 என இரண்டாம் அலையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

71 வயதிற்கு மேட்பட்டோர் அதிகளவில் உயிரிழப்பு

இலங்கையில் இரண்டாம் அலையின் பின்னர் 129 மரணங்களில் 71 வயதிற்கு அதிகமானோரே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். 71 வயதிற்கு மேற்பட்ட 63 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இது நூற்றுக்கு 48.84 சதவீதமாகும். இதே போன்று 61 – 70 வயதுக்கு இடைப்பட்ட 25 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்த எண்ணிக்கை 19.38 சதவீதமாகும்.

51 – 60 வயதுக்கு இடைப்பட்ட 21 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்த எண்ணிக்கை 16.28 சதவீதமாகும். 41 – 50 வயதுக்கு இடைப்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளதோடு , இந்த எண்ணிக்கை 10.07 சதவீதமாகும். 31 – 40 வயதுக்கு இடைப்பட்ட நால்வர் உயிரிழந்துள்ளதோடு இந்த எண்ணிக்கை நூற்றுக்கு 3.10 வீதமாகும். இதே வேளை 10 – 30 வயதுக்கு இடைப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளதோடு இந்த எண்ணிக்கை நூற்றுக்கு 2.32  சதவீதமாகும் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

6 மாவட்டங்களில் 45 பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

கொழும்பில் 9 பொலிஸ் பிரிவுகளும் , 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , 3 தொடர் மாடி குடியிருப்புக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கம்பஹாவில் 10 கிராம சேவகர் பிரிவுகளும் , தொடர்மாடி குடியிருப்பொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறையில் 7 கிராம சேவகர் பிரிவுகளும் , கண்டியில் 3 கிராம சேவகர் பிரிவுகளும் , புத்தளத்தில் 5 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போன்று அம்பாறையில் ஒரு பொலிஸ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றினால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 21,800ஆக பதிவாகியுள்ளதுடன், 8128 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 142ஆக காணப்பட்ட உயிரிழப்பு, இன்றைய தினம் 144ஆக பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply