பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் தொலைக்காட்சித் தொடரில் முல்லையாக நடித்த சித்ராவின் தற்கொலை சின்னத்திரை நடிகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர வருத்தப்பட வைத்துள்ளது.
சித்ரா ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் மட்டுமல்ல அவர் பல சீரியல்கள், நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் பல்வேறு விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் பிறந்தது 1992ஆம் வருடம் மே மாதம் 2ஆம் தேதி. இவருக்கு ஓர் அண்ணனும் ஓர் அக்காவும் இருக்கிறார்கள்.
இவர் முதுகலை வரை படித்திருக்கிறார். தன்னுடைய பிஎஸ்சி இளங்கலைப் பட்டத்தை சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி பெண்கள் கலை அறிவியல் கல்லூரியிலுமு் அதையடுத்து 2012 – 14ஆம் ஆண்டு எம்.எஸ்சி உளவியல் படிப்பை சென்னை எஸ்ஐடி கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.
தான் முதுநிலை பட்டம் படித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே மாடலிங் மற்றும் டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகத் பணியாற்றத் தொடங்கினார். முதன் முதலாக இவர் விஜே வேலையில் சேர்ந்தது மக்கள் தொலைக்காட்சியில்தான்.
இவருடைய முதல் நிகழ்ச்சி, மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பத்து நிமிடக் கதைகள் என்னும் நிகழ்ச்சி. அதைத் தொடர்ந்து ஷாப்பிங் ஜோன் போன்ற நிகழ்ச்சிகளில் விஜேவாகப் பணியாற்றினார்.
அடுத்தடுத்து சட்டம் சொல்வது என்ன, நண்பேன்டா, ஊர் சுத்தலாம் வாங்க, நொடிக்கு நொடி அதிரடி, என் சமையலறையில், விளையாடு வாகை சூடு போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்தார்.
சித்ரா நிறைய விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபலமான துணிக்கடைகள், தனியார் மருத்துவமனை, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார் சித்ரா.
சின்னத் திரையில் நிறைய பிரபலமாக ஓடிய மெகா தொடர்களில் நடித்திருக்கிறார் சித்ரா. அதில் குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு முதன் முதலில் ஜெயா டீவியில் மன்னன் மகள் என்னும் சீரியலில் வைஷாலி என்னும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து, சன் டீவியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில், பெரிய பாப்பா கதாபாத்திரம் ஏற்று நடித்தார்.
அடுத்ததாக மிக பிரபலமான விஜய் டீவி சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 2 -இல் வேட்டையனின் தோழி கதாபாத்திரத்திலும் சீசன்-3இல் பேய் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
அடுத்து ஜீ தமிழில் டார்லிங் டார்லிங் சீரியல், கலர்ஸ் தமிழில் வேலுநாச்சி சீரியல் என சீரியல்களில் பிஸியான மற்றும் தேர்ந்த நடிகையாக மாறியிருக்கிறார்.
கடைசியாக இவர் நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரும் இவருடைய ஜோடியான கதிரையும் பார்ப்பதற்காகவே இந்த சீரியலை பலரும் பார்க்கிறார்கள்.
சீரியலில் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் இவர் மிகச்சிறந்த டான்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஜீ தமிழில் நடத்தப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் அதைத் தொடர்ந்து நண்பேன்டா மற்றும் ஜீ டான்ஸ் லீக் போன்ற நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராகப் பங்கேற்றிருக்கிறார்.
அதோடு, சமீபத்தில் விஜய் டீவியில் நடந்து முடிந்திருக்கிற ஜோடி ஃபன் அன்லிமிடட் நிகழ்ச்சியில் பைனல்ஸ் வரைக்கும் வந்திருக்கிறார். மிக நனிளத்துடன் நேர்த்தியாக ஆடக் கூடியவர் சித்ரா.