கோவிட்-19 தொற்று உலக அச்சுறுத்தலாக மாறியுள்ள பின்னணியில், இலங்கையிலுள்ள ஓர் ஆயுர்வேத மருத்துவர், மூலிகையிலான மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளமை அண்மை காலமாக நாட்டில் அதிகம் பேசு பொருளாக மாறியிருந்தது.
சுத்தமான தேன் உள்ளிட்ட சில மூலிகைகளினால் இந்த மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக மருந்தை தயாரித்த கேகாலை ஹெட்டிமுல்ல பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரான டி.எம்.தம்மிக்க பண்டார தெரிவிக்கின்றார்.
இதேவேளை, தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள மூலிகை மருந்தானது சட்டவிரோதமானது எனவும், இந்த மூலிகை மருந்தினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்க போவதில்லை எனவும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்னும் பரிசோதனைகள் முடியவில்லை என்பதால் இறுதி முடிவை எட்ட முடியாது என்று ஆயுர்வேத திணைக்களமும் தெரிவித்துள்ளது.
இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
கோவிட்-19 தொற்றாளர்களுக்கு வழங்கி பரிசோதனை
வத்துபிட்டிவல தனிமைப்படுத்தல் நிலையத்தில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கோவிட் தொற்றாளர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் நான்கு தினங்களில் குணமடைந்திருந்ததாக சுகாதார பிரிவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில், வெற்றி காணப்பட்டது என்று அரசு தரப்பால் தெரிவிக்கப்பட்ட பின்னணியில், மூன்றாம் கட்ட பரிசோதனைகள் அரசாங்கத்தின் பூரண அனுசரணையின் கீழ் தற்போது நடத்தப்பட்டு வருகின்றது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியினால் நியமிக்கப்பட்ட விசேட மருத்துவ குழுவொன்றின் ஊடாக இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த மூலிகை மருந்தை அருந்தினால், வாழ் நாளில் ஒரு தடவையேனும், கோவிட் வைரஸ் தொற்று ஏற்படாது என அவர் ஊடகங்களின் மூலம் நாட்டிற்கு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், குறித்த மூலிகை மருந்தை கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட ஒருவர் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு தேநீர் கரண்டி வீதம் மூன்று நாட்கள் அருந்த வேண்டும் என ஆயுர்வேத மருத்துவர் கூறுகின்றார்.
அத்துடன், கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்படாத ஒருவர் காலை மற்றும் மாலை வேளைகளில் ஒரு தேநீர் கரண்டி வீதம் 2 நாட்கள் அருந்த வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
கோவிட்-19 தொற்று ஏற்பட்ட ஒருவர், இந்த மருந்தை உரிய வகையில் அருந்தினால், நான்கே நாட்களில் வைரஸ் தொற்றை குணப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இந்த நிலையில், வத்துபிட்டிவல தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய சிலருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டதுடன், மருந்து அருந்திய பின்னர் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மூலிகை மருந்து தொடர்பிலான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்ற பின்னணியில், குறித்த மருந்தை, மருத்துவர் ( டிசம்பர் 8) முதல் தடவையாக மக்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்திருந்தார்.
இந்த மருந்தை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றாலும், குறித்த மூலிகை மருந்து விநியோகிக்கப்படுகின்றது என வெளியான தகவலை அடுத்து, நேற்று முதலே மக்கள் அவரது வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
பெருந்திரளான மக்கள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஒன்று திரண்டமையினால், பாதுகாப்பு பிரிவினருக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாத்திரமன்றி, போலீஸார், ராணுவத்தினர் என பாதுகாப்பு பிரிவினரும் இந்த மருந்தை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றதை அவதானிக்க முடிந்தது.
இறுதி தீர்மானத்தை எட்ட முடியாது – ஆயுர்வேத திணைக்களம்
கொரோனா வைரஸ் தொற்றை இல்லாது ஒழிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மூலிகை மருந்து தொடர்பிலான பரிசோதனைகள் நிறைவு பெறவில்லை என ஆயுர்வேத திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த பரிசோதனைகள் நிறைவு பெறாமையினால், குறித்த மருந்து தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்ட முடியாது எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
குறித்த பரிசோதனைகளுக்காக ஆயுர்வேத திணைக்களத்தின் வைத்திய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது
இந்த குழுவினர் நடத்தும் ஆய்வுகளின் பின்னரே இறுதித் தீர்மானமொன்றை எட்ட முடியும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
‘பொதுமக்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் பொறுப்பேற்க போவதில்லை’
தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டுள்ள மூலிகை மருந்தானது சட்டவிரோதமானது எனவும், இந்த மூலிகை மருந்தினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தாம் பொறுப்பேற்க போவதில்லை எனவும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஆயுர்வேதத் துறையில் பதிவு செய்யப்படாத மருந்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு ஆயுர்வேத உற்பத்தியாக விநியோகிக்கப்பட்டுள்ள இந்த மருந்து குறித்து, அரசாங்கம் சாதகமான கருத்திற் கொண்டு, அது குறித்து செயற்படவுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
குறித்த மருந்தின் ஊடாக சாதாகமான பெறுபேறுகள் கிடைக்குமாக இருந்தால், தற்காலிக தீர்வாக குறுகிய காலத்திற்கு அந்த மருந்தை பயன்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.