தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் கூராய்வு முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது கன்னத்தில் ஏற்பட்ட கீறல், சித்ராவின் நகக்கீறல்கள்தான் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, சித்ராவின் உடல், சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் உடல்கூராய்வு முடிந்து பிற்பகலில் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் அவரது ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரது உடலை பார்த்து கதறி அழுத சித்ராவின் தாயார் விஜயா, “எனது மகளை அடித்துக் கொன்று விட்டார்கள். அவர் தற்கொலை செய்து கொள்ளக்கூடியவர் அல்ல” என்று தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 19ஆம் தேதி ஹேமந் தைபதிவுத்திருமணம் செய்து கொண்ட சித்ரா, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முறைப்படி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.

நடிகை சித்ராவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரு வாரங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஹேமந்த் என்பவருடன் பதிவுத்திருமணம் நடந்ததாக கூறப்பட்டதையடுத்து, புதன்கிழமை அதிகாலையில் சித்ரா உயிரிழந்த சம்பவத்தை வருவாய் கோட்டாட்சியர் விசாரித்தார்.

2 மணி நேர உடல்கூராய்வு

இதற்கிடையே, சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சித்ராவின் உடல் கூராய்வு பரிசோதனை, வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரமாக நடந்த இந்த பிரேத பரசோதனையின் முடிவில், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது மரணம் தொடர்பாக ஏற்கெனவே சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் இரண்டாவது நாளாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பிரேத பரிசோதனை முடிவுகள் தெரிய வந்துள்ளதால், அவரை தற்கொலைக்கு தூண்டியது யார், அதன் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

சம்பவ நாளில் சித்ரா இருந்த அறையை முதலில் அணுகியவர் என்ற வகையில் ஹேமந்த், அவர்கள் தங்கியிருந்த விடுதி ஊழியர், நிர்வாகி உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து, சித்ரா மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தாரிடமும் ஹேமந்த் குடும்பத்தாரிடமும் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சித்ராவின் செல்பேசி பறிமுதல் செய்யப்பட்டு அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்தனர். அதில், அவர் தனது தாயிடமே கடைசியாக பேசியதாக தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனவே, அப்போது சித்ரா என்ன பேசினார், அவரது மன நிலை எப்படி இருந்தது, சித்ராவின் நண்பர்கள் யார், படப்பதிவு பகுதியில் அவர் என்ன மனநிலையில் இருந்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

29 வயதாகும் சித்ராவின் மரணம், தமிழ் சின்னத்திரை உலகில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டதாக உடல் கூராய்வில் தெரிய வந்துள்ளதால், அடுத்த கட்ட விசாரணை நடைமுறைகளை காவல்துறையினர் தொடங்கியிருக்கிறார்கள்.

சித்ரா, ஹேமந்த் ஜோடி திருமணம் பதிவு செய்யப்பட்டிருக்கும் வேளையில், ஹேமந்தின் வீட்டில் தங்காமல் சித்ரா ஏன் விடுதியில் தங்க நேர்ந்தது, அப்படியென்றால் ஹேமந்தின் வீட்டில் சித்ராவுக்கு ஏதேனும் பிரச்னை நிலவியதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இந்த ஜோடியின் திருமணத்தை முறைப்படி அடுத்த ஆண்டு நடத்த இரு வீட்டாரும் தீர்மானித்திருந்ததாகவும் அதை வெகு விமரிசையாக நடத்த விரும்பிய சித்ராவுக்கு நிதி பிரச்னை இருந்ததாகவும் காவல்துறை விசாரணையில் ஹேமந்த் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால், தொழிலதிபராக ஹேமந்த் இருக்கும்போது, சித்ராவுக்கு நிதி பிரச்னை எப்படி வந்தது என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளதாகவும், சித்ராவுடன் கடைசி நிமிடங்களை கழித்தவர் என்ற வகையில் அவரிடம் நடத்தப்படும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளாதகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply