நாட்டில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில் இன்று கொரொனா  தொற்றாளர்களின் தொத்த எண்ணிக்கை 446 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, இறுதியாக இருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது,

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 66 வயதான பெண்ணொருவரும், வெலிகம பகுதியைச் சேர்ந்த 54 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொவிட் தொற்று உறுதியாகிய நிலையில், அவர் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

வெலிகம பகுதியைச் சேர்ந்த பெண், டுபாயிலிருந்து வருகைத் தந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட குறித்த பெண், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நாளாந்தம் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய மாகாணத்தில் கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹட்டன் – நோர்வூட் பாடசாலையில் ஆசிரியர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதையடுத்து , அப்பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 109 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இன்று வியாழக்கிழமை இரவு 9 மணி வரை 446 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் 279 பேர் போலியகொடை கொத்தணியுடனும் , 21 பேர் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடைவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 544 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 22 261 பேர் குணமடைந்துள்ளனர்.

அதே வேளை 7970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் எண்ணிக்கைக்கமைய இரண்டாவது அலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 816 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் தொற்று அறிகுறிகளுடன் 584 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

புதனன்று பதிவான மரணங்கள்

நேற்று புதன்கிழமை இரு கொரோனா மரணங்கள் பதிவாகின.

கொழும்பு முகத்துவாரத்தைச் சேர்ந்த பிறந்து 20 நாட்களேயான ஆண் குழந்தை கொவிட் தொற்றுடன் நிமோனியா நிலைமை தீவிரமடைந்தமையால் கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

கொழும்பு 10 ஐ சேர்ந்த 62 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றுடன் நிமோனியா நிலைமை ஏற்பட்டதால் முல்லேரியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மத்திய மாகாணத்தில் அதிகரிக்கும் தொற்று

நாட்டில் கொவிட் பரவல் முதலாம் அலையில் கொழும்பு உள்ளிட்ட சில மாவட்டங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருந்தன. எனினும் தற்போது மத்திய மாகாணத்தில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அதற்கமைய ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்னர் கண்டியில் 921 தொற்றாளர்களும் , நுவரெலியாவில் 206 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நோர்வூட் பாடசாலை

ஹட்டன் – நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 109 பேருக்கு தொற்று ஏற்படவில்லை என முடிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புதன்கிழமை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர். மேற்கொண்டவர்களில் 37 பேர் ஆசிரியர்கள் எனவும் ஏனையவர்கள் மாணவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, 30 மாணவர்களுக்கான பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply