• கொழும்பில் 19ஆம் திகதி கூடுகின்றது கூட்டமைப்பு
• தமிழரசின் அரசியல் பீடத்தினை கூட்ட மாவை முயற்சி
• ‘சமஷ்டி’ பதம் தேவையென ரெலோ, புளொட் கிடுக்குப்பிடி
• ஒருங்கிணைந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகள் காத்திருப்பு
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக உத்தேச வரைபினை அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்திற்கும் முன்மொழிவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழுவானது தமது உத்தேச வரைபினை தயாரிப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை அறியும் பொருட்டு சமர்ப்பணங்களை நவம்பர் மாத இறுதிக்குள் செய்யுமாறு பகிரங்க அறிவித்தலொன்றை நீதி அமைச்சின் ஊடாக ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் வெளியிட்டிருந்தது.
அதன் பின்னர் கொரோனா நெருக்கடிகள் காரணமாக டிசம்பர் 31ஆம் திகதி வரையில் சமர்ப்பணங்களைச் செய்வதற்காக கால எல்லையை நீடித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் அசியல் கட்சிகளின் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய தரப்புக்கள் எவையும் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கவில்லை.
ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பங்கேற்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவு தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த முன்மொழிவானது எதிர்வரும் 19ஆம் திகதி கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பங்கேற்புடன் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தக் கலந்துரையாடலுக்கான சந்திப்பு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வெளியில் ஒருங்கிணைந்துள்ள அரசியல் கட்சிகள் புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளைச் செய்வதற்கு ஐவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
இந்தக்குழுவானது தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம், வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டம், மற்றும் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி உருவாக்கிவரும் முன்மொழிவு ஆகியவற்றை உள்ளீர்த்து அதிலிருந்து மேம்பட்டதான இறுதி முன்மொழிவு வரைவொன்றை தயாரிப்பதையே இலக்காக கொண்டுள்ளது.
இருந்தபோதும், இந்தச் செயற்பாடு தற்போது வரையில் ஆரம்பத்த இடத்திலேயே உள்ளது. காரணம், மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளினதும் இணக்கத்துடனான வரைபொன்றையே சமர்ப்பதற்கு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறிப்பாக கூட்டமைப்பின் முன்மொழிவுகளை ஏனைய தரப்புக்களை ஏற்கச் செய்தல், ஏனைய தரப்புக்களின் யோசனைகளை கூட்டமைப்பின் முன்மொழிவில் உள்ளீர்த்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றார்.
இந்தவிடயம் சம்பந்தமாக உறுதியான தீர்மானமொன்றை எடுப்பதற்காக கடந்த 11ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடத்தினை கூட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்.
எனினும், அது சாத்தியமாகாத நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் தனக்கு கால அவகாசத்தினை வழங்குமாறு ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளிடத்தில் கோரியுள்ளார்.
இவ்வாறான நிலையில் இந்தச் செய்தி அச்சுக்குச் செல்லும் வரையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் பீடத்தினை கூட்டுவது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் 19ஆம் திகதி புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை இறுதி செய்வதற்கான கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற வகையில் மாவை.சோ.சேனாதிராஜாவும் தற்காலிக செயலாளரான வைத்தியர்.ப.சத்தியலிங்கமும் பங்கேற்கவுள்ளமையால் அதற்கு மறுதினமான 20ஆம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கு அதிக சந்தர்ப்பங்கள் இருப்பதாக அக்கட்சியின் உயர்மட்டத்தக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட்டும். ரெலோவும், புதிய அரசியலமைப்பிற்கு கூட்டமைப்பால் தற்போது சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ‘பிரிக்க முடியாததும், பிளவு படுத்தப்பட முடியாததுமான ஐக்கிய இலங்கையில், தமிழர்களின் தயாகமான இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டிக் கோட்பாட்டின் அடிப்படையிலான சுயநிர்ணயத்துடன் கூடியதான அதியுச்சமான அதிகாரப்பகிர்வு” மேற்கொள்ளப்படவேண்டும் என்பது நேரடியாகவே வலியுறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஒருங்கிணைந்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளில் விக்னேஸ்வரன் தரப்பு தனியான முன்மொழிவொன்றை தயாரித்து வரும் நிலையில், ஈ.பி.ஆர்.எல்.எப்.பும். முன்மொழிவொன்றை தயார் நிலையில் வைத்திருக்கின்றது.
தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் தீர்மானத்துடன் இணங்கிச் செல்ல முடியாத நிலைமை ஏற்படுமாயின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக அல்லது தனித்தனியான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு பின்னிற்கப்போவதில்லை என்றும் அவை கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.