காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழங்கால கொளம்பேஸ்வரர் கோயிலை இடித்தபோது, கருவறைக்கு அருகில் இருந்து பல்வேறு வடிவங்களில் தங்கம் கிடைத்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் (கி.பி. 1089)கட்டப்பட்டதாக கூறப்படும் கொளம்பேஸ்வரர் கோவில் உள்ளது.
சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய கற்கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து டிசம்பர் 10ஆம் தேதியன்று இதற்கான திருப்பணி பூஜை பாலாலயம் ஆகியவை நடைபெற்றன. இதற்குப் பிறகு கோயில் சிறிது சிறிதாக இடிக்கப்பட்டது.
இந்நிலையில், கோயில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றியபோது அதன் கீழ் துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டை ஒன்று இருந்தது.
அதைப் பிரித்துபார்த்தபோது, ஏராளமான தங்க ஆபரணங்கள், கவசங்கள் ஆகியவை இருந்தன. இதையடுத்து சிலர் வருவாய் துறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து அந்தத் தங்கத்தை பறிமுதல் செய்வதற்காக வருவாய்த் துறையினர் அங்கு வந்தனர். ஆனால், ஊர்மக்களும் விழாக் குழுவினரும் அந்தத் தங்கத்தை கொடுக்க மறுத்தனர்.
அந்தத் தங்கத்தை எடைபோட்டபோது, சுமார் 565 கிராம் இருந்தது தெரியவந்தது. இந்தத் தங்கம் நாயக்கர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும், முழுமையான ஆய்வுக்குப் பிறகே, எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்பது தெரியவரும்.
மேலும், மிகப் பழமையான இந்தக் கோயிலை யார் அனுமதியும் பெறாமல் இடித்தது எப்படி என்பது குறித்தும் வருவாய்த் துறையினர் விசாரணை செய்து வருகினறனர்.
வேறு யாராவது அங்கு கிடைத்த தங்கத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட நகைகள் அனைத்தும் சுவாமி சிலைகளுக்கு திரு ஆபரணங்களாக சாற்றப்படும் நகைகள் என நம்பப்படுகிறது.
இந்த தங்கப் புதையலை, அரசிடம் ஒப்படைக்க அந்த ஊர் மக்கள் மறுத்துவரும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இவற்றை ஒப்படைக்கவில்லையென்றால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை எச்சரித்திருக்கிறது.
மேலும் இந்தக் கோயிலில் இருந்த திருவுருவச் சிலைகள் எங்கே என்றும் விசாரணை செய்யப்பட்டுவருகிறது.