1971 டிசம்பர் 12ம் தேதி ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டபோது, பாகிஸ்தான் பிரதிநிதிக் குழுவின் தலைவர் ஜுல்ஃபிகர் அலி பூட்டோ மற்றும் ஐநாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி ஜார்ஜ் புஷ் சீனியர் ஆகியோரை எதிர்கொள்வதற்காக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங்கை அங்கு அனுப்பிவைத்தார்.
ஸ்வரண் சிங் பாகிஸ்தானை கிண்டல் செய்யும்விதமாக, பூட்டோ இப்போதும் இந்தியாவை வென்று டெல்லியை அடைய வேண்டும் என்று கனவு காண்கிறாரா என்ன? என்று கேட்டார்.
“நிக்சன் மற்றும் கிஸ்ஸிஞ்சரின் அறிவுறுத்தல்களின் பேரில் போரில் இந்தியாவின் நோக்கங்கள் குறித்து புஷ் கேள்வி எழுப்பியபோது ஸ்வர்ண் சிங், வியட்நாமில் அமெரிக்காவின் நோக்கங்கள் என்ன என்று பதில் கேள்வி கேட்டார்,” என்று கேரி ஜே பாஸ் ,’ தி ப்ளட் டெலிக்ராம்’ என்ற தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சோவியத் யூனியன், பாதுகாப்பு கவுன்சிலின் போர்நிறுத்த தீர்மானத்தை மூன்றாவது மற்றும் கடைசி முறையாக வீட்டோ (ரத்து அதிகாரம்) செய்ததன் மூலம் இந்தியாவை காப்பாற்றியது.
இது கிஸ்ஸிஞ்சரை மிகவும் கோபப்படுத்தியது, அடுத்த சில நாட்களில் சோவியத் யூனியனுடன் நடக்கவிருந்த உச்சிமாநாட்டை ரத்து செய்யப்போவதாக நிக்சனிடம் கேட்காமலேயே அவர் மிரட்டினார். (ஹென்றி கிஸ்ஸிஞ்சர், வயிட் ஹவுஸ் டயரீஸ், பக்கம் 790)
யுஎஸ்எஸ் எண்டர்பிரைஸை வங்காள விரிகுடா அனுப்ப முடிவு
இதற்கிடையில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் தூதர்கள் ஒருவரை ஒருவர் அவமதிக்க முனைந்தபோது, (அப்போதைய) கிழக்கு பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் சாக்கில், நிக்சன் மற்றும் கிஸ்ஸிஞ்சர், அமெரிக்க கடற்படை கப்பல் யுஎஸ்எஸ் எண்டர்ப்ரைஸை உடனடியாக வங்காள விரிகுடாவை நோக்கி அனுப்ப முடிவு செய்தனர்.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அதற்கு முந்தைய நாளே எல்லா அமெரிக்க குடிமக்களும் டாக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைவில் மலாக்கா வளைகுடாவிலிருந்து வங்காள விரிகுடாவிற்குள் நுழையும் என்று பூட்டோவுக்கு கிஸ்ஸிஞ்சர் தெரிவித்தார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசிய பிரிவிலிருந்து பொதுப் பார்வைக்கு மாற்றப்பட்ட (declassified) ஒலி நாடாக்கள் தெரிவிக்கின்றன.
இந்திய துருப்புக்களை திரும்பப் பெறுவது குறித்து ஒரு உடன்பாடு வரும் வரை தொடர்ந்து இந்தியாவை நோக்கி நகரப்போவதாக நிக்சன் உறுதியாக கூறினார். (FRUS VOL E 7).
அணு சக்தியால் இயங்கும் அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப்பிரிவு எண்டர்ப்ரைஸில், ஏழு டெஸ்ட்ராயர் எனப்படும் நாசகரக் கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் கேரியர் யுஎஸ்எஸ் திரிப்போலி மற்றும் ஒரு எண்ணெய் கப்பல் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இந்த கப்பல்களின் தளபதியாக அட்மிரல் ஜான் மெக்கெய்ன் ஜூனியர் இருந்தார். பின்னாளில் அவர் மகன் மூன்றாவது ஜான் மெக்கெய்ன், அரிசோனாவின் செனட் உறுப்பினராகவும், 2008 இல் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகவும் ஆனார்.
“இந்தியாவின் கடற்படையை ஒப்பிடும்போது அமெரிக்க கடற்படை மிகப் பெரியது. ஏவுகணை நெருக்கடியின் போது எண்டர்பிரைஸ் கியூபாவை முற்றுகையிட்டது.
இந்தியாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்தை விட அது குறைந்தபட்சம் ஐந்து மடங்கு பெரியது.
எண்டர்பிரைஸ் படைப்பிரிவில் இடம் பெற்றிருந்த இன்னொரு கப்பலான திரிப்போலி கூட விக்ராந்தை விட பெரியதாக இருந்தது.
அணுசக்தியால் இயங்கும் எண்டர்ப்ரைஸ் மீண்டும் எரிபொருளை நிரப்பும் தேவை இல்லாமலேயே உலகம் முழுக்க பயணம் செய்யக்கூடியது.
மறுபுறம், இந்தியாவின் ஒரே விமானம் தாங்கி கப்பலான விக்ராந்தின் கொதிகலன்கள் கூட சரியாக வேலை செய்யவில்லை,” என்று ‘பிளட் டெலிகிராம்’ புத்தகத்தின் ஆசிரியர் கேரி பாஸ் எழுதியுள்ளார்.
பணி தெளிவாக இல்லை
ஆனால், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைப்பார்த்து சோவியத் யூனியன் அமைதியாக இருக்கவில்லை.
“டிசம்பர் முதல் வாரத்தில், சோவியத் யூனியனின் அழிக்கும் திறன் வாய்ந்த கண்ணிவெடி அகற்றும் கப்பல், மலாக்கா வளைகுடாவிலிருந்து இந்தப் பகுதியை அடைந்தது.
1972 ஜனவரி முதல் வாரத்தில் அமெரிக்க கப்பல் அங்கிருந்து வெளியேறும் வரை , சோவியத் கடற்படை கப்பல், அதன் பின்னால் இருந்தது.
பிற்காலத்தில் எண்டர்பிரைஸின் கேப்டன் அட்மிரல் ஜும்வால்ட் நவம்பர் 1989 இல் யுனைடெட் சர்வீஸ் இன்ஸ்டிடியூட்டில் உரை நிகழ்த்த வந்தார்.
1971 ஆம் ஆண்டில் ஏழாவது கடற்படை பிரிவை இந்தியப் பெருங்கடலுக்கு அனுப்பியதன் நோக்கம் என்ன என்று கேட்டபோது “அதன் நோக்கம் என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை” என்று அவர் பதிலளித்தார்.
“நண்பர்களுக்கு நெருக்கடிக் காலங்களில் உதவுவதில் இருந்து அமெரிக்கா பின்வாங்காது” என்று உலகிற்கு காட்டுவதற்காக இது நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார்.
ஓர் இந்திய கடற்படைக் கப்பலை நாம் எதிர்கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்று அட்மிரல் ஜும்வால்ட் கிஸ்ஸிஞ்சரிடம் கேட்டிருந்தார்.
நீங்கள்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்று அதற்கு கிஸ்ஸிஞ்சர் பதில் அளித்தார்,” என்று அட்மிரல் எஸ்.எம்.நந்தா தனது சுயசரிதையான ‘தி மேன் ஹூ பாம்ட் கராச்சியில்’ எழுதியுள்ளார்.
அட்மிரல் நந்தாவிடம் ஆலோசனை நடத்திய இந்திரா காந்தி
அட்மிரல் ஜும்வால்ட் உரைக்குப் பிறகு, அட்மிரல் நந்தா அவரை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.
வங்காள விரிகுடாவுக்கு நாங்கள் வந்த செய்தி கிடைத்ததும் அதை நீங்கள் எப்படி எடுத்துக்கொண்டீர்கள்? என்று ஜும்வால்ட் நந்தாவிடம் கேட்டார்.
‘இந்த செய்தி பரவியவுடன் எங்கள் பிரதமர் என்னை அழைத்து, கடற்படை இது குறித்து என்ன செய்யப் போகிறது என்று கேட்டார்.
அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக போரை அறிவிக்கும் என்று நினைக்கிறீர்களா? என்று நான் அவரிடம் கேட்டேன். ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று இந்திரா காந்தி வினவினார்.
அவர்கள் நம் கப்பல்களை தாக்கினால், அது போர் நடவடிக்கை தான் என்று நான் பதிலளித்தேன். பின்னர் அவர் இதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.
நான் சொன்னேன், மேடம், அவர்கள் நம் மீது நெருக்குதல் கொடுக்க முயற்சிக்கிறார்கள். நாம் உறுதியாக நிற்க வேண்டும்.
ஒரு அமெரிக்க கப்பலை எதிர்கொண்டால் அறிமுகங்களை பரிமாறிக்கொள்ளுங்கள், அந்தக் கப்பலின் கேப்டனை உங்கள் கப்பலில் மது அருந்த அழையுங்கள் என்று நான் நமது கப்பல்களின் கேப்டன்களுக்கு உத்தரவிடுகிறேன் என்று சொன்னேன்.
இதைக் கேட்டு பிரதமர் சிரித்தார். எனது இந்தச்செய்தி அனைத்து கேப்டன்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று துணை அட்மிரல் கிருஷ்ணனுக்கு அறிவுரை வழங்கினேன்.
இதற்கிடையில், சோவியத் யூனியன் அதன் செயற்கைக்கோள்களிலிருந்து அமெரிக்க கப்பல்களின் இயக்கம் குறித்து கண்காணித்துக்கொண்டிருந்தது.
அது குறித்த முழுமையான தகவல்களை எங்களுக்கு அளித்து வந்தது,’ என்று அட்மிரல் நந்தா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கடற்படையை தாக்க அமெரிக்கா நினைக்கவில்லை
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில், இந்திரா காந்தி டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
பாகிஸ்தானின் எந்த விமானமும் அந்த பொதுக் கூட்டத்தை குறிவைக்காமல் இருக்கும் பொருட்டு இந்திய விமானப்படையின் விமானம் , கூட்டம் நடந்துகொண்டிருந்த இடத்திற்கு மேலே சுற்றிக்கொண்டிருந்தது.
“சில அன்னிய சக்திகள் நம்மை அச்சுறுத்த முயற்சிக்கின்றன, அதற்கு ஒரு பொருத்தமான பதிலடி தரப்படும்” என்று அமெரிக்காவையும் சீனாவையும் பெயர் குறிப்பிடாமல் இந்திரா காந்தி ஆவேசமாக பேசினார்.
அந்த உரை மிகவும் ஆவேசமாக இருந்தது. ஆகவே அவரது பத்திரிகை தொடர்பு அலுவலகம் அந்த உரையை எழுத்துவடிவில் வெளியிட்டபோது அதன் சில பகுதிகளை வெட்டி நீக்கியது.
இதற்கிடையில், அமெரிக்காவின் ஏழாவது கடற்படைபிரிவு வங்காள விரிகுடாவை நோக்கி நகர்வதாக பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கான் அறிந்ததும், கராச்சியைப் பாதுகாக்க அவற்றை அனுப்புமாறு நிக்சனை கேட்டுக்கொண்டார்.
“எந்த நேரத்திலும் இந்தியாவுடன் அமெரிக்கா சண்டையைத் தொடங்கலாம் என்ற தோற்றத்தை அடிக்கடி கொடுத்தாலும் கடற் போரை துவக்கும் எண்ணம் நிக்சனுக்கு இல்லை.
சோவியத் யூனியன் இந்தியாவை போர் நிறுத்தத்துக்கு நெருக்குதல் செய்வதற்காக, எண்டர்பிரைஸை அவர் ஒரு மிரட்டலாக பயன்படுத்தினார்.
ராணுவ ரீதியாக போரில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று தனிப்பட்ட முறையில், கிஸ்ஸிஞ்சர் சொல்லியிருந்தார்,” என்று பேட்ரிக் மொய்னிஹன் தனது ‘எஸ்ட்ரேஞ்ட் டெமாக்ரச்சீஸ் இண்டியா அண்ட் யுனைடெட் ஸ்டேட்ஸ் ‘ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
வியட்நாம் போர் காரணமாக அமெரிக்க தலையீடு சாத்தியமில்லை
மறுபுறம், கடற்படை புலனாய்வு இயக்குனர் அட்மிரல் மிஹிர் ராய், இந்திரா காந்திக்கு அளித்த விளக்கத்தில், அமெரிக்காவின் ஏழாவது கடற்படைப்பிரிவு இந்தியாவைத் தாக்கக்கூடும், ஆனால் வியட்நாம் போர் தொடர்வதால் அதன் சாத்தியக்கூறு குறைவு என்று கூறினார்.
பாகிஸ்தான் மீதான இந்திய கடற்படையின் முற்றுகையை உடைக்க முயற்சி செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“அமெரிக்கர்கள் சிட்டகாங் வரை வரக்கூடும் என்று நான் பயந்தேன். நமது நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின்மூலம் எண்டர்பிரைஸ் கப்பலை நீரடி ஏவுகணை மூலம் தாக்கினால் அந்த கடற்படை பிரிவின் வேகம் ஓரளவு குறையும் என்று நினைத்தோம்.
சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் மீதான நமது கடற்படை தாக்குதல்களை தீவிரப்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வு என்று நாங்கள் கண்டுபிடித்தோம்,” என்று இந்திய கடற்படையின் கிழக்கு கமாண்டின் தலைவரான துணை அட்மிரல் என்.கிருஷ்ணன் தனது ‘நோ வே பட் சரண்டர்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வியட்நாமில் சிக்கியுள்ள அமெரிக்கா இந்தியாவுக்கு எதிரான போருக்கு தனது வீரர்களை அனுப்புவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பதை இந்தியத் தலைமை உணர்ந்திருந்தது.
“அமெரிக்கர்கள் ஒரே ஒரு முறை சுட்டிருந்தாலும் அல்லது வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்ததைத் தவிர வேறு எதையாவது செய்திருந்தாலும், மூன்றாம் உலகப் போர் தொடங்கியிருக்கலாம்.
ஆனால் உண்மையாகச்சொன்னால், ஒரு முறை கூட என் மனதில் இந்த பயம் இருக்கவில்லை,” என்று இந்திரா காந்தி பின்னர் இத்தாலிய பத்திரிகையாளர் ஓரியானா ஃபலாச்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், அமெரிக்கா அவ்வாறு செய்தால் அது எத்தனை ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்குமாறு இந்தியா சோவியத் யூனியனிடம் கூறியது.
அதே நேரத்தில், பங்களாதேஷ் மற்றும் மேற்கு பாகிஸ்தான் நிலப்பரப்பின் மீது இந்தியாவுக்கு எந்த ஆசையும் இல்லை என்று சோவியத் பிரதமர் அலெக்ஸி கோசிஜினுக்கு உறுதியளிக்குமாறு, பிரத்யேகமாக மாஸ்கோவுக்கு அனுப்பப்பட்ட இந்திய தூதர் டி.பி. தாரிடம், பிரதமரின் முதன்மைச்செயலர் பி.என்.ஹக்சர் கேட்டுக்கொண்டார்.
நேரு நினைவு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஹக்ஸரின் ஆவணங்களில், ” அமெரிக்காவை போரில் தலையிட சோவியத் யூனியன் அனுமதிக்காது என்று இந்தியாவுக்கான சோவியத் தூதர் உறுதியளித்தார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு பாகிஸ்தானில் நுழையப்போவதாக அமெரிக்காவிலிருந்து கசிந்த செய்தி
இதற்கு நேர்மாறாக, கிழக்கு பாகிஸ்தானின் கடற்கரைகளில் ஊடுருவ ஒரு படையணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மரைன் பட்டாலியன்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு மையங்கள் மீது குண்டு வீச எண்டர்ப்ரைஸுக்கு நிக்சன் அனுமதி கொடுத்துள்ளதாகவும் அமெரிக்காவிலிருந்து தகவல்கள் கசிந்தன.
அமெரிக்கத் துருப்புக்கள் கடற்கரை வழியாக கிழக்கு பாகிஸ்தானுக்குள் நுழைவதற்கான சாத்தியம் குறித்து இந்திய தூதர் லக்ஷ்மிகாந்த் ஜா ஒரு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியிடம் கேட்டபோது அவர் அதை தெளிவாக மறுக்கவில்லை.
இதன் காரணமாக மிகவும் மனவுளைச்சலுக்கு ஆளான இந்திய தூதர் அமெரிக்க தொலைக்காட்சியில் சென்று நிக்சன் நிர்வாகத்தின் நோக்கங்களை வன்மையாக குறைகூறினார்.
நிக்சன் மற்றும் கிஸ்ஸிஞ்சர் ஆகிய இருவருக்குமே இந்தியாவை துன்புறுத்துவது குதூகலத்தை தந்தது என்று பின்னர் ரகசிய பிரிவிலிருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட (declassified) வெள்ளை மாளிகை ஒலிநாடாக்கள் வெளிப்படுத்தின.
“வங்காள விரிகுடாவில் தரையிறங்க திட்டமிட்டுள்ளோம் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக இந்திய தூதர் கூறுகிறார்.
இது எனக்கு ஒரு நல்ல விஷயம்” என்று கிஸ்ஸிஞ்சர் கூறுகையில், “ஆம், அவர்கள் அதை எண்ணி பயப்படுகிறார்கள், ஒரு கடற்படை பிரிவை அனுப்பும் முடிவு நல்ல நடவடிக்கை,” என்று நிக்சன் சொன்னார்.
இந்த நிகழ்வுகளுக்கு இடையே, அமெரிக்க கடற்படை கப்பல்கள் சிட்டகாங்கிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவிலேயே இருந்தன.
அந்த பகுதியில் நான்கு அல்லது ஐந்து சோவியத் கப்பல்கள் இருப்பதை பென்டகன் ஒப்புக் கொண்டது. ஆனால் எண்டர்பிரைஸ் , அந்த கப்பல்களை அல்லது எந்த இந்திய அல்லது பாகிஸ்தான் கப்பல்களையும் எதிர்கொள்ளவில்லை.
ரஷ்ய கடற்படையில் ஒரு அழிப்பான், ஒரு அதிவேக போர் கப்பல் மற்றும் இரண்டு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்தன. அட்மிரல் விளாடிமிர் கிராக்லியாக்கோவ் அவற்றின் தளபதியாக இருந்தார்.
“கிராக்லியாக்கோவ் ரஷ்ய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்கர்கள் முன்னேறினால், அவர்களைச் சூழ்ந்து கொள்ள நாங்கள் நினைத்தோம்.
எனது நீர்மூழ்கிக் கப்பல்களின் ஏவுகணைக் குழாயைத் திறந்து எண்டர்பிரைஸின் முன்னால் செல்ல நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் மேலும் இரண்டு ரஷ்ய கப்பல்கள் இந்த கடற்படை பிரிவில் இணைந்தன,” என்று தனது ‘வார் இஸ் போரிங்’ என்ற புத்தகத்தில், செபாஸ்டியன் ராப்ளின் எழுதியுள்ளார்.
சரணடைவால் மாறிய எண்டர்ப்ரைசின் திசை
“அந்த நாட்களில் கல்கத்தாவில் அமெரிக்கர்கள் குண்டுகளை வீசப்போவதாக வதந்தி பரவியது . அவர்கள் அதை செய்யட்டும், முன்னைவிட சிறப்பாக கல்கத்தாவை மீண்டும் உருவாக்க நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் நகைச்சுவையாகச் சொல்லிக்கொண்டிருந்தோம்.
எண்டர்பிரைஸ் இடைவிடாமல் பயணித்திருந்தால், அது டிசம்பர் 16 காலை கிழக்கு பாகிஸ்தான் கடற்கரையை அடைந்திருக்கலாம்,” என்று முன்னாள் இந்திய தூதர் அருந்ததி கோஷ் தெரிவித்தார்.
ஆனால் இதற்கு ஒரு நாள் முன்னதாக, போர் நிறுத்தத்தை விரும்புவதாக பாகிஸ்தான் ஜெனரல் நியாஸி, இந்திய ஜெனரல் சாம் மானேக்க்ஷாவுக்கு ஒரு செய்தியை அனுப்பினார் .
பாகிஸ்தான் சரணடைய தயாராக உள்ளது என்று இந்தியாவில் இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் சரணடைந்தவுடன், கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இலங்கை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது எண்டர்பிரைஸ்.