இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் மறக்க முடியாத டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒன்றாக தற்போதைய டெஸ்ட் போட்டியின் இரண்டாம் இன்னிங்ஸ் இருக்கப் போகிறது. அதற்கு காரணம் இந்தியாவின் மோசமான பேட்டிங்.
21.2 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 36 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது இந்தியா.
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான்.
பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3வது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்தியா மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
முகமது ஷமி காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனதால் இந்தியா ஆட்டத்தைத் தொடர முடியவில்லை.
எனவே இந்தியா 10 விக்கெட்டுகளையும் இழப்பதற்கு முன்பே இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸை இவ்வளவு குறைவான ரன்களில் முடித்துக்கொள்வது இதுவே முதல்முறை.
முன்னதாக 1974-ம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை 42 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதைவிட குறைவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 46 ஆண்டுகளுக்கு பிறகு அப்படி ஒரு மோசமான ஆட்டத்தை இந்தியா இன்று வெளிப்படுத்தியுள்ளது.
1955ஆம் ஆண்டு ஆக்லாந்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 26 ரன்கள் எடுத்ததே இதுவரை டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் எடுக்கப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது.
மூன்று பேர் டக் அவுட்
ஆட்டத்தின் முதல் நாளன்று டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்ய தேர்வு செய்தது.
முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இரண்டாவதாக பேட் செய்த ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது மூன்றாவது நாளான இன்று தனது இரண்டாவது இன்னிங்சை பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸ்திரேலியாவுக்காக பந்து வீசிய ஜோஸ் ஹசல்வூட் ஐந்து விக்கெட்டுகளையும், பேட் க்யூமின்ஸ் நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
புஜாரா, ரகானே அஸ்வின் ஆகிய மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர்.
இந்தியாவுக்காக களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஏற்கனவே முடிந்துள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளன.
தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
மயங்க் அகர்வால் இன்று எடுத்த ஒன்பது ரன்கள்தான் இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
மயங்க் அகர்வால் இன்றைய ஆட்டத்தில் 1000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார். தனது 19வது டெஸ்ட் இன்னிங்சில் இதை எட்டியுள்ள மயங்க் அகர்வால், 1000 டெஸ்ட் ரன்களை வேகமாகக் கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
14 இன்னிங்சில் கடந்த வினோத் காம்ப்ளி மற்றும் 18 இன்னிங்சில் கடந்த செதேஸ்வர் புஜாரா இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.