முல்லைத்தீவு – வவுனத்தீவு குளத்தில் வீழ்ந்து காணாமல் போயுள்ள இரண்டு வயது பெண்பிள்ளை உட்பட இருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனத்தீவு குளத்தில் இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று குளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது கெப் வாகனத்தின் சாரதியான 38 வயதுடைய நபரும் , இரண்டு வயதுடைய பெண்பிள்ளை ஒன்றும் 12 வயதுடைய ஆண்பிள்ளை ஒன்றும் குளத்தில் வீழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மல்லாவி – செல்வப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு குளத்தில் வீழ்ந்துள்ளதுடன், சம்பவத்தின் போது 12 வயதுடைய சிறுவனை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

சிறுவன் ஆபத்தான நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணமல் போயுள்ள இருவரையும் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிக வேகத்தின் காரணமாகவே கெப்  ரக வாகனம் குளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகைகாலப் பகுதிகளில் வாகன விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் நாம் பல்வேறு எச்சரிக்கைகளை செய்து வருகின்ற போதிலும் ஒரு சிலர் இன்னமும் அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருக்கின்றனர். அதன் காரணமாகவே இது போன்ற விபத்துகள் இடம்பெறுகின்றன. அதனால் தொடர்ந்தும் விபத்துகள் இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Share.
Leave A Reply