இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை மாலைத்தீவில் அடக்கம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
கொழும்பில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கோவிட்-19 தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான அலுவல்பூர்வ கோரிக்கை இதுவரை மாலைத்தீவிடம் (மாலத்தீவு) முன்வைக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மாலைத்தீவிடம் இலங்கை உதவியை கோரியதாக மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் தனது ட்விட்டர் தளத்தில் ஊடாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கையில் கோவிட் தொற்று தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தமது நாட்டில் அடக்கம் செய்வது தொடர்பில் மாலைத்தீவு கவனம் செலுத்தியுள்ளமை, இந்த ட்விட்டர் தள செய்தியின் ஊடாக வெளியாகியிருந்தது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி இப்ரைஹிம் சோலி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மாலத்தீவில் இஸ்லாமியர்களின் முறைப்படி உடல்களை அடக்கம் செய்ய முடியுமா என இலங்கை ஜனாதிபதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாலத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் காணப்படும் இருதரப்பு தொடர்புகளை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அந்த நாட்டு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக மாலத்தீவு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
On special request from Sri Lankan President @GotabayaR, President @ibusolih is consulting stakeholder authorities of the Government of Maldives to assist Sri Lanka in facilitating Islamic funeral rites in the Maldives for Sri Lankan Muslims succumbing to COVID19 pandemic. pic.twitter.com/EPj6TCCLLp
— Abdulla Shahid (@abdulla_shahid) December 14, 2020
கொரோனா வைரஸ் சவாலை எதிர்நோக்கியுள்ள நிலையில், அதற்கு உதவிகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம் என மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் அனைவரது சடலங்களும் தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தகவல் வெளியாகியிருந்தது.
எனினும், இலங்கை அரசாங்கம் அவ்வாறானதொரு தீர்மானத்தை எட்டவில்லை என அரசாங்கத்தின் இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண கூறுகின்றார்.
இதேவேளை, இலங்கையில் கோவிட்-19 தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்து தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, தொடர்ந்தும் அந்த விடயம் குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் தினங்களில் இறுதி தீர்மானமொன்றை எட்ட முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

