ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன தொடர்பில் ஜனவரி மாதம் தீர்மானிக்கப்படும் என்றும் இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் இன்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஆகியோருடன் இன்று நேரில் நடத்திய சந்திப்புகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. மேற்படி விடயத்தைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று காலை இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனை, கொழும்பிலுள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினேன். இரண்டு மணி நேரம் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது எதிர்வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது புதிய பிரேரணை கொண்டுவருவதில் பிரிட்டன் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது எனவும், எதிர்வரும் ஜனவரி மாதமே அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் மற்றும் ஆதரவுத்தளம் தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

புதிய பிரேரணையானது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலும், இலங்கை அரசு பொறுப்புக்கூறலிருந்து தப்பிப்பிழைக்க முடியாத வகையிலும் அமையவேண்டும் எனவும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே பரிந்துரைகள் இருக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது என்று அவரிடம் சுட்டிக்காட்டினேன்.

அதேவேளை, குறித்த சந்திப்பின் பின்னர் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயத்துக்குச் சென்று ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தரப் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரை நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் கலந்துரையாடினேன். அவருடனும் புதிய ஜெனிவாப் பிரேரணை உட்பட சமகால விடயங்கள் தொடர்பில் விரிவாகப்பேசினேன்” என்றார்.

Share.
Leave A Reply