கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவிலில் வீடொன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு பெண்களையும், ஆண் ஒருவரையும் எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோண்டாவில் உப்புமடம் சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெறுவதாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு பொலிஸ் பிரிவினர் அந்த வீட்டை நேற்று சோதனை நடவடிக்கைக்கு உள்படுத்தினர்.

இதன்போது கோப்பாய் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொடிகாமம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவரும் என மூவர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டு, விசாரணைகளின் பின்னர் மூவரும் இன்று(புதன்கிழமை) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

சட்டத்துக்குப் புறம்பாக செயற்பட்டமை தொடர்பில் மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன், சந்தேக நபர்களை ஜனவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply