இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இறுதியாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றினால் அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஆண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.
பிம்புர ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த நபருக்கு, கொவிட் தொற்றுடன் இரத்தம் விஷமாகியமையே உயிரிழப்புக்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, நாட்டில் தொடர்ந்தும் கொவிட் தொற்றுக்கு உள்ளான நூற்றுக்கும் அதிகமானோர் இனங்காணப்படுகின்றனர்.
இந்நிலையில் அபாயமுடைய பகுதிகளாக சுகாதார தரப்பினரால் இனங்காணப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய இன்று வியாழக்கிழமை கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 5 பிரதேசங்கள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை பகல் முதல் அவிசாவளை, ருவன்வெல்ல மற்றும் கொஸ்கம ஆகிய பகுதிகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கொவிட் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தின் அபயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் ஜின்னா நகர் ஆகிய பகுதிகளும் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கடந்த 02 நாட்களாக குறித்த பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இரு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்;.
இதேவேளை, வெல்லம்பிட்டி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த லக்சந்த செவன குடியிருப்பு இன்று வியாழக்கிழமை காலை மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை இரவு 10 மணி வரை 588 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 388 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடனும் , 18 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 39 228 ஆக அதிகரித்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 30 568 பேர் குணமடைந்துள்ளதோடு , 8293 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.