பிரிட்டனில் புதியதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு பிரான்ஸில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த நபர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர். டிசம்பர் 19ஆம் தேதி அவர் லண்டனிலிருந்து பிரான்ஸ் சென்றுள்ளார்.

அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரான்ஸின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் புதிய திரிபு பரவி வருவது கண்டறியப்பட்டபின் டஜன் கணக்கான நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தன.

பிரான்ஸ் தனது எல்லைப்பகுதியை மூடியிருந்தது. இருப்பினும் அந்த தடை புதன்கிழமையன்று நீக்கப்பட்டது. ஆனால், பயணம் செய்ய விரும்புவோர் கொரோனா நெடிகவ்-ஆக இருக்க வேண்டும்.

பிரான்ஸில் முதல் தொற்று

பாதிக்கப்பட்ட நபருக்கு டிசம்பர் 21ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது என பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த நபர் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளிலும் இந்த புதிய கொரோனா திரிபு தொற்றியவர்கள் கண்டறியப்படுகின்றனர். வெள்ளியன்று பிரிட்டனிலிருந்து ஜப்பான் சென்ற ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. டென்மார்க், ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பிரான்ஸ் தேசிய பொது முடக்கத்தை நீக்கியது. இருப்பினும் முழுமையான தளர்வுகள் செய்யும் வகையில் அந்நாட்டில் தொற்று குறையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸில் கொரோனா தொற்று தொடங்கியதிலிருந்து 2.5 மில்லியனிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 62 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பேர் உயிரிழந்தோர் பட்டியலில் பிரான்ஸ் ஏழாம் இடத்தில் உள்ளது.

ஃபைசர் – பயோ என் டெக் தடுப்பு மருந்து

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, பெல்ஜியத்திலிருந்து பிரான்சுக்கு சனிக்கிழமையன்று ஃபைசர் – பயோ என் டெக் தடுப்பு மருந்து முதன்முறையாக வந்து சேர்ந்தது. இந்த தடுப்பு மருந்து முதலில் முதியோருக்கு கொடுக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் புதிய திரிபு

கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. லண்டன் மற்றும் இங்கிலாந்தின் கிழக்கும் மற்றும் தென் கிழக்கு பகுதியில் இது வேகமாக பரவி வருகிறது என்றும் கண்டறியப்பட்டது.

இந்த பகுதியில் தொற்று ஏற்பட்டுள்ள மூன்றில் இரண்டு பங்கு நபர்கள் கொரோனா வைரசின் இந்த புதிய திரிபால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது ஏன் கவனம் பெற்றுள்ளது?

இந்த புதிய வடிவ கொரோனா வைரஸ் பழைய வைரஸின் இடத்தை வேகமாக பிடித்து வருகிறது.

இந்த புதிய வடிவ வைரஸின் முக்கிய பகுதியில் மரபியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதில் சில மாற்றங்கள் மனிதர்களை தொற்றும் வைரஸின் திறனை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.

இந்த காரணங்களால் இந்த வைரஸ் எளிதாக பரவுகிறது என்கிறார்  சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர் ஜேம்ஸ் கல்லேகர்.

இருப்பினும் இந்த புதிய வடிவ வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை என்றும், சமீப மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் இவற்றுக்கு எதிராக செயல்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகளின் நடவடிக்கை என்ன?

இந்த மாத தொடக்கத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனிலிருந்து வருவோருக்கு தடை விதித்தன. .

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு இந்தியாவிலும் தடை விதிக்கப்பட்டது. செளதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தங்களின் எல்லைகளை மூடின.

Share.
Leave A Reply