இலங்கையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்தவர்களும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஆறு பேருக்கு தொற்று உறுதியானதாக கொரோனா தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த 6 பேரில் இருவர் புதியவகை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ளனர்.

அத்தோடு கொரோனா தொற்று உறுதியான மற்றைய நோயாளிகள் மத்திய கிழக்கு மற்றும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய பயணிகள் மற்றும் பணியாளர்கள் விசேட ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் மாறுபாடு கண்டறியப்பட்ட பின்னர் அங்கிருந்து நாட்டுக்குள் வரும் விமானங்களை நிறுத்திவைக்கவும், அந்நாட்டில் இருந்து பயணிகளை அனுப்பும் நடவடிக்கையையும் நிறுத்தி வைக்கவும் அரசாங்கம் முடிவு செய்தது.

இருப்பினும் நாட்டுக்கு பயணிகளை அழைத்துவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் பிரித்தானியாவிற்கு அனுப்பப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறித்த முடிவை அறிவித்த நேரத்தில் இலங்கை விமானம் ஏற்கனவே பிரித்தானியாவிற்கு சென்றிருந்ததாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் கடந்த புதன்கிழமை நாடு திரும்பியதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

Share.
Leave A Reply