(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள்.)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான தேசிய ஆய்வொன்றை 2018 பெப்ரவரி தொடக்கம் 2020 ஜனவரி வரை எனது தலைமையில் நடத்தியது.

அந்த ஆய்வின் அறிக்கையின் கண்டுபிடிப்புகளும் அவதானிப்புகளும் குறிப்பாக, அநுராதபுரம் விளக்கமறியல் சிறைச்சாலையில் 2020 ஏப்ரிலிலும் டிசம்பர் முற்பகுதியில் மஹர சிறைச்சாலையிலும் கொவிட் – 19 பரவிய பின்புலத்தில் இடம்பெற்றிருக்கும் கலவரங்களின் பின்னணியில் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன.

33 பேரை கொண்ட குழுவினால் ஏறத்தாழ இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது சிறைச்சாலை திணைக்களத்தின் கீழ் உள்ள 20 சிறைச்சாலைகளில் சுமார் 3000 வரையான சிறைக் கைதிகளிடம் கேள்விக் கொத்தின் மூலம் தகவல்கள் திரட்டப்பட்டன.

மேலும், கைதிகளிடமும் சிறை அதிகாரிகளிடமும் 300 க்கும் அதிகமான நேர்காணல்கள் செய்யப்பட்டன. சிறைச்சாலைகள் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளிடமும், அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் சீர்திருத்தங்கள் அமைச்சர், சட்டமா அதிபர் உட்பட முக்கியமான அரசாங்க அதிகாரிகளிடமும் கூட நேர்காணல்கள் செய்யப்பட்டன.

சிறைச்சாலைகள் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் கைதிகளைக் கொண்டிருப்பதன் (அவற்றின் கொள்திறைனையும் விட 107 சதவீதத்தில்) விளைவாக, சுகாதார வசதிகளும் நீர் விநியோகமும் கைதிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானவையாக இல்லை.

இரவு நேரங்களில் கைதிகள் அவர்களுடைய சிறைக்கூடங்களுக்குள் வைத்துப் பூட்டப்படுகிறார்கள். சிறைக்கூடங்களுக்கு வெளியேதான் மலசல கூடங்கள் இருப்பதால், அவர்கள் இரவு நேரங்களில் மலசலகூடங்களைப் பயன்படுத்த முடியாது.

அதன் விளைவாக கைதிகள் பிளாஸ்ரிக் பைகளை அல்லது வாளிகளை பயன்படுத்தியே தங்கள் இயற்கைக் கடன்களை கழிக்க வேண்டியிருக்கிறது. ஒரே சிறைக்கூடத்தில் தங்க வைப்பட்டுள்ள கைதிகள் ஒரே வாளியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

வெலிக்கடை சிறைச்சாலையைத் தவிர, வேறு எந்த சிறைச்சாலையிலும் தொலைபேசி வசதிகள் இல்லாத காரணத்தினால், கைதிகள் தங்களது உறவினர்களுடனும் சட்டத்தரணிகளுடனும் தொடர்புகளை பேண முடியவில்லை. கடிதங்கள் அல்லது நேரடி வருகைகள் மாத்திரமே வெளியுலகுடன் கைதிகள் தொடர்பு கொள்வதற்கான ஒரே வழியாக இருக்கிறது.

மோசமாக நடத்தப்படக்கூடிய ஆபத்தை இடையறாது எதிர்நோக்குகின்ற குழுவினராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அல்லது குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் இருக்கிறார்கள்.

இவர்கள் அரசியல் சூழ்நிலை மாற்றத்தைப் பொறுத்து ஏனைய சிறை கைதிகளினாலும் சிறை அதிகாரிகளாலும் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படக்கூடும்.

இந்த கைதிகள் மிகவும் நீண்டகாலத்தை விக்கமறியலில் கழித்திருக்கிறார்கள். பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள் 11 பேர் பத்து முதல் 15 வருடங்களை விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். கைதிகள் 29 பேர் ஐந்து முதல் 10 வருடங்கள் விளக்கமறியலில் இருந்திருக்கிறார்கள் என்பதை எமது ஆய்வு கண்டறிந்திருக்கிறது.

அவர்கள் கைது செய்யப்பட்ட முறையை நோக்கும்போது, தாம் தமது வீடுகள், வேலைத்தலங்களில் இருந்து அல்லது பயணம் செய்துகொண்டிருக்கும்போது கடத்தப்பட்டதாக பலர் கூறினார்கள்.

கைது செய்யப்பட்டதற்கு சான்றாக ரசீது எதுவும் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படவில்லை. தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பற்றிய விபரங்களும் கொடுக்கப்படவும் இல்லை.

தங்களது கைதைத் தொடர்ந்து தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்ட்டிருந்த காலகட்டத்தில் தாங்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள் கூறினார்கள்.

ஒப்புதல் வாக்குமூலங்களில் கைச்சாத்திடுவதற்கு அவர்களில் பலர் பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அந்த ஒப்புதல் வாக்குமூலங்களே அவர்களில் பலருக்கு எதிரான பிரதான சாட்சியமாக பயன்டுத்தப்பட்டன.

ஆய்வில் உள்ளடக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்ட ஆண் கைதிகளில் 84 சதவீதமானவர்கள், கைதுக்கு பிறகு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை ஆய்வின் மூலம் அறிந்து கொண்டோம்.

‘அவர்கள் என்னை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கினார்கள். ஒரு துணியை எனது வாய்க்குள் திணித்து எனது தலையைச் சுற்றி ஒரு பையை கட்டினார்கள். பிறகு என்னை அடித்தார்கள். எனக்கு ரத்தம் வரத்தொடங்கியது. என்னை அவர்கள் தொங்கவிட்டபோது எனக்கு சுவாச நோய் இருப்பதால் மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்டேன். என்னால் உகந்த முறையில் சுவாசிக்க முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து தாக்கினார்கள். எனது முழங்காலில் தாக்கத் தொடங்கினார்கள்’ என்று ஒரு கைதி கூறினார்.

தங்களது கைதுக்கு பிறகு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் (83 சதவீதம் ஆண்கள், 100 சதவீதம் பெண்கள்) ஒப்புதல் வாக்குமூலங்களில் கைச்சாத்திட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் (90 சதவீதம் ஆண்கள், 100 சதவீதம் பெண்கள்).

ஆய்வில் உள்ளடக்கப்பட்ட 95 சதவீத ஆண்களும், 100 சதவீத பெண் களும் தாங்கள் கைச்சாத்திட்ட ஆவணங்கள் தங்களுக்கு விளங்காத மொழியில் (சிங்களம்) எழுதப்பட்டிருந்ததாகவும் தங்களுக்கு அவை விளக்கிக் கூறப்படவில்லை என்றும் கூறினார்கள்.

ஒரு கைதி பின்வருமாறு அதை விளக்குகிறார். ‘சிங்களத்தில் எழுதப்படட சுமார் 40 -50 ஆவணங்களில் நான் கைச்சாத்திட்டிருப்பேன். சிங்கள ஆவணங்களில் கைச்சாத்திடுமாறு என்னை அவர்கள் கேட்டார்கள். ஆனால், ஒவ்வொரு தடவையும் கைச்சாத்திட நான் மறுத்தேன். குண்டாந்தடியால் தாக்கினார்கள். நான் கைச்சாத்திட்ட பிறகுதான் தாக்குதலை நிறுத்துவார்கள்.

இதை நான் நீதிமன்றத்தில் கூறினேன். எனக்கு சிங்களம் தெரியாது. அவர்கள் என்னை அந்த ஆவணங்களில் கைச்சாத்திட வைத்தார்கள். இது உனது கையெழுத்து தானா என்று நீதிபதி கேட்டார். நான் ஆம் என்று கூறினேன். அந்த ஆவணத்தில் மாத்திரமல்ல. வேறு பல ஆவணங்களிலும் முழுமையான சம்மதமின்றி கைச்சாத்திட்டேன் என்று கூறினேன். பலவந்தமாக எனது கையெழுத்து பெறப்பட்ட ஆவணங்களை நீதிமன்றம் ஏற்றக்கொண்டது. நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார்.’

சித்திரவதையின்போது தங்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலங்களில் தாங்கள் கைச்சாத்திடும் வரை மருத்துவச் சிகிச்சைகூட மறுக்கப்பட்டது என்று பல கைதிகள் கூறினார்கள் கைதுக்கு பிறகு சில நாடகளாக, வாரங்களாக, ஏன் சில சந்தர்ப்பங்களில் மாதக்கணக்கில் குடும்பத்தவர்களுடனும் சட்டத்தரணிகளுடனுமான தொடர்பு மறுக்கப்பட்டது. கைது செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும் கூட சில குடும்பங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் உடல்ரீதியான துன்புறுத்தப்பட்டு ஒப்புதல் வாக்குமூலங்களில் கைச்சாத்திட வைக்கப்பட்டார்களா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் சட்டவைத்திய அதிகாரியின் வகிபாகம் முக்கியமானது.

பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளில் 44 சதவீதமானவர்கள் சட்டவைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களில் 38 சதவீதமான ஆண்களுக்கு மாத்திரமே சித்திரவதைக்கான சிகிச்சை வழங்கப்பட்தாக ஆணைக்குழுவிடம் கூறியிருக்கிறார்கள்.

பொலிஸ் அதிகாரிகளுக்கும் சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு இருந்ததாகவும் அல்லது மொழிச்சிக்கல் காரணமாக பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளுடன் சட்ட மருத்துவ அதிகாரிகள் தொடர்பாடலை மேற்கொள்ள போனதாகவும் பெருவாரியான முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்தன.

பயங்கரவாத தடைச்சட்ட கைதிகளில் பலர் தாங்கள் எதிர்நோக்குகின்ற நிதிப் பற்றாக்குறையை விபரித்தார்கள். குறிப்பாக, நிதி நெருக்கடி காரணமாக சட்டத்தரணிகளின் சேவையைப் பெறுவதில் சிக்கல், தம்முடைய வழக்குகளின் தன்மை காரணமாக சட்டத்தரணிகள் வழக்கை எடுத்து நடத்துவதில் காட்டும் தயக்கம், வழக்குத் தொடுக்கும் நடைமுறை நீண்டதாக இருப்பதால் நீண்டகாலத்திற்கு சட்டத்தரணியை பெறுவதில் உள்ள சிரமம் போன்றவை பற்றி அவர்கள் விளக்கிக் கூறினார்கள்.

அம்பிகா சற்குணநாதன், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

ஒரு நபர் தமக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் ஆகக்கூடுதலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த காலம் 15 வருடங்கள் என்பதை ஆணைக்குழு அறிந்து கொண்டது.

ஒரு வழக்கு விசாரணை 2002 ஆம் ஆண்டில் இருந்து, அதாவது 18 வருடங்களாக, நீடித்து வந்திருக்கிறது. அதுவே மிகவும் நீண்டகாலம் நீடித்த வழக்காகும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தீர்ப்புகளுக்கு எதிராக 41 பேர் மேன்முறையீடு செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் 2018 செப்டெம்பர் வரை 14 வருடங்களாக தீர்ப்புக்காக காத்திருந்தார்.

ஆணைக்குழு 13 முதல் 15 வருடங்கள் வரை விளக்கமறியலில் தடுத்து தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களையும் சந்தித்து. அவர்களில் ஒருவர் 13 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 86 சதவீதமானவர்களும், அதே சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் ஆண்களில் 76 சதவீதமானவர்களும் தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உள்ள ஆற்றல் பாதிக்கப்படுகின் அளவுக்கு மன அழுத்தம், ஏக்கம், கவலையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கு மேலதிகமாக, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் 21 சதவீதமானவர்களும் அதே சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களில் 19 சதவீதமானவர்களும் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ள முயற்சித்தார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஆண்களில் 21 சதவீதமானவர்களும் அதே சட்டத்தின் கீழான விளக்கமறியல கைதிகளில் 10 சதவீதமானவர்களும் தாம் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறியிருக்கிhர்கள்.

தாம் விடுதலையான பின்னரும், சமூகத்தில் இணைந்து கொள்வதற்கோ, தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கோ அனுமதிக்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தையும், கவலையையும் பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகள் கொண்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

Share.
Leave A Reply