28 வயது நிரம்பிய கணவர் தனது 51 வயது மனைவியை மின்சாரம் பாயச்செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்த ஷஹாகுமாரி மற்றும் அருண் என்ற இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. ஷஹாகுமாரிக்கு 51 வயது அருணுக்கு 28 வயது.
51 வயதான ஷஹாகுமாரிக்கும் 28 வயதான அருணுக்கும் இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திருணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் கணவன் – மனைவியாக கோரகோனம் பகுதியில் வாழ்ந்துவந்துள்ளனர்.
இதற்கிடையில், இருவருக்கும் நடைபெற்ற திருமணம் முறைப்படி பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது.
இதனால், திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என ஷஹாகுமார் தனது கணவர் அருண் இடம் கூறியுள்ளார்.
மேலும், இருவரது திருமண புகைப்படங்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைதளங்களில் பரவியுள்ளது.
இந்த விவகாரங்களால் கணவன் – மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. திருமண புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, வாக்குவாதம் உள்ளிட்டவற்றால் கோபமடைந்த அருண் தனது மனைவி ஷஹாகுமாரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஏற்கனவே பல முறை அவரை கொலைசெய்ய முயற்சித்துள்ளார். அந்த முயற்சியில் இருந்து ஷஹாகுமாரி தப்பியுள்ளார்.
தன்னை கொலை செய்ய முயற்சித்தது கணவர் அருண் தான் என்ற உண்மை ஷஹாகுமாரிக்கு தெரியாமலேயே இருந்துள்ளது.
இந்நிலையில், ஷஹாகுமாரி நேற்று அவரது வீட்டில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்ததால் ஷஹாகுமாரியின் கணவர் அருணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், மனைவி ஷஹாகுமாரி மீது மின்சாரம் பாயச்செய்து கொன்றதாக கணவர் அருண் ஒப்புக்கொண்டார்.
திருமண புகைப்படங்கள் பரவியதாலும், வயது வித்தியாசம், இருவருக்கும் இடையேயான சண்டையாலுமே மனைவி ஷஹாகுமாரியை மின்சாரம் பாயச்செய்து கொன்றதாக கணவர் அருண் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.