கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்திருக்கிறது.
அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பதவி விலகிவிட்டனர்.
இப்படியொரு ஆளுங் கூட்டணியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் விலகி சுயேச்சையாகச் செயல்படப் போவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
இப்போது கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன, அவரை எதிர்க்கட்சிகளால் பதவி நீக்கம் செய்ய முடியுமா என்பதை இந்தக் கட்டுரையில் சுருக்கமாகப் பார்க்கலாம்.
நெருக்கடி சூழ்ந்திருக்கும் நிலையில் கோட்டாபய ராஜபக்சஷக்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன கேட்டால், முதல் வாய்ப்பு
“அவர் பதவி விலகுவதுதான்” என்கிறார்கள் பத்திரிகையாளர்களும் அரசியல் விமர்சகர்களும்.
இலங்கை அரசியல் சட்டப்படி அதிபருக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட அமெரிக்க அதிபரைப் போன்ற அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமாகும்.
அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேணனை எனப்படும் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும்.
அதிபர் மீது நம்பிக்கை இல்லாத நிலையிலோ, அவர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டாலோ இத்தகைய தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும்.
இந்தத் தீர்மானத்துக்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அதை நிறைவேற்ற முடியும்.
225 உறுப்பினர்களைக் கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் சுமார் 65 உறுப்பினர்களே இருக்கிறார்கள்.
ஆளுங் கூட்டணியில் இருப்போர் பதவி நீக்கத் தீர்மானத்துக்கு வாக்களிக்கக் கூடும் என்ற பொதுவான கருத்து உள்ளது.
அந்த வகையில் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றம் கூடியதும் 40-க்கும் மேற்பட்ட ஆளுங் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுயேச்சையாகச் செயல்பட முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆயினும் அதிபரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இது போதுமான எண்ணிக்கை இல்லை. குற்றப் பிரேணணையை நிறைவேற்றுவதற்கு குறைந்தது 150 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
அதே நேரத்தில் அத்தகைய பிரேணனையைக் கொண்டு வரப் போவது யார் என்ற கேள்வியும் இருக்கிறது.
அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அகற்றப்பட்டாலும் அந்தப் பதவியில் இந்த நெருக்கடி காலத்தில் அமர்வதற்கு முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தயாராக இல்லை என்ற சந்தேகத்தையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள்.