கோவிலின் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு உள்ளே புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன், பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு துளை வழியே வெளியே வர முயற்சித்தபோது அவரது உடல் சுவர் துளையில் சிக்கிக்கொண்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், அஞ்சிலி ஜாடுபுடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோலாகலமாக நடந்தது.

பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்கு வந்த கொள்ளையன் கோவிலில் ஜன்னல் கம்பிகளை நீக்கிவிட்டு கோவிலுக்குள் புகுந்தான்.

கோவிலுக்குள் சென்ற கொள்ளையன் கருவறையில் இருந்த அம்மன் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு ஜன்னல் துளை வழியாக வெளியே வர முயற்சித்தான். ஆனால் அவனால் துளை வழியாக வெளியே வரமுடியவில்லை.

உடல் பாதி சுவர் துளையில் சிக்கி கொண்டது. நீண்ட நேரம் வெளியே வர போராடியதால் கலைப்பு ஏற்பட்டு அப்படியே தூங்கி விட்டார்.

நேற்று காலை பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஜன்னல் கம்பிகள் நீக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அங்கு மர்ம நபர் ஒருவர் சிக்கிகொண்டு இருந்ததை கண்டு கத்தி கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மர்ம நபரை வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கஞ்சிலி பகுதியை சேர்ந்த பாப்பா ராவ் (வயது 40) என தெரியவந்தது. இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply