சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் ராம் பாலாஜி என்பவர் பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்யும் கன்சல்டிங் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடைக்கு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இரண்டு இளம் ஜோடியினர் வந்துள்ளனர்.
ஒரு புல்லட் வாங்க வந்திருப்பதாக கூறியவர்கள் அங்கிருந்த விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பார்வையிட்டுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு புல்லட்டை தேர்வு செய்துள்ளனர். தொடர்ந்து வண்டியை ஓட்டிப்பார்த்து விட்டு வருவதாக கூறியுள்ளனர்.
கடை ஊழியர்களும் இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில் நம்பி வண்டியை எடுத்துப்போக அனுமதித்துள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும் வண்டியை எடுத்துச் சென்றவர்கள் மீண்டும் திரும்பவில்லை . அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் இன்னொரு ஜோடியிடம் அவர்களை தொலைபேசியில் அழைக்குமாறு கேட்டுள்ளனர்.
அவர்களோ தங்களுக்கு அவர்கள் எண் தெரியாது என்று கூறியிருக்கின்றனர். இதனால் கடை ஊழியர்கள், கடையில் இருந்த இன்னொரு ஜோடியை பிடித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
காதல் ஜோடி கைது
பின்னர் காவல்துறையினர் அவர்களை விசாரித்தபோது, வண்டியை ஓட்டிச்சென்ற இளைஞர் கிருஷ்ணகிரி அருகில் உள்ள குப்பத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் குற்றப் பிரிவு போலீசார், வண்டியை எடுத்துச் சென்ற காதல் ஜோடியை தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த இருவரும் பெங்களூருவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
சேலம் டவுன் காவல்துறையினர் தனிப்படை அமைத்து பெங்களூரு சென்றனர். தேடப்பட்டு வந்த இருவரும் பெங்களூருவை அடுத்த கோலார் மாவட்டத்தில் காதல் ஜோடியை கைது செய்து சேலம் அழைத்து வந்தனர்.