உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழுவில் 10 தாங்கிகள் மற்றும் 30 கவச வண்டிகள் இருக்கும். மொத்தம்1200 தாங்கிகளையும் 3600 கவச வண்டிகளையும் இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது.

உக்ரேனிடம் 2,500 தாங்கிகள் உள்ளன. ஐரோப்பாவில் 5,000இற்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் உள்ளன.

உலகெங்கும் மொத்தம் 54,000 உள்ளன. பெரிய துப்பாக்கி, துருப்புக்களுக்கு பாதுகாப்பு கடினமான நிலத்தில் பயணித்தல் போன்றவை தாங்கிகளின் முக்கிய அம்சங்களாகும்.

எதிரியின் காலாட் படைகளை எதிர்கொள்ள சிறந்தவையாக தாங்கிகள் கருதப்படுகின்றன.

அவர்களின் காப்பரண்களை தாங்கிகளால் அழிக்க முடியும்.

எண்பது ஆண்டுகளாக காலாட் படையினரின் முக்கிய படைக்கலன்களாக இருந்த எழுபது தொன் எடை கொண்ட தாங்கிகள் உக்ரேன் போரின் போது செல்லுபடியற்றதாகிவிட்டனவா எனற கேள்விக்கு உள்ளாகியுள்ளன.

இரசியப் படையினர் உக்ரேனினுடனான முதல் மூன்று வாரப் போரில் 270 தாங்கிகளை இழந்துள்ளனர்.

இவை தாங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மேலும் 326 தாங்கிகளை இழந்தனர்.

இதனால் தாங்கிகளை தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளும் ஆளிலிவிமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளும் தாங்கிகளின் வலிமை மீது ஐயத்தை எழுப்பியுள்ளது.

தானூர்தி அணியும் (Motorised Unit) இயந்திரமய அணியும் (Mechanised Unit)

முதலில் போர்த்தாங்கிகளைப் பாவித்த நாடு பிரித்தானியா. 1916-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவால் போர்த்தாங்கிகள் பாவிக்கப்பட்டன.

தாங்கிகளை தரையில் நகரும் போர்க்கப்பல்கள் என பிரித்தானியவர் அப்போது விபரித்தனர். முதலில் அவற்றின் பாவனையைக் கைவிட்ட நாடு நெதர்லாந்து 2011இல் கைவிட்டது.

பின்பு அது ஜெர்மனியிடமிருந்து குத்தகைக்கு 18 தாங்கிகளைப் பெற்றுள்ளது. சுடுதிறன், தப்புதிறன், நகரும் திறன், தகர்க்கும் திறன் ஆகியவை தாங்கிகளின் சிறப்பு அம்சங்களாகும்.

தானூர்தி அணி (Motorised Unit) பார ஊர்திகளால் நகர்த்தப்படுபவை. இயந்திரமய அணி (Mechanised Unit) கவச வண்டிகள் மூலம் நகரும் காலாட் படையணியாகும்.

கவச வண்டிகளின் மிகச் சிறந்த வடிவம் தாங்கிகளாகும். 2014-ம் ஆண்டு இரசியர்கள் தமது T-72 தாங்கிகளுடன் இலகுவாக உக்ரேனை ஆக்கிரமித்தனர்.

பெரும்பாலான தாங்கிகள் 120மிமீ குண்டுகளை வீச வல்லன. இரண்டாம் உலகப் போரில் விமானங்களை அழிக்கவும் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் Battle of Kursk

உலக வரலாற்றில் அதிக தாங்கிகள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயன்ற போது பயன்படுத்தப்பட்டன.

1943-ம் ஆண்டு இரசியாவின் Kursk நகரில் இரண்டு நாடுகளிடையே நடந்த போரில் ஆறாயிரம் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இரசியர்கள் ஜெர்மன் தாங்கிகளுக்கு அண்மையில் சென்று கண்ணி வெடிகள அவற்றின் சில்லுச் சங்கிலிகளின் இடையே வீசி அவற்றைச் செயலிழக்கச் செய்தனர்.

ஹிட்லரின் படையினர் Tiger, Panther, Ferdinand ஆகிய தாங்கிகளையும் இரசியர்கள் T-14 தாங்கிகளையும் பாவித்தனர்.

ஹிட்லரின் படையினரின் தாங்கிகள் வலிமை மிக்கனவாயும் பெரிய அளவிலான குண்டுகளை வீசக் கூடியவையாகவும் இருந்தன.

வலிமை குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் இரசியர்கள் ஜெர்மனியரிலும் பார்க்க இரண்டு மடங்கு தாங்கிகளைப் பாவித்தனர்.

ஜெர்மனியர்களிடம் 1400 தாங்கிகளும் இரசியர்களிடம் 3600தாங்கிகளும் இருந்தன. இரசியர்கள் தங்கள் தாங்கிகளை நிலைத்தின் கீழ் மூடி வைத்து சுடு குழாயை மட்டும் வெளியில் தெரிய வைத்திருந்து ஜெர்மனியர்கள் அண்மையில் வரும்போது சுட்டுத்தள்ளினார்கள்.

(Heating seeking missiles

 

தங்கிகளின் வலிமையற்ற தன்மைகள்

கரந்தடிப் படையினருக்கு எதிராக தாங்கிகள் முன்பு சிறப்பாக செயற்பட்டன. கரந்தடிப் படையினர் வலிமை மிக்க கண்ணிவடிகளால் செயலிழக்கச் செய்யப்படக் கூடியவை.

ஈழ மண்ணிற்கு அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலைப்படையினர் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பதற்காக தெருக்களால் பயணிப்பதைத் தவிர்த்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டு பயணித்தன.

ஒரு கட்டத்தில் அகப்படும் பொது மக்களை தாக்கி வீழ்த்தி விட்டு அவர்கள் மேல் தாங்கிகளைச் செலுத்திக் கொன்றன.

ஈழப் போராளிகள் கண்ணி வெடிகளால் எதிரிகளின் தாங்கிகளைத் தகர்த்தனர். கைப்பற்றியும் உள்ளனர்.

ஆர்.பி.ஜீ என்னும் வீசு குண்டுகள் மூலமும் பழைய தாங்கிகளை அழிக்க முடியும். தாங்கிகளில் இருந்து வெளிவரும் உயர் வெப்பம் அவற்றை இனம்காண இலகுவானதாக இருக்கின்றது.

அதனால் வெப்பத்தைத் தேடியழிக்கும் ஏவுகணைகள் (Heating seeking missiles) அவற்றை இலகுவாக அழிக்கின்றன.

அமெரிக்காவின் Javelin, பிரித்தானியாவின் NLAW ஆகிய தோளில் வைத்துச் செலுத்தப்படும் ஏவுகணைகளும் துருக்கியின் TB-2 Drones என்னும் ஆளிலிவிமானங்களில் இருந்து ஏவும் சிறிய ஏவுகணைகளும் இரசிய தாங்கிகளை வேட்டைக்காரன் பன்றிகளைச் சுடுவது போல் சுட்டு அழிக்கின்றன.

அது மட்டுமல்ல அது பயணிக்கும் இடங்களில் தாங்கிகள் விட்டுச் செல்லும் தடயங்கள் அவற்றை இனம் காண உதவுகின்றன.

அமெரிக்காவின் ஒரு தாங்கி பத்து மில்லியன் பெறுமதியானது. இரசியாவின் தாங்கிகளான T-14 Armata நான்கு மில்லியன் பெறுமதியானது.

2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் Fallujah மீட்புப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக் ஆகிய நாடுகளின் படைகள் வெற்றி பெற்றமைக்கு அமெரிக்காவின் ஏப்ராம் தாங்கிகள் முக்கிய பங்கு வகித்தன.

ஆனாலும் அமெரிக்காவின் ஏப்ராம் (M1Abrams) தாங்கிகளையும் பிரட்லி (M2 Bradley) தாங்கிகளையும் நூறு டொலர் பெறுமதியான வெடிபொருட்களால் இஸ்லாமியப் போராளிகள் தகர்த்தனர்.

போரியல் நிபுணராகிய Michael Peck: Tanks may be the star player, but war is a team game. அமெரிக்காவின் Apache உலங்கு வானூர்திகள் தாங்கிகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவை.

தாங்கிகள் அதிக அளவு எரிபொருளைப் பாவிப்பன. அவற்றிற்கு எரிபொருள் மீள்நிரப்ப எரிபொருள் தாங்கிகள் அவற்றைத் தொடந்து கொண்டிருக்க வேண்டும்.

பல நாடுகள் தாங்கிகளைக் கைவிடுவதிலும் பார்க்க அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடுத்த தலைமுறை தாங்கிகளை உருவாக்குகின்றன. 1980களில் உருவாக்கிய தாங்கிகள் பெரிஸ்கோப்களை பாவித்தன.

தற்போது தாங்கிகளில் 360பாகையும் சுற்றிப் பார்க்கக் கூடிய உணரிகள் உள்ளன. எதிர் காலத்தில் போர்த்தாங்கிகளில் இருந்து பறந்து செல்லும் சிறிய ஆளிலி வானூர்திகள் தாங்கிகளின் கண்களாக மூலை முடுக்கு மேடு பள்ளம் எல்லாம் மறைந்து இருக்கும் எதிரிகளை இனம் காணும். பெரிய காத்திரமான உருவம் கொண்ட தாங்கியுடன் செல்லும் படையினருக்கு மனவலிமை கிடைக்கின்றது என்பது உண்மை.

அதே போல எதிரிக்கு அச்சத்தையும் கொடுக்கக் கூடியது. போரை விரும்பும் நாடுகள் மேலும் வலிமைப்படுத்தப் பட்ட இலத்திரனியல் போர் செய்யக் கூடிய புதிய தாங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பல பத்து ஆண்டுகளில் காலட்படையினரின் கவசமாக இருக்கும்.

இரசியாவின் மிகச் சிறந்த தாங்கியான T-14 Armata உக்ரேன் போரில் பயன்படுத்தப்படவில்லை. இரசியாவிடம் போதிய அளவு T-14 கையிருப்பில் இல்லை.

கட்டுரை மூலம், https://www.veltharma.com/

 

Share.
Leave A Reply