ரஷ்யாவின் அதிபர் விளாதிமிர் புதின், தனது குடும்பம் தொடர்பான கேள்விகள் வரும்போது அதற்கு விரிவாக பதிலளிப்பதில்லை.
2015 இல் தான் நடத்திய நீண்ட நேரம் நீடித்த செய்தியாளர் கூட்டத்தில், தனது மகள்களின் அடையாளங்கள் குறித்த கேள்விகளை தவிர்த்தார்.
“எனது மகள்கள் ரஷ்யாவில் வசிக்கிறார்கள், ரஷ்யாவில் மட்டுமே படித்தார்கள், நான் அவர்களைப் பற்றி பெருமைப்படுகிறேன்” என்று அவர் கூறினார்.
“அவர்கள் மூன்று வெளிநாட்டு மொழிகளை சரளமாகப் பேசுவார்கள். நான் யாரிடமும் என் குடும்பத்தைப் பற்றி விவாதிப்பதில்லை.”என்றார் அவர்.
“ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் வருங்காலத்திற்கான உரிமை உண்டு. அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள், அதை கண்ணியத்துடன் செய்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.
(புதின் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த 2002 ஆம் ஆண்டு புகைப்படத்தில் காணப்படுகின்றனர். ஆனால் குடும்பத்தினரின் முகங்களை பார்க்க முடியவில்லை)
அவர்களைப் பெயரிட புதின் விரும்பாமல் இருக்கலாம். ஆனால் மற்றவர்கள் அதை செய்துள்ளனர். அமெரிக்காவின் சமீபத்திய பொருளாதாரத் தடைகள் 36 வயதான மரியா வொரொன்ட்சோவா மற்றும் 35 வயதான கேடரினா டிகோனோவா ஆகியோரைக் குறிவைத்துள்ளன.
“புதினின் பல சொத்துக்கள் குடும்ப உறுப்பினர்களிடம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் நாங்கள் அவர்களை குறிவைக்கிறோம்” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
அதிபர் புதினின் குடும்ப வாழ்க்கை பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஆவணங்கள், ஊடக அறிக்கைகள் மற்றும் அவ்வப்போது வெளியாகும் பொது அறிவிப்புகள் ஆகியவை அந்த ஜோடியின் விவரங்களை அறிந்துகொள்ளப் போதுமானது.
இந்த இருவரும், அதிபர் புதின் மற்றும் அவரது முன்னாள் மனைவி லியுட்மிலாவின் குழந்தைகள்.
1983 இல் லியுட்மிலா விமான பணிப்பெண்ணாகவும், புதின் கேஜிபி அதிகாரியாகவும் இருந்தபோது திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் 30 ஆண்டுகள் நீடித்தது. அந்த காலகட்டத்தில் ரஷ்யாவின் அரசியல் அமைப்பில் புதினின் வியத்தகு வளர்ச்சி ஏற்பட்டது.
2013 இல் அவர்கள் பிரிந்தனர். “இது ஒரு கூட்டு முடிவு. நாங்கள் ஒருவரையொருவர் பார்ப்பது அரிது.எங்கள் இருவருக்கும் அவரவர் சொந்த வாழ்க்கை இருக்கிறது”,என்று புதின் கூறினார்.
மரியா வொரன்சோவா (Vorontsova )ஒரு கல்வியாளர் மற்றும் தொழிலதிபர்
அவர் எப்போதுமே “வேலையில் மூழ்கியிருப்பார்” என்று லியுட்மிலா, புதின் பற்றிக்கூறினார்.
அவர்களின் மூத்த மகள் மரியா வொரொன்ட்சோவா 1985 இல் பிறந்தார். அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியலையும், மாஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தையும் பயின்றார்.
வொரொன்ட்சோவா இப்போது ஒரு கல்வியாளர். நாளமில்லா அமைப்பில் (Endocrine system) நிபுணத்துவம் பெற்றவர்.
‘குழந்தைகளின் தடைப்பட்ட வளர்ச்சி ‘ பற்றிய புத்தகத்தின் இணை எழுத்தாளர் அவர். மேலும் மாஸ்கோவில் உள்ள நாளமில்லா சுரப்பியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
அவர் ஒரு தொழிலதிபரும்கூட. ஒரு பெரிய மருத்துவ மையத்தை கட்ட திட்டமிடும் நிறுவனத்தின் இணை உரிமையாளராக பிபிசி ரஷ்யா அவரை அடையாளம் கண்டுள்ளது.
வொரொன்ட்சோவா டச்சு தொழிலதிபர் ஜோரிட் ஜூஸ்ட் ஃபாசெனை மணந்தார்.
அவர் ஒரு காலத்தில் ரஷ்ய அரசின் எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோமில் பணிபுரிந்தார். இருப்பினும் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
அவர் தனது தந்தையை ஆதரிப்பதாகவும், மோதல் பற்றிய சர்வதேச அறிக்கைகள் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கருதுவதாகவும், யுக்ரேன் படையெடுப்பிற்குப் பிறகு அவருடன் பேசியவர்கள், கூறுகிறார்கள்.
டிகோனோவா (Tikhonova), அதிபர் புதினின் மகள் என்று அழைக்கப்படாமல் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளார்.
இரண்டாவது மகளான கேடரினா டிகோனோவா, திறமையான ‘ராக் அண்ட் ரோல்’ நடனக் கலைஞராக, பொதுமக்களின் பார்வையில் அதிகம காணப்படுகிறார். 2013 இல் ஒரு சர்வதேச நிகழ்வில் அவரும் அவரது ஜோடியும், ஐந்தாவது இடத்தைப் பிடித்தனர்.
அதே ஆண்டு அவர் புதினின் நீண்டகால நண்பரின் மகனான கிரில் ஷமலோவை மணந்தார். இவர்களது திருமணம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள பிரத்யேக ஸ்கை ரிசார்ட்டில் நடைபெற்றது.
மூன்று வெள்ளைக் குதிரைகள் இழுத்த சறுக்கு வண்டியில் திருமண தம்பதி வந்ததாக அங்கிருந்த பணியாளர்கள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் எரிசக்தி துறையில் அவரது பங்கிற்காக 2018 இல் அமெரிக்கா ஷாமலோவ் மீது தடைவிதித்தது. “திருமணத்தைத் தொடர்ந்து அவரது சொத்து மிக வேகமாக அதிகரித்திருக்கிறது,” என்று அமெரிக்க கருவூலம் கூறியது. பின்னர் இந்த ஜோடியும் பிரிந்தது.
யுக்ரேன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ஷாமலோவுக்கு சொந்தமானது என்று கூறப்படும் பியாரிட்ஸில் உள்ள ஒரு சொகுசு வில்லாவை ஆக்கிரமித்ததற்காக இரண்டு ரஷ்ய ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர்.
Vorontsova and Tikhonova