குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சி கோவில் விளையை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). கொத்தனாரான இவருடைய மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் இருந்தனர்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மதியம் மகன் சரண் திடீரென மயங்கிவிட்டதாக செல்போன் மூலம் கார்த்திகா தனது கணவர் ஜெகதீசுக்கு தெரிவித்துள்ளார்.
இதனால் பதற்றம் அடைந்த ஜெகதீஷ் வீட்டுக்கு ஓடி வந்து குழந்தை சரணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் சரணின் உடலை ஜெகதீஷ் வீட்டுக்கு கொண்டு வந்தார்.
சாவில் சந்தேகம்
இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது குழந்தையின் தாயார் கார்த்திகா போலீசாரிடம் கூறுகையில், வீட்டில் இருந்த விஷப்பொடியை தின்பண்டம் என நினைத்து குழந்தை சாப்பிட்டிருக்கலாம். இதனால் குழந்தை இறந்திருக்கலாம் என கதறி அழுதபடி தெரிவித்துள்ளார்.
ஆனால் போலீசாருக்கு குழந்தையின் சாவில் சந்தேகம் இருந்தது. இதனால் ஜெகதீஷ், கார்த்திகாவை மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று துருவி, துருவி விசாரித்தனர்.
திடுக்கிடும் தகவல்
அப்போது கார்த்திகா, குழந்தை சரணுக்கு விஷம் கொடுத்து கொன்றதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதாவது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை தீர்த்து கட்டியதாக தெரிவித்தார். மேலும் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மார்த்தாண்டம் அருகே மாராயபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கார்த்திகா சென்றுள்ளார். அப்போது காய்கறி வியாபாரம் செய்து வரும் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.
திருமணத்தை மறைத்து கள்ளக்காதல்
தான் திருமணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் என்பதை மறைத்து அந்த வாலிபருடன் கார்த்திகா நெருங்கி பழகி உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்தநிலையில் கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விவரம் அந்த வாலிபருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கார்த்திகாவை விட்டு அந்த வாலிபர் விலக தொடங்கினர். ஆனால் கார்த்திகா, என்னை விட்டு பிரிந்து விடாதே என அந்த வாலிபரிடம் கெஞ்சியுள்ளார். அப்போது 2 குழந்தைகள் இருக்கிற உனக்கு, நான் சரிப்பட்டு வரமாட்டேன் என வாலிபர் தெரிவித்துள்ளார்.
கொன்று விட்டு நாடகம்
இந்த வார்த்தை கார்த்திகாவை மனதளவில் உலுக்கியுள்ளது. கள்ளக்காதலுக்கு தன்னுடைய 2 குழந்தைகள் தான் இடைஞ்சல் என நினைத்த அவர், குழந்தைகளை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி சரணுக்கு சேமியாவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு ஒன்றுமே தெரியாதது போல் நாடகமாடி உள்ளார்.
இவ்வாறு கார்த்திகா தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இதற்கிடையே கார்த்திகா, மற்றொரு குழந்தையான சஞ்சனாவிற்கும் விஷம் கொடுத்தது தெரியவந்தது. அந்த குழந்தை திடீரென மயங்கியதால் அவருக்கு திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை கைது செய்தனர்.