ரஷ்யப் படைகளின் தாக்குதலில் இருந்தது தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க குழந்தைகளின் முதுகில் முகவரியை எழுதியுள்ளனர் அவர்களின் பெற்றோர்கள். இந்த சம்பவம் பலரின் மனதையும் நெகிழச் செய்திருக்கிறது.

உக்ரைனில் கடந்த இரண்டு மாதங்களாக போர் நடந்துவருகிறது. போர் சூழல் காரணமாக சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் அண்டை நாடுகளுக்கு அடைக்கலம் தேடி தஞ்சம் புகுந்துள்ளனர்.

பிப்ரவரி 24-ல் தொடங்கிய போர் கிட்டத்தட்ட 43 நாட்களாக தொடர்ந்து வருகிறது. அமைதிக்கான பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் ரஷ்யா தாக்குதலைக் குறைப்பதாக இல்லை. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் இந்தப் போர் நடவடிக்கையை எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிகளில் தங்கி தாக்குதல் நடத்திவந்த ரஷ்யப் படைகள் தற்போது வெளியேறி உள்ளன.

இதையடுத்து உக்ரைன் மக்கள் மற்றும் உக்ரைன் இராணுவம் அங்கு செல்ல முயன்றபோது அங்கு தெருவில் சிதறிக் கிடந்த உடல்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து உக்ரைனில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க அவர்களின் முதுகில் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியை எழுதி வைத்துள்ளனர்.

ஒருவேளை குழந்தைகளின் பெற்றோர்கள் இறந்துபோய்விட்டாலோ அல்லது குழந்தைகள் காணாமல் போய்விட்டாலோ அரசு அவர்களை ஆதரற்றவர்களாகாமல் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு எழுதியுள்ளனர்.

குழந்தைகளின் முதுகில் எழுதப்பட்ட முகவரி

மனதை உருக்கும் இந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அனஸ்டாசியா லாபடினா (Anastasia Lapatina) என்ற பத்திரிக்கையாளர், ‘உக்ரைனில் உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் உடலில் முகவரியை எழுதத் தொடங்கியுள்ளனர்,

இதனால் குழந்தைகளின் பெற்றோர்கள் ரஷ்ய தாக்குதலில் கொல்லப்பட்டால், தங்கள் குழந்தைகள் ஆதரவற்றவர்கள் அல்ல என்று தெரிவிக்கவும்.

அவர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் அல்லது அவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு எழுதி வைத்துள்ளனர்’ என்று கூறினார்.

இப்படத்தை சமூக வலைதளங்களில் கண்ட மக்கள் போரின் துயரத்தை இப்படம் காட்டுவதாகவும் அடையாளமற்று அங்கும் இங்கும் அலையும் உக்ரைன் மக்களுக்கு இந்த அடையாளம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என்று கூறிவருகின்றனர்.

மேலும் போர் மக்களுக்கானதல்ல, அது அதிகாரத்தின் திமிர் என்று மக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply