இலங்கை, வரலாறு காணாத மக்கள் எழுச்சியை சந்தித்து நிற்கிறது. பணம், சாராயம், பிரியாணிப் பொட்டலம் கொடுத்து, பஸ்களில் ஆட்களை ஏற்றிவந்து, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘எழுச்சி’கள் போலல்லாமல், மக்களால், மக்களுக்காக, மக்கள் எழுந்துநிற்கும் மாபெரும் எழுச்சியை, கடந்த இரண்டு வாரங்களாக, இலங்கை கண்டுவருகிறது.
இந்த மக்கள் எழுச்சியின் குரல் ஒன்றுதான்; “கோ ஹோம் கோட்டா” (கோட்டா வீட்டுக்குப் போ), “கோ ஹோம் ராஜபக்ஷஸ்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்குப் போங்கள்).
2009 – 2015 காலப் பகுதிகளிலெல்லாம் ‘கோட்டா’ என்ற பெயர், அச்சத்தைத் தருவதாக இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்த பலரும் கூட, கோட்டாபய ராஜபக்ஷவைப் பற்றி அடக்கியே வாசித்தனர்.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட போது, நாட்டைக் காக்க வந்த வீரனாகவே, சிங்கள-பௌத்த மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவைப் பார்த்தனர்.
சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில், கோட்டாபயவின் வெற்றி அவர்களுக்கு மேலும் அச்சத்தைத் தருவதாகவே அமைந்தது.
மக்கள் மத்தியில் இருந்த இத்தகைய எண்ணங்கள், இரண்டே வருடங்களில் தலைகீழாக மாறிவிட்டன.
எந்த ‘கோட்டா’ எனும் பெயரை உச்சரிக்கவே, எவரும் அச்சப்படும் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்ததோ, அந்தப் பெயரில் பச்சைத் தூசணப் பாடல்களைக் கூடப் பாடிக்கொண்டு, பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் நிலை இன்று உருவாகியிருப்பதை நாம், கண்கூடாகப் பார்த்து, காதுகொண்டு கேட்கக் கூடியதாக இருக்கிறது.
இது போன்றதோர் இழிநிலையை, இலங்கையின் வேறெந்த அரசியல்வாதியும் இதற்கு முன்னர் சந்தித்ததில்லை.
‘மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து’ என்பான் வள்ளுவன்; ஆனால், மானம் உடையவர்களுக்கே இது பொருந்தும்.
வரலாறு காணாத மக்கள் எழுச்சியின் காரணமாக, எதையாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்துக்கு அதிகரிக்கவே, பிரதமரைத் தவிர்ந்த ஏனைய அமைச்சரவை அமைச்சர்கள் எல்லோரும் பதவியை இராஜினாமாச் செய்தனர்.
அதன் பின்னர், வெறும் நான்கு அமைச்சர்கள் மீளவும் அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டனர். இதில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி, அடுத்தநாளே தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை அனுப்பியிருந்ததோடு, தனது இராஜினாமாவைப் பகிரங்கப்படுத்தி இருந்தார். ஆனால், அதற்கடுத்த நாள்களிலேயே, தான் நிதியமைச்சராகத் தொடர்வதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளை வந்து, அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்று, ஆட்சி நடத்துமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர்.
எல்லா அழைப்புகளும் இதுவரை மறுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. காரணம், மக்களின் பலமான குரலாகும்.
மக்கள் இங்கு கேட்பது, ஒரு புதிய அமைச்சரவையையோ, இடைக்கால அரசாங்கத்தையோ அல்ல. மக்களின் முதன்மையான கோரிக்கை, மிகத் தௌிவானது; பட்டவர்த்தனமானது.
அது “கோ ஹோம் கோட்டா” (கோட்டா வீட்டுக்குப் போ), “கோ ஹோம் ராஜபக்ஷஸ்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்குப் போங்கள்).
ஆனால் கோட்டா, தன்னுடைய பதவிக் கதிரையை உடும்புப்பிடி பிடித்தபடி, அதனை விட்டுக்கொடுக்கத் தயாரில்லாது, அதனைத் தவிர்ந்த உப்புச்சப்பற்ற முயற்சிகளை, முன்மொழிந்து கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் குழம்பிக்கொண்டு நிற்கின்றன என்பது கவலைக்கிடமானது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசியல் முதிர்ச்சியற்ற தன்மைகளை வௌிக்காட்டி நிற்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை இல்லாதொழித்துவிட வேண்டும் என்கிறார்.
கட்சியின் இன்னொரு முக்கிய தலைவராக ஹரின் பெர்னாண்டோ, கட்சியின் இன்னொரு முக்கியஸ்தரான பொருளியல் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஜனாதிபதியாக வேண்டும் என்கிறார்.
எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைத்து, செயற்பட வைக்க வேண்டிய பிரதான எதிர்க்கட்சி, திக்குத் தெரியாமல் நிற்கிறது.
பாராளுமன்றத்தின் பெறுமதியான நேரத்தை வீணாக்கும் வகையில், பாராளுமன்றத்துக்கு உள்ளேயே ஆர்ப்பாட்டம் என்ற கேவலமானதொரு நாடகத்தை நடத்தி, எதிர்க்கட்சியின் இயலாமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றி நின்றனர் ஐக்கிய மக்கள் சக்தியினர்.
மறுபுறத்தில், இன்று ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை, ஜே.வி.பி தனக்கு சாதகமாக்கிக்கொள்ள முனைவதோடு, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மறுதேர்தலை நோக்கியே தனது காய்களை நகர்த்துவதாகத் தெரிகிறது.
பிரதான எதிர்க்கட்சி பலமிழந்துள்ள நிலையில், தனது அரசியல் பலத்தை அதிகரித்துக் கொள்வது மட்டுமே அதன் குறிக்கோளாகத் தெரிகிறது.
அதே அறப்பழசான, காலத்துக்கு ஒவ்வாத மார்க்ஸிய பொருளாதாரச் சிந்தனையை வைத்துக்கொண்டு, ஜே.வி.பியால் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
இந்த இடத்தில், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினை பற்றியும், அதற்கான தீர்வுப் பாதை தொடர்பிலும் தௌிவான பார்வையோடு கருத்துரைத்தவர் ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில், ஒற்றையாளாக அவர் பாராளுமன்றத்தில் நின்றுகொண்டு, நிறையவே ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தாலும், எண்ணிக்கைப் பலம் தற்போது இல்லாத நிலையில், அவரது செயலாற்றல் இயலுமை மட்டுப்படுத்தப்பட்டடே உள்ளது.
எதிர்க்கட்சிகளின் இந்தப் பலவீனம்தான், ராஜபக்ஷர்களின் இன்றைய பெரும் பலம். மக்கள் வீதியில் இறங்கிப் போராடினாலும், அந்தப் போராட்டத்தின் பலனை, அரசியல் வெற்றியாகக் கொண்டு போய்ச் சேர்க்கக்கூடிய அரசியல் சக்திகள் எதுவுமே இல்லாத நிலைதான், இன்று கோட்டாபய ராஜபக்ஷ தன் பதவிக் கதிரையை இறுகப்பிடித்துக்கொண்டு நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது.
எப்படியாவது குறுங்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தோ, இந்தியா, சீனா உள்ளிட்ட வௌிநாடுகளிடமிருந்தோ பெரியதொரு கடனைப் பெற்றுக்கொண்டு, எரிபொருள், உணவு, மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்கு தாராளமாகக் கிடைக்கச் செய்துவிட்டால், மின்வெட்டுக்கான தேவை இல்லாது போய்விட்டால், எரிவாயு வரிசைகள் இல்லாது போய்விட்டால், மக்களின் எதிர்ப்புக் குறைந்துவிடும் என்பதுதான், கோட்டாவின் கணக்காக இருக்க வேண்டும்.
இந்தக் கணக்கின் படிதான், வரலாறு காணாத மக்கள் எழுச்சியை மீறி, கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் கதிரையயை விடாப்பிடி, கொடாப்பிடியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், “கோ ஹோம் கோட்டா” (கோட்டா வீட்டுக்குப் போ), “கோ ஹோம் ராஜபக்ஷஸ்” (ராஜபக்ஷர்கள் வீட்டுக்குப் போங்கள்) என்ற கோசங்களை, பாராளுமன்ற உறுப்பினர்களான “225 பேரும் வீட்டுக்குப் போங்கள்” என மாற்றும் கைங்கரியத்தையும் போராட்டக்காரர்கள் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கு எதிரான, மக்களின் மனநிலை என்பது நியாயமானது. ஆனால், கோட்டாபயவுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் எதிரான மக்களின் கோபத்தை, 225 பேரை நோக்கி வழிமாற்றிவிடும் முயற்சியானது, மக்களை ஏமாற்றும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும். ஆகவே, இந்தப் போலிப் பரப்புரைகளை மக்கள் கவனத்தோடு அணுக வேண்டும்.
இந்த இடத்தில், மக்கள் புரிந்துகொள்ள வேண்டியதொரு விடயம் இருக்கிறது. எரிபொருள், எரிவாயு, உணவு, மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் தட்டுப்பாடும், மின்வெட்டும்தான் மக்களை வீதிக்கிறங்கி போராட வைத்தது.
இவை நடந்திருக்காவிட்டால், ஆட்சி எவ்வளவு ஊழல் மிக்கதாக இருந்தாலும், எவ்வளவு மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்தளவுக்கு மக்கள் வீதிக்கு இறங்கி போராடியிருப்பார்களா என்பது சந்தேகமே.
ஆனால், இந்தப் பொருட்கள் தட்டுப்பாடுகளும் மின்வெட்டும் நோயல்ல; நோயின் அறிகுறிகள் மட்டும்தான். கோட்டாபயவும், இந்த அறிகுறிகளைக் குணப்படுத்திவிட்டு, மக்களை சமாதானம் செய்துவிட்டு, தனது பதவிக் கதிரையில் வசதியாகத் தொடர்ந்து அமரவே முயல்கிறார்.
ஒருவேளை, தன்னுடைய பகீரதப் பிரயத்தனத்தில் கோட்டாபய வெற்றிபெறுவாராக இருந்தால், மேற்சொன்ன நோயின் அறிகுறிகள் மறைக்கப்படும். அறிகுறிகள் மறைந்ததும், மக்கள் எழுச்சி குறைவடையும். கோட்டாபய தனது பதவியைக் காக்கும் பெரு முயற்சியில் வெற்றிபெறுவார். ஆனால், இந்நாட்டை பீடித்துள்ள நோய் குணமடையுமா?
ஒரு பெரிய அரசியல் மாற்றத்துக்கான தருணம் இது. இலங்கையின் அரசியல் அமைப்பை மட்டுமல்ல, அரசியல் கலாசாரத்தையும் மாற்றிப் போடுவதற்கான காலகட்டம்; அரிய சந்தர்ப்பம் இது.
இந்த வரலாறு காணாத மக்கள் எழுச்சி, பயனற்றுப் போய்விடக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இத்தனை பெரிய எழுச்சி என்பது, வெறும் நோயின் அறிகுறிகளை மறைப்பதற்கானது அல்ல; அது நோயைக் குணப்படுத்துவதற்கானது என்பதை, மக்கள் தமக்குத் தாமே ஞாபகப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
-என்.கே. அஷோக்பரன்–