உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷியா உடனான போரால் உக்ரைனில் இருந்து 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறினர்.
17.00: உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி அதன் உண்மையான நோக்கங்களை அடையும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பேசிய புதின், ரஷியாவைப் பாதுகாக்க ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதைத் தவிர மாஸ்கோவிற்கு வேறு வழியில்லை என்றும் உக்ரைனின் ரஷிய எதிர்ப்புப் படைகளுடன் மோதல் தவிர்க்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.
05.30: நேட்டோ உறுப்பினராக இல்லாத ஆஸ்திரியா நாட்டின் அதிபர் கார்ல் நெஹமர் மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்தார்.
அப்போது, உக்ரைனுடனான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையெனில் இரு பக்கமும் சேதங்கள் ஏற்படும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.
03.00: உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரில் ரஷிய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும். சாலைகளில் ஆங்காங்கே உடல்கள் கிடத்தப்பட்டுள்ளன என அந்த நகர மேயர் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.
மொபைல் டிரக்குகள் மூலம் தகனங்கள் செய்யப்படுகின்றன. டிரக்குகளில் உள்ளே உள்ள குழாய் மூலம் இந்த உடல்கள் எரிக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
00.20: ரஷியா உடனான போர் உக்ரைனின் பொருளாதார உற்பத்தியை இந்த ஆண்டு 45 சதவீதம் வீழ்ச்சி அடையச் செய்யும் என உலக வங்கி கணித்துள்ளது. போரால் உக்ரைனின் வணிகங்களில் பாதிக்கும் மேல் மூடப்பட்டது.
இதேபோல், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் ரஷியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு 11.2 சதவீதம் சுருங்கும் என உலக வங்கி கணித்துள்ளது.