மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
வேலூர் விருஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மார்க்கபந்து, அரசு பஸ் டிரைவர். இவரது மகன் கோகுல் (வயது 20). இவன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மெண்ட் இறுதியாண்டு படித்து வந்தார்.
இவருக்கும் திருச்சி நவல்பட்டை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் இடையே கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு மலர்ந்தது. பின்னர் அது காதலாக மாறியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 5-ந்தேதி கோகுல் அந்த மாணவியிடம், தனது பெற்றோர் தனக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கின்றனர்.
ஆகவே உன்னை பார்ப்பதற்காக திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் அறையில் எடுத்து தங்கி இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய மாணவியும் பெற்றோருக்கு தெரியாமல் கோகுல் தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
பின்னர் மாணவியை பார்த்த மறுகணம் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தாலியை எடுத்து கோகுல் அவரது கழுத்தில் கட்டினார்.
அதை தொடர்ந்து மாணவியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் மாணவிக்கு தெரியாமல் செல்போன் மூலம் ஆபாச வீடியோ எடுத்துள்ளார்.
அதன் பின்னர் இருவரும் தங்களின் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். காதலன் தாலி கட்டிய விவகாரத்தை பெற்றோரிடம் மறைத்து மாணவி வழக்கம்போல் பள்ளி சென்று வந்தார்.
இதையடுத்து அடிக்கடி கோகுல் திருச்சி வந்து ஓட்டலுக்கு வரவழைத்து அந்த மாணவியிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.
அதனையும் அவருக்கு தெரியாமல் வீடியோ மற்றும் போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் தாயாருக்கு அரசல் புரசலாக தெரிந்துள்ளது. ஒருகட்டத்தில் மாணவியின் தாயாரிடமும் கோகுல் பேசி வந்தார்.
இந்த நிலையில் கோகுல் தனது அவசர தேவைக்கு ரூ.10 ஆயிரம் பணம் தேவைப்படுகிறது. உடனே அனுப்பி வையுங்கள் என மாணவியின் தாயாரிடம் கூறியுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்தார்.
உடனே உனது மகள் என்னுடன் தனிமையில் இருந்த வீடியோ, புகைப்படங்கள் என்னிடம் உள்ளன.
அதனை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். மேலும் எல்லை மீறிய கோகுல் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்க மாணவியின் தாயாரையும் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இதை கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர் நேராக நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பின்னர் வழக்கு திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவன் கோகுலை கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
செல்போன் பயன்பாட்டால் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடும் மாணவர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்வை தொலைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருவது பெற்றோர்களை கவலை அடைய செய்துள்ளது.