அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளினில் சுரங்க ரயில் சேவை நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் சன்செட் பூங்காவில் உள்ள 36வது வீதி என்ற ரயில் நிலையத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களில், சுரங்க ரயில் நிலைய மேடையில் பயணிகள் பலர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்க்க முடிகிறது. மேலும் சம்பவ இடத்தில் வெடிபொருட்களும் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தாக்குதல் நடத்திய சந்தேக நபரை தேடும் பணி தற்போது முடக்கி விடப்பட்டுள்ளது. சுரங்க ரயில் நிலையத்திலிருந்து புகை பரவியதாக அழைப்பு வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை கண்டதாகவும் நியூயார்க் தீயணைப்புத்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.