பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃபின் சகோதரரான ஷாபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமர் பதவிக்காக எதிர்கட்சிகள் முன்மொழிந்த கூட்டு வேட்பாளராக இருந்தார். ஏப்ரல் 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகலில் பாகிஸ்தான் தேசிய அவையான அதன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டபடி அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்.

வாக்கெடுப்பில் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு 174 வாக்குகள் கிடைத்தன. இம்ரான் கானின் பிடிஐ கட்சி முன்மொழிந்த பிரதமர் வேட்பாளரான முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

முன்னதாக, திங்கள்கிழமை காலையில் நாடாளுமன்ற அமர்வு தொடங்கியவுடன், இம்ரான் கானின் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான், “அமெரிக்க உத்தரவின் பேரில் நாட்டில் நடக்கும் ‘சதி’யால் நான் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன்,” என்று கூறி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தேசிய அவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்கட்சியைச் சேர்ந்த ஷாபாஸ் ஷெரீப் இப்போது நாட்டின் புதிய பிரதமராக உள்ளார்.

ஹவாலா பரிவர்த்தனை தொடர்பான வழக்கு ஷாபாஸ் ஷெரீப் மீது நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அந்த வழக்கில் ஷாபாஸ் ஷெரீஃபை ஏப்ரல் 27ஆம் தேதிவரை கைது செய்ய ஏற்கெனவே நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

இந்த ஷாபாஸ் ஷெரீஃப் யார் தெரியுமா?

“நீங்கள் எல்லா பூக்களையும் வெட்டலாம், ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுக்க முடியாது.”

இம்ரான் கான் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட நேரத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃப் இவ்வாறு கூறினார்

இம்ரானின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குரியாகியிருந்த சமீபத்திய வாரங்களில் தனது அரசை காப்பாற்ற அவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டியிருந்தது.

ஆனால் அவரால் அதை செய்யமுடியவில்லை. இப்போது எதிர்கட்சிகளின் முகமாக இருக்கும் ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் பிரதமரின் முகமாக வாக்கெடுப்பு நடைமுறைகளின்போதே அடையாளம் காணப்பட்டார்.

ஒருவேளை ஷாபாஸ் ஷெரீஃப் இதே நம்பிக்கையுடன் ‘பூக்கள் மற்றும் நீரூற்றுகளைப்’ பற்றி அப்போது பேசியிருக்கலாம்.

ஷாபாஸ் ஷெரீஃப் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஆவார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இருந்தபின்னர் விடுதலையான நவாஸ் ஷெரீஃப் பிறகு நாடு திரும்பவில்லை. அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானில் நவாஸ் ஷெஃரீப்பின் அரசை தோற்கடித்தபிறகுதான் இம்ரான் கான் பதவிக்கு வந்தார்.

ஷாபாஸ் ஷெரீஃப் பலமுறை பாகிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் தனது சகோதரர் நவாஸ் ஷெரீஃப்புடன் இணைந்திருந்த தனது வழியை மாற்றிக்கொள்ளவில்லை.

பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றது முதல் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது வரையிலான கதை மிகவும் சுவாரசியமானது.

ஷாபாஸ் ஷெஃரீப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் உரையாற்றும்போது அடிக்கடி புரட்சிக் கவிதைகளை கூறுவார்.

பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது சுல்ஃபிகர் அலி புட்டோ மைக்கை கீழே தள்ளிவிடுவதைப்போல இவரும் அதை நகல் செய்வார். இதற்காக பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல்களில் அவர் கேலி செய்யப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற வணிக குடும்பத்தில் பிறப்பு

ஷபாஸ் ஷெரீஃப்

 

ஷாபாஸ் ஷெரீஃப் பாகிஸ்தானின் புகழ்பெற்ற வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். ஷாபாஸ் ஷெரீஃப் காஷ்மீரி வம்சாவளியைச் சேர்ந்த பஞ்சாபி என்று டெய்லி டைம்ஸ் இணையதளம் கூறுகிறது. இவர் ஜம்மு காஷ்மீரின் மியான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

ஷெரீஃப் குடும்பம் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் வசித்தவர்கள். வணிகம் காரணமாக அமிர்தசரஸில் (அம்ரித்சர்) உள்ள ஜடி உம்ரா கிராமத்திற்கு அவர்கள் இடம்பெயர்ந்தனர்.

அதன் பின்னர் இந்தக்குடும்பம் அம்ரித்ஸரில் இருந்து லாகூருக்கு குடிபெயர்ந்தது. ஷாபாஸ் ஷெரீஃப்பின் தாயின் குடும்பம் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்ததாகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி தெரிவிக்கிறது.

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, பாகிஸ்தானில் தனது தந்தை முகமது ஷெரீஃபால் தொடங்கப்பட்ட இத்தெஃபாக் குழுமத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

‘Ittefaq Group’ என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய வணிகக் குழுவாகும். இதில் எஃகு, சர்க்கரை, ஜவுளி, பலகைத் தொழில்கள் ஆகியவை அடங்கும் என்றும் ஷாபாஸ் ஷெரீஃப் இந்த குழுமத்தின் இணை உரிமையாளர் என்றும் Dawn இணையதளம் தெரிவிக்கிறது.

பிபிசியிடம் பேசிய பாகிஸ்தானின் அரசியல் ஆய்வாளர் சுஹைல் வாராய்ச், “ஷாபாஸ் ஷெரீஃப் ஒரு பிரபலமான குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில், அவர் தனது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீஃப்பின் வேலைகளில் உதவினார். பின்னர் தனது சகோதரரின் உதவியுடன் அரசியலில் நுழைந்தார்,” என்று கூறினார்.

அரசியலில் நுழைவு

ஷாபாஸ் ஷெரீஃப் 1985 இல் லாகூர் வர்த்தக மற்றும் தொழில் சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரது அரசியல் பயணம் 1988 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தொடங்கியது. ஆனால் சட்டப்பேரவை கலைக்கப்பட்டது. அவர் தனது பதவிக்காலத்தை முடிக்க இயலவில்லை.

இதையடுத்து ஷாபாஸ் ஷெரீஃப் தேசிய அரசியலில் கால் பதித்தார். 1990 இல், அவர் பாகிஸ்தானின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் பதவியேற்ற நேரம் இது. நவாஸ் ஷெரீஃப் பிரதமராக இருந்த காலம் முழுவதும் ஷாபாஸ் ஷெரீஃப் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

ராணுவத்தின் அழுத்தம் அதிகரித்ததால், 1993ல் பிரதமர் நாற்காலியில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலக நேரிட்டது. அதே ஆண்டில், ஷாபாஸ் ஷெரீஃப் பஞ்சாப் மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக ஆனார். 1996 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1997 இல், அவர் மூன்றாவது முறையாக பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சரானார்.
ராணுவம் ஆட்சியை கைப்பற்றியபோது கைது செய்யப்பட்டார்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் ஷபாஸ் ஷெரீஃப் (கோப்புப்படம்)

பஞ்சாப் முதல்வராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்தது.

1999 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி மாலை, பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கவிழ்த்தார். இந்த நிலையில், ஷாபாஸ் ஷெரீஃப்பும் கைது செய்யப்பட்டார்.

2000 வது ஆண்டு ஏப்ரலில் ஷாபாஸ் ஷெரீஃப்பின் மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீஃப்புக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெனரல் முஷாரஃபின் விமானத்தை கடத்தியதற்காகவும், பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரிலும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, பாகிஸ்தானின் ராணுவ அரசு நவாஸ் ஷெரீஃப்புக்கு மன்னிப்பு அளித்தது. 40 குடும்ப உறுப்பினர்களுடன் நவாஸ், செளதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த 40 பேரில் ஷாபாஸ் ஷெரீஃப்பும் ஒருவர்.

பாகிஸ்தானில் கைது செய்யப்படும் அபாயம் இருந்தபோதிலும் ஷாபாஸ், அபுதாபியில் இருந்து விமானம் மூலம் 2004இல் லாகூர் வந்தார். சில மணி நேரத்திலேயே அவர் செளதி அரேபியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

-பிபிசி தமிழ் செய்தி-

Share.
Leave A Reply