இந்தியப் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகிய தகவலும் அவ்வாறானதொன்று தான்.
இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து. அரசாங்கத்தைப் பாதுகாக்க, 6000 இந்தியப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று, வெளியாகிய தகவல் பொய் என இந்தியத் தூதரகமும், பாதுகாப்பு அமைச்சும் அறிவிக்கும் அளவுக்கு அதன் தாக்கம் காணப்பட்டது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவொரு சூழ்நிலையையும் கையாளும் திறன் இலங்கை பாதுகாப்பு படைகளுக்கு உள்ளது என்று ஜெனரல் கமல் குணரத்ன கூறியிருந்தார்.
நிலைமைகளை கையாளும் திறன் இலங்கைப் படைகளுக்கு உள்ளதா -இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஏனென்றால், இலங்கைக்கு இந்தியப் படைகள் வரவழைக்கப்பட்ட இரண்டு காலகட்டங்களிலும், பாதுகாப்பு நிலையை கையாள முடியாத சூழல் திடீரென்றே அரச படைகளுக்கு ஏற்பட்டது.
இந்தியப் படைகள் இலங்கை வந்துள்ளதாக வெளியான செய்திகளை அடுத்தே, சமூக ஊடகங்களை தடை செய்யும் முடிவை அரசாங்கம் எடுத்தது.
அவ்வாறான செய்தி சிங்கள மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் அறியும், அரசாங்கத்தின் மீதான அவர்களின் கோபம் அதிகரிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
இலங்கையின் வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், ஆட்சியில் இருந்த அரசாங்கங்களைப் பாதுகாக்க, இந்தியா தனது படைகளை அனுப்பியிருக்கிறது.
ஒருமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியில் இருந்தது. இன்னொரு முறை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தது.
இந்தியா எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்தியா தனது படைகளை அனுப்பவில்லை.
1971இல், ஜே.வி.பி. கிளர்ச்சி தீவிரமடைந்த போது, ஆட்சியில் இருந்து சிறிமாவோ பண்டாரநாயக்கவின் கோரிக்கைக்கு அமைய இந்தியா தனது படைகளை அனுப்பியது.
முக்கியமான பல கேந்திர நிலைகளுக்கு இந்தியப் படையினர் அப்போது பாதுகாப்பு அளித்தனர். இந்தியா மாத்திரமன்றி சீனாவும் அப்போது இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ உதவி அளித்தது. மிக் – 5 போர் விமானங்களை சீனா வழங்கியது.
ஜே.வி.பி. கிளர்ச்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து, இந்தியப் படைகள் திரும்பிச் சென்றன. 1987இல் மீண்டும் ஜே.வி.பி. கிளர்ச்சி தீவிரமடைந்தது.
அதேவேளை, வடக்கில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்தன. ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம், வடமராட்சியை அரச படைகள் கைப்பற்றியிருந்த போது, நெல்லியடி இராணுவ முகாம் கரும்புலித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை அடுத்து, வடக்கில் இராணுவ நடவடிக்கைகள் முடங்கின. இரண்டு பக்கங்களிலும் இலங்கை அரசாங்கம் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்த சந்தரப்பத்தில், இந்தியாவிடம் சரணடைந்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியா தந்திரமாக காய்களை நகர்த்தியது.
இந்திய – இலங்கை அமைதி உடன்பாடு என்ற பெயரில், வடக்கு, கிழக்கில் நாங்கள் அமைதியை உருவாக்குகிறோம், நீங்கள் தெற்கில் ஜேவிபியை கவனித்துக் கொள்ளுங்கள் என்றது இந்தியா. அந்த உடன்பாட்டுக்கு அமையவே, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இந்தியப் படையினர் வடக்கு- கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமைதிப்படை என்ற பெயரில் வந்த இந்தியப்படையினர் பின்னர், விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைகிறோம் என்ற பெயரில், முழு அளவிலான போர் ஒன்றை நடத்தினர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்தியா ஜே.ஆரின் பொறியில் தாங்கள் சிக்கியிருப்பதை உணர்ந்து கொண்டது.
அதற்கிடையில் பிரேமதாச ஆட்சிக்கு வந்ததும், இநதியப் படைகளை வெளியேறுமாறு அறிவித்தார். வேறுவழியின்றி இந்தியா தனது படைகளை வடக்கு கிழக்கில் இருந்து வெளியேற்றியது.
1500இற்கும் அதிகமான படையினரைப் பலிகொடுத்து, இந்தியா வெறும் கையுடன் தனது படைகளை திரும்ப பெற்றுக் கொண்ட பின்னர், இலங்கை விவகாரத்தில் அதீத தலையீடுகளை செய்வதை தவிர்த்துக் கொண்டது.
ஆனாலும், விடுதலைப் புலிகளை அழிப்பதில் இந்தியா உறுதியோடு இருந்ததுடன், அதற்காக இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்தும் செயற்பட்டது.
இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் நெருக்கடியைச் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தியா தலையிட்டிருக்கிறது.
இலங்கையில் மாத்திரமன்றி மாலைதீவிலும், 1988இல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது, இந்தியா தனது படைகளை அனுப்பியது.
பிராந்தியத்தின் முதன்மைச் சக்தியாக இருக்கும் இந்தியா, தனது நட்பு நாடுகளின் அரசாங்கங்களின் கோரிக்கைகளுக்கு அமைய படைகளை அனுப்பத் தயங்கியதில்லை.
இவ்வாறான நிலை மீண்டும் ஏற்படாதென உறுதியாக கூற முடியாது. ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஒன்று கோரிக்கை விடுக்கும் நிலையில், இந்தியா அதனை நிராகரிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
குறிப்பாக இலங்கையில் நெருக்கடி ஏற்படும் போது இந்தியாவினால் தலையிடாமல் இருக்க முடியாது. இலங்கையின் அமைவிட முக்கியத்துவமும், இருதரப்பு உறவுகளும் அதற்கு முக்கிய காரணம்.
அதனால், தற்போதைய அரசாங்கம், நெருக்கடியைச் சந்திக்கும் சூழலில் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டால், நிச்சயமாக, தனது படைகளை அனுப்பி அரசாங்கத்தை இந்தியா பாதுகாக்க முற்படும்.
ஏனென்றால் தற்போதைய அரசாங்கம் பதவியில் இருப்பது இந்தியாவின் நலன்களுக்கு முக்கியமானது. முன்னர் சீனாவுடன் நெருக்கமாக இருந்த இலங்கையின் தற்போதைய அரசாங்கம், தற்போது இந்தியா சொல்வதைக் கேட்கின்ற செல்லப்பிள்ளையாக மாறி விட்டது.
இந்த அரசாங்கத்தை வைத்துக் கொண்டு இந்தியா தனது திட்டங்கள், தேவைகள், நலன்களை உறுதிப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது. இவ்வாறானதொரு நிலையை புதிய அரசாங்கத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு நிறைய களப்பணிகளை ஆற்ற வேண்டியிருக்கும்.
அதாவது தற்போதைய அரசாங்கம், பதவி கவிழ்க்கப்பட்டு புதியதொரு அரசாங்கம் பதவிக்கு வந்தால், இந்தியாவுடன் அண்மையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகள், பல கேள்விக்குறியாக மாறலாம்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், இந்தியா, அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட பல உடன்பாடுகள் தற்போதைய அரசாங்கத்தினால் இரத்துச் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
அதுபோன்ற நிலை ஏற்படுவதை இந்தியா விரும்பாது. அதனால், தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கே இந்தியா அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கும்.
அதற்காக, இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படும் போது, அதனிடம் இருந்து கோரிக்கை வரும் போது தேவைப்பட்டால் இந்தியா படைகளை அனுப்பவும் தயங்காது.
இந்தியா அந்தக் கோரிக்கையை நிராகரித்தால், கொழும்பு உடனடியாக மற்றொரு தெரிவை நாடும். அந்த தெரிவு பெரும்பாலும் சீனாவாக இருக்கலாம்.
சீனாவும் உடனடியாக இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க படைகளை அனுப்பத் தயங்காது. அது இந்தியாவுக்கு பாதுகாப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
1987இல், திருகோணமலையை அமெரிக்கா கைப்பற்றிக் கொள்ளக் கூடிய ஒரு வாய்ப்பு இருந்தது. அங்கு அமெரிக்கப்படைகள் நிலைகொள்வதை தவிர்க்கவே இலங்கைக்கு தனது படைகளை இந்தியா அனுப்பியது.
அதுபோலத் தான், சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியா மட்டுமல்ல எந்த நாடுமே தயங்காது.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலை ஏற்படும் என்பதை இந்தியா நன்கு அறியும்.
ஆக, இப்போதைக்கு இந்தியப் படைகளின் வருகை பற்றிய செய்திகள் பொய்யாக இருந்தாலும், அதுபோன்ற நிலையே எப்போதும் இருக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.
அதனை தீர்மானிப்பது வெறுமனே இலங்கையின் அரசியல், மற்றும் பாதுகாப்பு நிலைமைகளாக மட்டும் இருக்காது. இந்தியாவினதும் பிராந்தியத்தினதும் பாதுகாப்பு சூழலும் கூட அதனைத் தீர்மானிப்பதாக இருக்கும்.
-ஹரிகரன்-