– அரசியல் கட்;சிகள் மத்தியில் இணக்கமில்லை
– அரசியல் யாப்பு மாற்றங்கள் என்ன?
– ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க கட்சிகள் தயாரா?
– குறைந்தபட்ச பொருளாதார திட்டங்கள் இல்லை.
– திறந்த பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட பிரதான கட்சிகள் தயாரா?
– சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகளை ஆட்சியாளர்கள் ஏற்பார்களா?
தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் முற்றிலும்வரலாறு காணாதவை.
அது போலவே இன்று நடைபெறும் போராட்டங்களும் புதிய வரலாற்றைப் படைக்கின்றன. இவை ஒரு வகையில் அரசியல் புரட்சியைத் தோற்றுவித்துள்ளன.
பழமையாகப் புரட்சி என்றால் ஆயுதப் புரட்சியை நினைவூட்டுவார்கள். ஆனால் அரசிடம் காணப்படும் உயிர்கொல்லி ஆயுதங்கள் இரத்தக் களரி ஏற்படுத்துமே தவிர மாற்றத்தைத் தராது மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வல்லன என்பதை அனுபவங்கள் காட்டுகின்றன.
இலங்கையில் தற்போது எழுந்துள்ள போராட்டங்களில் பல அம்சங்கள் முன்னெப்போதையும் விட முன்னேற்றகரமானது மட்டுமல்ல, சமூகங்களில் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுவரும் பண்பு மாற்றங்களையும் அடையாளம் காட்டுகின்றன.
இன்றைய போராட்டங்கள் தேசிய அளவிலும், அதன் பரிமாணத்திலும் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் தேசிய பொருளாதார புரிதல்களையும் தந்துள்ளது.
உதாரணமாக, கொரோனா நோய், இரசாயன பசளை பாவனைக் கட்டுப்பாடு, இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு கைத்தொழில் நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகளில் காட்டப்பட்டுள்ள பாரபட்சம்,
மருந்துத் தட்டுப்பாடு காரணமாக சாமான்ய மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சார விநியோக பிரச்சனைகள் போன்றன சமூகத்தின் சகல பிரிவினரையும் வௌவேறு அளவில் பாதித்துள்ளது.
நாட்டில் வாழும் சமான்ய உழைக்கும் மக்கள் முதல் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், வருமானப் படியில் உயர் நிலையிலுள்ள வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்துறை மற்றும் சிவில் அதிகாரிகள் போன்றோர் பொருளாதாரப் பிரச்சனைகளின் தாக்கத்தை உணர ஆரம்பித்துள்ளனர்.
இதனால் போராட்டங்கள் என்பது வெறுமனே கொழும்பைச் சுற்றியதாகவும், தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டங்களாகவும் இருந்த நிலை மாறி கிராமங்களை நோக்கியதாக மாற்றமடைந்துள்ளது.
குறிப்பாக விவசாயிகள், சிறு வர்த்தகர், அன்றாட உழைப்பில் வாழ்பவர்கள் என்போர் மதம், மொழி போன்றவற்றைக் கடந்து ஒரே தாக்கத்தை உணர்கின்றனர்.
இக் கொடுமையான நிலைக்கு யார் காரணம்? என்பதனையும் மிகவும் தெளிவாகவே இன்றைய ஆட்சியாளரை நோக்கித் திரும்பியுள்ளனர்.
தற்போது எழுந்துள்ள பொருளாதாரப் பற்றாக்குறை குறைந்த வருமானத்தைப் பெறும் பிரிவினரையே மிகவும் பாதித்துள்ளது.
இப் பிரிவினர் தேசம் தழுவிய ரீதியில் மதம், மொழி போன்ற வேறுபாடுகளைக் கடந்து பாதித்துள்ளதால் அவற்றைத் தீர்ப்பதற்கான போராட்டத்தில் இணைந்து செயற்படுவதன் அவசியத்தை அந் நிலமைகளே தீர்மானிக்கச் செய்கின்றன.
அதன் காரணமாகவே ‘ கோதா வீட்டிற்குப் போ‘ என்ற குரல் நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் எழுந்துள்ளது.
அதனால் கடந்த காலங்களில் நாட்டில் நிலவி வந்த இனவாதம் என்பது போலியானது என்பதோடு தோற்கடிக்க முடியும், அது அதிகார சக்திகளின் கூட்டுச் சதி என்பதும் மக்களால் புரியப்பட்டுள்ளது.
அதனால் ஆட்சியாளர்களால் இனவாதத்தைப் பயன்படுத்த முடியவில்லை. இப் போராட்டங்களுக்குப் பின்னால் வெளிநாடுகள் சதி செய்வதாக கூற முடியவில்லை.
போராட்டங்கள் அவ்வாறான எல்லைகளைக் கடந்து சென்றுள்ளது. சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தைப் பயன்படுத்தி தமது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிய பௌத்த உயர்நிலை பிக்குகளால் மக்களின் இப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியவில்லை.
ஏனெனில் இக் கொடுமையான ஊழல் அரசியல்வாதிகளை முன்னணிக்கு அழைத்து வந்தவர்கள் இவர்களே.
தமது பணப் பைகளை நிரப்பி மக்களை வறுமைக்குத் தள்ளியதாக மக்கள் குற்றம் சுமத்தும்போது அந்த மக்களின் பக்கத்தில் நிற்க இப் பிக்குகள் தவறியுள்ளனர்.
இதனால் பௌத்த பிக்குகளால் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்களுக்குத் தலைமை தாங்க முடியவில்லை.
ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியவில்லை.
சிங்கள, பௌத்த பேராதிக்க சிந்தனைகளைப் பரப்பி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தத்தமது சொந்தங்கள், நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோருக்கு அதிக வாய்ப்புகளை அளித்து தேசிய செல்வத்தைச் சுரண்டியது மட்டுமல்ல, அவற்றை வெளிநாட்டு வங்கிகளிலும், சொத்துக்களை குவித்தும் வருவது ‘பண்டோரா’ அறிக்கைகள் மூலம் வெளியாகிய நிலையில் இன்;றைய ஆட்சியாளர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் கூடவே மக்களால் முன் வைக்கப்படுகின்றன.
அரசியல் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி தமது அதிகார துஷ்பிரயோகத்திற்குப் பாதுகாப்புத் தேடி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள ஏற்படுத்திய மாற்றங்கள் நாட்டின் பாதுகாப்பு, இறைமை என்ற போலி வாதங்கள் என்பதை மக்கள் புரிந்துள்ளதால் வெறுமனே ஆட்சி மாற்றம் அல்ல, அரச ஆட்சிப் பொறிமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு புதிய ஆட்சிப் பொறிமுறை உருவாக்கப்பட்டு குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அளவிற்கு மக்கள் கோரிக்கைகள் மாற்றமடைந்துள்ளன.
இங்கு எமது கவனத்திற்குரிய அம்சம் எதுவெனில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளதாகவும், வெளிநாடுகள் சில நாட்டிற்கு எதிராக சதி செய்வதால் பலமான ‘ஹிட்லர்’ போன்ற தேசியவாதி ஒருவர் அவசியம் எனக் கூறி ‘நந்தசேன கோதபய ராஜபக்ஸ’ அவர்களை ஜனாதிபதி ஆக்கினார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே சிங்கள பௌத்த போலிப் பெருந் தேசியவாதத்தின் கொடுமை நிறைந்த தோற்றங்களை மக்கள் இனங் கண்டுள்ளார்கள்.
இதன் விளைவாகவே ஒட்டு மொத்த ராஜபக்ஸ வம்ச அரசியலை நாட்டிலிருந்து அகற்ற வேண்டுமென மக்கள் முழுமையான மாற்றத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளார்கள்.
ராஜபக்ஸ ஆட்சியாளர்கள் இன்னமும் ராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதை பிரதமர், ஜனாதிபதி என்போரின் சமீபத்தைய விஷேச உரைகள் உணர்த்துகின்றன.
கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய நாயகர்கள் என ராணுவத்தினரை ஆட்சியாளர்கள் வர்ணித்து வந்தார்கள்.
உண்மையில் ராணுவத்தினர் மக்களைப் பாதுகாக்கவே தியாகங்களை மேற்கொண்டார்கள் எனில் மக்கள் வாழ்வா? சாவா? எனப் போராட்டம் நடத்தும் வேளையில் ராணுவத்தினர் ஏன் ஊழல் மிக்க அரசியல்வாதிகளைப் பாதுகாத்து வருகிறார்கள்?
ஏன் மக்களைத் துன்புறுத்துகிறார்கள்? என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர். ராணுவம் தனது கடமையை அரசியல் யாப்பின் பிரகாரம் மேற்கொள்ள வேண்டும் எனவும், மக்களின் கோரிக்கைக்கு மாறாக அதிகாரத்தில் குந்தியிருக்கும் போக்கு மக்கள் இறைமைக்கு முரணானது என மக்கள் கருதுகின்றனர்.
இவற்றை அவதானிக்கும்போது ராணுவம் ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதாகவும், மக்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் எண்ணுகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டு வரும் மக்கள் எழுச்சி என்பது கடந்த காலத்தை விட மிகவும் மாற்றமடைந்துள்ளதை நாம் காணலாம்.
தனி நபர் வழிபாட்டுக்கு எதிராக அதாவது ‘கோதபய’ போன்ற தனிநபர்களால் மாற்றங்களைத் தர முடியாது என்பதும், அவை தற்போது அரசியல்வாதிகள், கட்சிகள், குழுக்கள் என்பவற்றிற்கு எதிராக மாற்றமடைந்துள்ளது.
இம் மாற்றங்கள் கடந்த காலங்களில் மக்களின் கவனத்திற்கு வராத பல அம்சங்களை தற்போது முன்னிறுத்தியுள்ளது.
அதாவது மாற்றங்கள் வெளிப்படையானதாகவும், பொறுப்புக் கூறுவனவாகவும் இருப்பதோடு, தனி நபரின் கைகளில் அதிகாரக் குவிப்பு ஜனநாயக விரோத நிலமைகளை நோக்கித் தள்ளுவதாகவும், அதன் அடிப்படையில் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மிக அழுத்தமாக முன்வைக்கப்படுகிறது.
ஊழலுக்கெதிராக சட்டங்கள் இயற்றப்பட்டு தேசிய செல்வம் சூறையாடப்படுவது தடுக்கப்பட்டு குற்றமிழைத்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
தேசிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகள் கடந்த 73 ஆண்டுகளாக நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகவிருந்த இனவாதம் தோல்வியை நோக்கிச் செல்வதையும், மக்கள் தேசிய நல்லிணக்கத்திற்கு ஆதரவாக மாறிவருவதும், மக்கள் மதம், மொழி, சாதி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து வருவது மிகவும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்குக் கட்டியம் கூறுகிறது.
தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சில பிரிவினர் அவ நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதையும் காண முடிகிறது.
இன்றைய ஆட்சியாளர்கள் மிக இலகுவாக அதிகாரத்திலிருந்து வெளியேற மாட்டார்கள் என ஒரு சாராரும், இன்னொரு சாரார் தமிழ் மக்கள் இப் பொராட்டங்களிலிருந்து விலகியிருக்க வேண்டுமெனவும், சிங்கள மக்களே உருவாக்கிய இனவாத ஆட்சியை அவர்களே அகற்ற வேண்டுமெனவும் கூறி சிங்கள, தமிழ், முஸ்லீம் இணைவதற்கு எதிராக பாரிய தடைகளை விதிக்க எண்ணுகின்றனர்.
மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் வரலாறு காணாத மாற்றங்கள் காரணமாக அதிகார வர்க்கம் தடுமாற்றத்தில் தள்ளப்பட்டுள்ளதால் எடுக்கும் முடிவுகளின் தாக்கங்கள் இவை என்பதை இவர்கள் காண மறுக்கின்றனர்.
உதாரணமாக, சமீப காலமாக ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முயற்சிப்பதாகவும், அதனடிப்படையில் மந்திரிகள் ராஜினாமா செய்தனர்.
அது மட்டுமல்ல நாடு தளுவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியின் சூழ்ச்சி வலையில் சிக்கவில்லை. அதே போலவே மக்கள் இச் சட்டங்களை உதாசீனம் செய்து வீதிகளில் ஆயிரக் கணக்கில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் அர்த்தம் என்ன?
ஜனாதிபதி அதிகாரம் செயற்படவில்லை. அரசியல் யாப்பு அடிப்படையிலான ஆட்சி தோல்வியை நோக்கிச் செல்கிறது என்பதாகவே அர்த்தங் கொள்ள முடியும்.
அது மட்டுமல்ல புதிதாக அமைச்சரவையில் இணைய வரும்படி எதிர்க்கட்சிகளைக் கேட்ட போதிலும் யாரும் முன்வரவில்லை.
தனது பதவியை ராஜினாமாச் செய்த முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி நிதி அமைச்சர் வேறு எவரும் முன் வராததால் பதவியை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பிறப்பித்திருந்த ஊரடங்கு உத்தரவு இரண்டு நாட்களுக்குள்ளாகவே மீளப் பெறப்பட்டது.
நாட்டின் அரசியல் நிலமைகள் இவ்வாறு செல்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்குடன் ஜனாதிபதி மூன்று பொருளாதார நிபுணர்களை தமக்கு ஆலோசனை வழங்க நியமித்துள்ளார்.
இவர்கள் சர்வதேச நாணய சபையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்வர்.
நிபுணர்கள் தேவையான வேலைத் திட்டங்களைத் தயாரித்த போதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான ஆட்சிப் பொறிமுறை இல்லாத நிலையில் அதற்கான வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வி எழுகிறது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பிரதான அமைச்சர்கள் பலர் ஊழலில் சிக்கியிருப்பதாகவும், இவ்வாறான ஊழல் குறித்து மக்கள் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் இந்த ஊழல்வாதிகளுடன் எவ்வாறான அரசைத் தோற்றுவிக்க முடியும்?
மக்கள் ஊழல் சக்திகளுடன் மீண்டும் ஒரு அரசை அமைப்பதை ஏற்பார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
நாம் இங்கு இரண்டு அம்சங்களில் எமது கவனத்தைச் செலுத்துவது அவசியமாகிறது. அதாவது பொருளாதார அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதாயின் அல்லது கடன் வழங்கும் நாடுகள் மத்தியில் நம்பிக்கையைத் தோற்றுவிப்பதாயின் ஸ்திரமான ஆட்சி ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
எனவே முதலில் அரசியல் நெருக்கடி சுமுக நிலைக்குத் திரும்ப வேண்டும். இம் மாற்றமே சர்வதேச நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பின்புலத்தை வழங்க முடியும்.
அவ்வாறாயின் அரசியல் பேச்சுவார்த்தைகள் நாட்டின் எதிர்கால பொருளாதாரம் தொடர்பாகவும் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் நாட்டின் பொருளாதார திட்டமிடல் தொடர்பாக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்துக்கள் இதுவரை இல்லை.
குறிப்பாக ஆளும் கட்சி மத்தியில் திறந்த பொருளாதாரத்தைத் தொடர்ந்து பேணுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.
உதாரணமாக, நாட்டின் முக்கியமான பொருளாதார மையங்கள் அந்நிய நாடுகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு துறைமுக நகர் என்ற பெயரில் சீன உதவியுடன் கட்டப்படும் நகரம் வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்கும் நோக்கத்தில் உருவாக்கப்படுகிறது.
இந்த துறைமுக நகர் திட்டம் சீனாவின் குடியேற்ற நாடாக இலங்கையை மாற்றிவிடும் ஆபத்து உள்ளதாக பலரும் கருதுகின்றனர். அது மட்டுமல்ல, சீன நெருக்கம் இந்திய நலன்களுக்கு எதிராக மாறினால் மேலும் பல ஆபத்துகள் உண்டு.
ஆளும் பொதுஜன பெரமுன திறந்த பொருளாதாரத்தை நோக்கிச் செல்கையில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமூக சந்தைப் பொருளாதாரக் கொள்கைகளை வற்புறுத்துகிறது.
அதாவது திறந்த சந்தைப் பொருளாதாரத்தை ஆதரித்த போதிலும் மிகவும் வலிமையான திறந்த சந்தைப் பொருளாதாரத்தை மேற்பார்வை செய்யும் அரசை நிர்மாணிப்பதாகக் கூறுகிறது.
எனவே திறந்த பொருளாதாரம், சமூக சந்தைப் பொருளாதாரம் என்பவற்றிற்கு மத்தியில் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் சில கூறுகளை ஆதாரமாகக் கொண்ட தேசிய பொருளாதாரக் கட்டுமானத்தை உருவாக்கப் போவதாக ஜே வி பி இனர் கூறுகின்றனர்.
எதிர்காலப் பொருளாதாரக் கட்டுமானம் தொடர்பாக இணக்கமில்லாத போக்கு பிரதான கட்சிகள் மத்தியில் காணப்படுகையில் சர்வதேச நாணயசபையின் ஆலோசனைகளை ஏற்கும் எவரும் பெரும் சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் நிலை ஏற்படலாம்.
உதாரணமாக, உலக வங்கி தனியார் வர்த்தகத்தை ஆதரிக்கிறது. அதன் மூலமாகவே தேசிய பொருளாதாரம் வளரும் எனக் கூறுகிறது.
அதே போலவே அரசின் செலவினங்களைக் குறைப்பது அவசியம் என்ற ஆலோசனையும் வழங்கப்படும்.
உதாரணமாக, பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகளை ஆதரித்த போதிலும், அவை தேசிய வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் வரவு, செலவை வற்புறுத்துகிறது.
இன்றைய ஆட்சியாளர்கள் பொருளாதார அடிப்படையில் பாதித்துள்ள மக்களுக்கான கொடுப்பனவுகள் என்ற போர்வையில் பல கோடி பணம் அரசியல் தேவைகளை நோக்கிப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல தேசிய பொருளாதாரம் வளராத போதிலும், நாணயத் தாள்களை அச்சடித்து விநியோகித்து தற்போது பணவீக்கம் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்துவதானால் அதனால் பாதிக்கப்படுவது சமான்ய மக்களே. சர்வதேச நாணய சபையின் ஆலோசனைகள் மேலும் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். ஆனால் தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பது எப்படி? என்பது பிரதான கேள்வியாகும்.
எனவே உலக வங்கியிடம் உதவிகளைக் கோருவதால் நாட்டிப் பாலும் தேனும் ஓடும் என்ற நம்பிக்கையை சில சந்தைப் பொருளாதார அரசியல்வாதிகள் விதைக்கின்றனர்.
வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை நிலவும் இன்றைய நிலையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன தேசிய நெருக்கடியை தணிக்குமா? உக்கிரப்படுத்துமா?
( தொடரும்)