5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள தி அக்சியோமா என்ற அதி நவீன சொகுசுக் கப்பல் இது. தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பெரு முதலாளி ஒருவருக்கு சொந்தமான இந்த சொகுசுக் கப்பல் ஜிப்ரால்டர் நீரிணையில் பறிமுதல் செய்யப்பட்டது.

5.7 கோடி பிரிட்டன் பவுண்டு மதிப்புள்ள தி அக்சியோமா என்ற அதி நவீன சொகுசுக் கப்பல் இது. தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பெரு முதலாளி ஒருவருக்கு சொந்தமான இந்த சொகுசுக் கப்பல் ஜிப்ரால்டர் நீரிணையில் பறிமுதல் செய்யப்பட்டது.

பல பத்தாண்டுகளாக தவறாக ஈட்டிய பல்லாயிரம் கோடி டாலர் பணத்தை ரஷ்யப் பெருமுதலாளிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி பதுக்கிவைத்துள்ளனர். இதனால், இந்த பணத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான செயலாக மாறியுள்ளது.

யுக்ரேன் மீது அமெரிக்கா படையெடுக்கத் தொடங்கியது முதல் உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த கருப்புப் பணத்தைக் கண்டுபிடிக்க தடைகளை விதித்தும், புதிய சட்டங்களை இயற்றியும் முயன்று வருகின்றன. இதன் மூலம் ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமான பெருமுதலாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த இந்த நாடுகள் முயல்கின்றன.

உலகம் முழுவதும் எவ்வளவு ரஷ்யக் கருப்புப் பணம் உள்ளது?

ரஷ்யர்கள் சுமார் 1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கான பணத்தை வெளிநாடுகளில் “கருப்புப் பணமாக” பதுக்கியிருப்பதாக அட்லாண்டிக் கவுன்சில் என்ற அமெரிக்க சிந்தனைக் குழுமம் கூறியுள்ளது.

2020ம் ஆண்டில் வெளியான இந்த அமைப்பின் அறிக்கையில் இந்தப் பணத்தில் கால்வாசி ரஷ்ய அதிபர் புதினாலும், அவரது நெருங்கிய கூட்டாளிகளாலும் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெரும்பணக்கார கூட்டாளிகளை ஆங்கிலத்தில் ‘அலிகார்ச்’ என்று அழைக்கிறார்கள். அலிகார்ச் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வெகுசிலரின் ஆதிக்கம்’ என்று பொருள். ஒரு தொழில்துறையை வெகுசிலரே கட்டுப்படுத்தும் நிலை இருந்தால் அதை அலிகார்ச்சி என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

“உளவு, பயங்கரவாதம், தொழில்துறை உளவு, லஞ்சம், அரசியல் தகிடுதித்தங்கள், பிழையான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பல தீய செயல்களுக்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்துவதாக,” அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தக் கருப்புப் பணம் உருவாவது எப்படி?

“அரசு பட்ஜெட்டில் இருந்து திருடவும், தனியார் தொழில் நிறுவனங்களில் இருந்து பணம் பறிக்கவும், லாபகரமான தொழில்களை முழுதாகப் பறித்துக்கொள்ளவும்,” தனது

நெருங்கிய கூட்டாளிகளை புதின் ஊக்குவிப்பதாக மற்றொரு அமெரிக்க சிந்தனைக் குழுமமான நேஷனல் எண்டோமென்ட் ஃபார் டெமாக்ரசி கூறுகிறது. இந்த பாணியில் அவர்கள் சொந்தமாக பல நூறு கோடி டாலர்களை குவித்திருப்பதாகவும் இந்தக் குழுமம் கூறுகிறது. 2004 – 2007 காலகட்டத்தில் எண்ணெய் பெருநிறுவனமான கஸ்பிரோம் நிதியில் இருந்து 60 பில்லியன் டாலர் பணம் புதினுக்கு நெருக்கமானவர்களுக்கு கைமாறியதாக ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்கள் போரிஸ் நெம்த்சோவ், விளாதிமிர் மிலோவ் ஆகியோர் கூறுகின்றனர்.

புதினுக்கு நெருக்கமானவர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் ஆனதாகவும், புதினின் செல்வத்தை பெருக்கவும் அவர்கள் உதவி செய்வதாகவும் இன்டர்நேஷனல் கன்சார்ட்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ட்ஸ் என்ற புலனாய்வு இதழாளர்கள் சர்வதேச அமைப்பு வெளியிட்ட பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் கூறுகின்றன.

பணம் எங்கே இருக்கிறது?

இப்படி ஈட்டப்பட்ட கருப்புப் பணத்தில் பெரும்பகுதி சைப்ரசுக்கு செல்வது வரலாறு. அங்கு நிலவும் சாதகமான வரிச் சூழ்நிலையால் கவரப்பட்டு இந்தப் பணம் சைப்ரஸ் செல்கிறது. 2013ல் மட்டுமே 36 பில்லியன் டாலர் ரஷ்யப் பணம் அங்கே சென்றதாக கூறுகிறது அட்லாண்டிக் கவுன்சில்.

பெரும்பாலான இந்தப் பணம் போலி, பெயரளவு நிறுவனங்கள் மூலமாகவே பரிமாற்றப்படுகிறது. இது போன்ற நிறுவனங்கள் பெயரில் இருந்த பல்லாயிரம் வங்கிக் கணக்குகளை மூடும்படி சர்வதேச செலாவணி நிதியம் 2013ல் சைப்ரசை வலியுறுத்தியது.
ரஷ்யப் பணத்தின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் தி பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்.

ரஷ்யப் பணத்தின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் தி பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்.

பிரிட்டனின் வெளிப்புறப் பிராந்தியமான தி பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் கேமேன் தீவுகள் போன்றவற்றுக்கும் இந்தப் பணம் பரிமாற்றப்படுகிறது.

2018ல் வெளியிடப்பட்ட குளோபல் விட்னஸ் அறிக்கையின்படி வரி குறைவான பகுதிகள் என்று அறியப்படும் இடங்களில் ரஷ்யப் பெருமுதலாளிகள் 45.5 பில்லியன் டாலர் அளவுக்கான பணத்தை வைத்துள்ளனர்.

இந்தப் பணத்தின் ஒரு பகுதி உலகின் நிதிக் கேந்திரங்களான நியூயார்க், லண்டன் போன்ற இடங்கள் வரை செல்கின்றன. அங்கே முதலீடு செய்யப்பட்டு வருவாயும் ஈட்டப்படுகிறது.

குறைந்தபட்சம் 2 பில்லியன் டாலர் அளவுக்கான பிரிட்டன் சொத்துகள் நிதிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷ்யர்களுக்கு, அல்லது கிரம்ளின் மாளிகையோடு தொடர்புடையவர்களுக்கு சொந்தமானவை என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற ஊழல் எதிர்ப்பு நிறுவனம் கூறுகிறது.

ஆர்கனைஸ்டு கிரைம் அன்ட் கரப்ஷன் ரிப்போர்ட்டிங் பிராஜக்ட் ரஷ்யப் பண மோசடியின் ஆழ அகலங்களை தனது 2014ம் ஆண்டு அறிக்கையில் மேலும் அம்பலப்படுத்தியது.

2011 – 2014 காலகட்டத்தில் 19 ரஷ்ய வங்கிகள் 20.8 பில்லியன் டாலர் அளவிலான பண கடத்தலில் ஈடுபட்டதாக அது குறிப்பிட்டது. 96 நாடுகளில் உள்ள 5,140 நிறுவனங்களுக்கு இந்த பணம் கடத்தப்பட்டதாக அது கூறியது.

இந்தப் பணம் எப்படிப் பதுக்கப்படுகிறது?

வழக்கமாக ஆங்கிலத்தில் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் போலி நிறுவனங்கள் மூலமாகவே ரஷ்யப் பெருமுதலாளிகள் தங்கள் பணத்தைப் பதுக்கிவைக்கின்றனர்.

“இந்த முதலாளிகள் உலகின் சிறந்த வழக்குரைஞர்களை, தணிக்கையாளர்களை, வங்கியாளர்களை, செல்வாக்கு செலுத்துவோரை தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் தங்கள் பணத்தைப் பதுக்கவும், கடத்தவும் வழிவகைகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர்,” என்கிறது அட்லாண்டிக் கவுன்சில்.

“பெயர் தெரியாத போலி நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நீதியமைப்புகளில் வழக்குரைஞர்களை வைத்துள்ள ஒரு பெருநிறுவனம் அந்த நாடுகளுக்கு இடையில் மின்னல்வேகத்தில் பணத்தை பரிமாற்றுகிறது”.

ஒரே ஒரு நிறுவனம் 2,071 ஷெல் கம்பெனி எனப்படும் போலி நிறுவனங்களை ரஷ்ய முதலாளிகளுக்காக உருவாக்கியதாக 2016ல் வெளியான பனாமா பேப்பரில் அம்பலப்படுத்தப்பட்டது.

ரஷ்யப் பெருமுதலாளிகள் பணத்தை தோண்டி எடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன?

ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகள் இந்த ரஷ்யப் பணத்தை தோண்டி எடுக்க பல தொடர் நடவடிக்கைகளை அறிவித்தன. ‘கிளப்டோ கேப்சர்’ நடவடிக்கைப் படையை அமைத்தது அமெரிக்கா. அந்நாட்டின் நீதித்துறையால் நடத்தப்படும் இந்த நடவடிக்கையின் நோக்கம் ரஷ்ய பெருமுதலாளிகளால் சட்டவிரோதமாக திரட்டப்பட்ட பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்வதே.

சொத்துகளை வாங்க குறிப்பிட்ட நபர்கள் எங்கே பணம் சம்பாதித்தார்கள் என்பதை நிரூபிக்க கோரும் அன்எக்ஸ்பிளெய்ன்ட் வெல்த் ஆர்டர்ஸ் என்ற உத்தரவுகளை அதிக அளவில் பயன்படுத்த பிரிட்டன் நடவடிக்கை எடுத்துள்ளது.

சைப்ரஸ் – ரஷ்யப் பணத்தின் சொர்க்கபுரி.

வங்கியிலோ அல்லது கட்டுமான சொசைட்டியிலோ உள்ள பணம் குற்றச்செயல்களோடு தொடர்புடையது என்று சந்தேகப்பட்டால், அவற்றை முடக்க அக்கவுன்ட் ஃப்ரீசிங் ஆர்டர்கள் எனப்படும் உத்தரவுகள் வங்கிக்கு உதவும்.

இதைப்போல பல நாடுகளிலும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Share.
Leave A Reply