கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாகவது,
“ காலி முகத்திடலில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாட்டு மக்களை சந்தித்து அவர்களின் எண்ணங்கள் மற்றும் முறைப்பாடுகளைக் கேட்டறிய நான் தயாராக இருக்கிறேன். இது நம் அனைவருக்கும் கடினமான நேரம் என்பதைப் புரிந்துகொண்டு, நாட்டுக்காக சாத்தியமான, நம்பத்தகுந்த நடவடிக்கைகளைச் சந்திக்கவும் விவாதிக்கவும் அவர்களை நான் கலந்துரையாட அழைக்கிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக இன்று இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தில் சில கோரிக்கைகள் அடங்கிய பதாகையை ஏந்தி பதிலளித்துள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
அதில்,
மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள்.
01. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்.
02. ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது.
03. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரம், கல்வி போன்றவை…) மறுசீரமைப்பதற்காக 19 ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தி 06 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல்.
04. அனைத்து திருடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட ராஜபக்ஷ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக இடைக்கால அரசாங்கம் அமைக்கவும் செயல்படுத்தவும் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
05. 06 மாதங்களுக்குள் பாராளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுத்தல்.
இந்த கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை போராட்டத்தை கைவிட தயாராக இல்லை
போன்ற காரணங்களை குறிப்பிட்டு பிரதமரின் கோரிக்கைக்கு பதில் வழங்கியுள்ளனர்.
இதேவேளை, கடந்த 9 ஆம் திகதி முதல் 5 நாட்களாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதவிவிலக வேண்டுமென தெரிவித்து கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் எழுச்சிப் போராட்டத்தை மக்கள் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இரவு பகலாக முன்னெடுத்து வருகின்றனர்.