தமிழ், சிங்கள புதுவருடப்பிறப்பு தினமான நேற்றையதினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொழும்பு காலிமுகத்திடலுக்கு வருகை தந்து அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

 

இந்நிலையில் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டமானது கடந்த 9 ஆம் திகதி முதல் 7 ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.

கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் 7 ஆவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு போராட்டம் தொடர்கின்றது.

நேற்று போராட்ட களத்தில் புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறன. ரபான் அடித்து மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு வெவ்வேறு விதங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.

பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இன்றைய நாள் வரை எவ்வித வன்முறைகளும் இல்லாது மிகவும் அமைதியான முறையில் இந்த அரச எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயாராக இருக்கின்றது என்று கோரிக்கை விடுத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த கோரிக்கைக்கு செவிமடுக்காது, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்., ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது போன்ற சில கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர்.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி தமிழ், சிங்களப்புத்தாண்டுக்கொண்டாட்டமான நேற்றையதினம் (14)  நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களும், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

Image

இவ்வாறான நிலையில், காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு நேற்று பொலிஸ் சார்ஜன் ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சம்பவம்  பலரையும் ஈர்த்தது.

Image

நாட்டில் தற்போது உள்ள நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டுள்ள அழுத்தங்களை  தன்னால் சகிக்க முடியாது எனவும், நாளை தனது தொழில் இல்லாமல் போனாலும் தான்  சுரங்கங்களில் பணியாற்றி ஏனும் வாழ்வதாக அந்த பொலிஸ்  உத்தியோகத்தர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்தார்.

Image

அத்துடன் தன்னை போலவே மனச் சாட்சியுடன் போராடும்  பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் திணைக்களத்தில் இருப்பதாக தெரிவித்த அந்த உத்தியோகத்தர்,  அவர்களுக்கும் போராட்டக்களத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

Image

‘ உங்கள்  ஒவ்வொரு பெட்டன் பொல்லுத் தாக்குதலும், ஒவ்வொரு கண்ணீர்ப் புகைக் குண்டும் இந்த பிள்ளைகளைத் தாக்காது. அது உங்கள் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையுமே  சென்றடையும்.’ என இதன்போது அந்த பொலிஸ் உத்தியோகத்தர்  அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கி தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், தன்  மனச்சாட்சியை திறந்து போராட்டத்துக்கு ஆதரவளித்த குறித்த  பொலிஸ்  சார்ஜன் தற்போது, பொலிஸ்  விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் நம்பகரமான வட்டாரங்கள் தகவலளித்தன.

Share.
Leave A Reply