அனுமதியின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபரொருவர் கினிகத்தனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கினிகத்தனை பொலிஸ் பிரிவில் கல்பொதுயாய பிரதேசத்தில் வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமையவே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளை அழைத்து அவர்களது ஒத்துழைப்புடன் குறித்த வீட்டை சோதனைக்குட்படுத்திய போது 230 லிட்ரோ சிலிண்டர்களும் , எரிவாயு அற்ற 3 சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் போது கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 52 வயதுடைய கல்பொதுயாய , பலந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டவற்றில் 12.5 கிலோ கிராம் எடையுடைய 177 சிலிண்டர்களும் , 5 கிலோ எடையுடைய 28 சிலிண்டர்களும் , 2.4 கிலோ எடையுடைய 25 சிலிண்டர்களும் , 12.5 கிலோ எடையுடைய எரிவாயு நிரப்பப்படாத 3 சிலிண்டர்களும் உள்ளடங்குகின்றன.
இது குறித்த வழக்கு நாளை செவ்வாய்கிழமை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.