இராணுவத்தின் குழுவொன்று  போராட்டக் காரர்களைப் போன்று ,  கொழும்பு – காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்துக்கு அண்மித்த கோட்டா கோ கம போராட்ட களத்துக்கு அனுப்ப தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருவதாகவும், அதன் பின்னணியில் பாரிய சதி உள்ளதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, அது குறித்து ஆராய இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு நேற்று (17) கணேமுல்ல இராணுவ முகாமுக்கு விஜயம் செய்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் மட்டக் குழுவொன்று இவ்வாறு  கம்பஹா, கணேமுல்ல – கடவத்த வீதியில் அமைந்துள்ள  இராணுவ முகாமுக்கு  இவ்வாறு  சென்று  விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த உயர் மட்ட குழுவானது நேற்று முன் தினம் (16) இராணுவத்தின் உயரதிகாரிகளை அழைத்து, குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கேட்டிருந்த நிலையிலேயே நேற்று (17) முகாமுக்கு சென்று சுமார் ஒரு மனி நேரத்துக்கும் அதிகமான நேரம் அங்கு தங்கியிருஇந்து, முகாமின் பல இடங்களை மேற்பார்வை செய்தனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்னர், கணேமுல்ல இராணுவ முகாமில் இராணுவ குழுவொன்றுக்கு போராட்ட கலத்தில் பயன்படுத்தப்படும் ஆர்ப்பாட்ட கோஷங்களை சொல்லிக் கொடுத்து பயிற்றுவிப்பதை வெளிப்படுத்தும் காணொளியொன்று சமூக வளைத் தளத்தில் வெளியானது.

இந் நிலையில் இராணுவத்தினர் அல்லது வேறு தரப்பொன்று காலி முகத்திடலை அண்மித்த போராட்ட களத்துக்குள் நுழைந்து அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பி, பின்னர் பாதுகாப்பு தரப்புடன் முறுகல் நிலைமையை ஏற்படுத்தி, அதனூடாக பாதுகாப்பு தரப்பை பலப்பிரயோகம் செய்ய தூண்டும் சதித்திட்டம் ஒன்று உள்ளதாக அந்த காணொளி ஊடாகவும் பிற தகவல்கள் ஊடாகவும் வெளிப்படுத்தப்பட்டன.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையிலேயே, குறித்த ஆணைக் குழு, அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து, இவ்வாறு நேற்று கணேமுல்ல முகாமுக்கும் சென்று ஸ்தல ஆராய்வுகளை முன்னெடுத்தனர்.

இவ்வாறான நிலையிலேயே நாட்டில் தற்போதுள்ள நிலைமையில் பொலிஸாரால் அழைக்கப்பட்டால் மாத்திரமே அவர்களுக்கான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு இராணுவம் நடவடிக்கை எடுக்கும் எனவும் மாறாக தற்போது பல்வேறு குழுக்களால் குறிப்பிடப்படுவதைப் போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் மத்தியில் வன்முறையைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் செயற்படவில்லை என்றும் இராணுவ ஊடகப்பிரிவு  அறிக்கை வெளியிட்டது.

அத்துடன் அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பிரயோகிப்பதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் எவ்விதத்திலும் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என பாதுகாப்பு செயலாளரை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை இவ்வாறிருக்க,  காலி முகத்திடலை அண்மித்த போராட்டக் காரர்களின் நலன் மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு  பூரண அவதானம் செலுத்தியுள்ளது.

நேற்று முன் தினம் (16) இரவு, போராட்ட களத்துக்கு வந்த  ஆணைக் குழுவின் விசாரணைப் பணிப்பாளர் ஒருவர் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் ஆரயந்ததுடன், நேற்றும் (17) விசாரணைப் பணிப்பாளர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவினர் முழுமையாக இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு ஒன்றுக்கு அமைய அவர்கள் இவ்வாறு அந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

குறிப்பாக, கோட்டா கோ கம எனும் ஆர்ப்பாட்ட தளமானது, அரசாங்கத்தால் ஆர்ப்பாட்டம் செய்யவென  வேறு படுத்தப்பட்ட பூமிப் பகுதியிலேயே அமைந்துள்ள நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ( மலசல கூடங்கள், நீர் வசதி) போதுமானவசதிகள்  இல்லாமை,  அப்பகுதியில் தொலை தொடர்புகள் வசதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடங்கல்கள், இடையூறுகள்  தொடர்பில் இதன்போது ஆணைக் குழுவின் அதிகாரிகள் விஷேட அவதானம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply