ராஜபக்ஷ குடும்பத்தினர் இல்லாத புதிய அமைச்சரவை இன்று இலங்கையில் பதவியேற்றுள்ளது. ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு – கோட்டை பகுதியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இதன்படி, பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டக் களத்தில் தமிழிலும் ஒலித்த தேசிய கீதம்
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: “மூன்று ஆண்டுகளாக கண்ணீர் வடிக்காத நாளே இல்லை” – ஒரு தாயின் வேதனை
கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக ரமேஷ் பத்திரண பதவிப் பிரமாணம் செய்துகொண்டதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதற்கிடையே, இந்த புதிய அமைச்சரவை நாட்டின் பிரச்னையை தீர்க்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சராக திலும் அமுனுகமவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக கனக ஹேரத்தும் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
அத்துடன், தொழில் அமைச்சராக விதுர விக்ரமநாயக்க பதவி பிரமாணம் செய்துகொண்டதுடன், விவசாயம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக ஜனக்க வக்கும்புர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சராக ஷெஹான் சேமசிங்கவும், நீர் வழங்கல் அமைச்சராக மொஹான் பிரியதர்ஷன டி சில்வாவும் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
இலங்கை – புதிய அமைச்சரவை பதவியேற்பு
விமலவீர திஸாநாயக்க வனவிலங்குகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அதேவேளை, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சராக காஞ்சன விஜேசேகர பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக தேனுக விதானகமனே பதவியேற்றதுடன், ஊடகத்துறை அமைச்சராக நாலக்க கொடஹேவா பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சுகாதார அமைச்சராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன்ன பதவியேற்றதுடன், சுற்றுச்சூழல் அமைச்சராக நஷிர் அஹமட் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சராக பிரமித்த பண்டார தென்னக்கோன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
துறை சாராதவர்கள்
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில், இலங்கையில் இன்று நியமிக்கப்பட்ட அமைச்சரவையானது, சர்வதேசத்தையும், கடன் வழங்கும் நிறுவனங்களையும் சமாளிக்கும் வகையிலேயே நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நிலையான அமைச்சரவை ஒன்று காணப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களில் ஒரு சிலரே துறைசார்ந்தவர்கள் என்பதுடன், ஏனைய பெரும்பாலானோர் துறை சாராதவர்கள் என கூறப்படுகிறது.
அதேவேளை, ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இந்த புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை.
நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, ஷசிந்திர ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சரவையிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையிலேயே இந்த அமைச்சர் நியமனம் இடம்பெற்றுள்ளது.
ராஜபக்ஷ குடும்பத்தில் தற்போது அமைச்சர்களாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாத்திரமே பதவி வகித்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையானது, இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எந்தவகையிலும் தீர்வை பெற்றுக்கொடுக்காது என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.