அரசாங்கம் அமைச்சரவை நியமனத்தை செ ய்துள்ளதுடன் 19 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருக்கின்றது.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. நாடளாவிய ரீ தியி ல் ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்து இருக்கின்றன.
வீதிகளை மறித்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு டொலர் கடனை பெ ற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த பின்னணியில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதையே சகலரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டில் தொடர்ந்து அரசியல் நெருக்கடிகள் வலுவடைந்து கொண்டே செல்கின்றன. மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் மக்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
அதாவது தமது தொழில் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல எரிபொருளை பெற்றுத்தாருங்கள் என்று கோரிக்கை விடுத்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் ஆரம்பித்ததும் அரசாங்கத்தில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியின் பக்கம் சென்று அமர்ந்து விட்டனர். அதாவது தாம் எதிர்க்கட்சியுடன் சேரவில்லை.
எனினும் எதிர்க்கட்சியின் பக்கம் சுயாதீனமாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவதாக அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசாங்கமானது இரண்டு அணுகுமுறைகள் ஊடாக இந்த பிரச்சினைகளை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
அதாவது முதலாவதாக 19 பேரை கொண்ட ஒரு அமைச்சரவை நியமிக்கப்பட்டு இருக்கின்றது. மூத்த அரசியல் வாதிகள் மிகவும் குறைவாகவும் இளம் பிரதிநிதிகள் மிக அதிகமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ள வகையில் புதிய அமைச்சரவை நாட்டில் நியமிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் 21 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவது தொடர்பாகவும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு இந்த இரண்டு அணுகுமுறைகள் ஊடாக தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதை காணமுடிகிறது.
இதனை எதிர்க்கட்சிகளும் சுயாதீன அணிகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. அத்துடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றவர்கள் தொடர்ந்து அதனை நடத்துகின்றனர்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து அவர்கள் அந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
இந்த சூழலில் கடந்த இரண்டு வாரகாலமாக இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது தொடர்பாக ஆராய்ந்து கொண்டுவந்த அரசாங்கம் தற்போது இந்த இரண்டு அணுகுமுறைகளை முன்வைத்திருக்கிறது.
முதலில் அமைச்சரவையை பொறுத்தவரையில் மிகவும் இளம் பிரதிநிதிகள் இம்முறை இடம்பெற்றுள்ளனர்.
மூத்த அரசியல் வாதிகளாக ஒரு சிலர் மட்டுமே இம்முறை அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகா ர அமைச்சராக ஜி எல். பீரிஸ், சுற்றுலாத்துறை மற்றும் உள்ளக பாதுகாப்பு துறை அமைச்சராக பிரசன்னரணதுங்கவும் இடம்பெற்றுள்ளனர்.
ஏனைய சகலரும் ஏற்கனவே இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்டவர்களும் அமைச்சு பதவிகள் இன்றி செயற்பட்டவர்களுமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி மக்களின் போராட்டங்களை அடுத்து முழு அமைச்சரவையும் பதவி விலகியது.
அதனை அடுத்து ஜனாதிபதியும் சகல கட்சிகளுக்கும் கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் அதனை பிரதான எதிர்க்கட்சிகள் நிராகரித்து விட்டன. ஆளுங்கட்சியில் சுயாதீனமாக செயற்படுகின்றமை 41 பேரைக் கொண்ட அணி அதனை சாதகமாக ஆராய்ந்தது.
எனினும் அதில் சுதந்திரக் கட்சியின் சாந்த பண்டாரவுக்ருக்கு இராஜாங்க அமைச்சு பதவியை அரசாங்கம் வழங்கியதால் சுதந்திரக் கட்சி இடைக்கால அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இடம் பெறமாட்டோம் என்று அறிவித்துவிட்டது.
இந்தச் சூழலிலேயே ஜனாதிபதி தற்போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைச்சரவையை நியமித்திருக்கிறார்.
தற்போதைய சூழலில் அமைச்சரவையை நியமிக்கவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு இருக்கின்றது.
காரணம் நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர், திறை சேரியின் செயலாளர் ஆகியோர் அமெரிக்காவின் இவாஷிங்டன் நகரில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இலங்கைக்கு கடன் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றனர். வெள்ளிக்கிழமை வரை இந்த பேச்சுவார்த்தை தொடர்கின்றது.
எனவே இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் இடம் பெறுவதற்கு இலங்கையில் ஒரு அமைச்சரவை இருக்க வேண்டும்.
எனவே ஜனாதிபதி அவசர அவசரமாக தற்போ து இந்த 19 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்திருக்கிறார்.
இதனை அரசாங்கம் தற்போது இந்த போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு ஒரு தீர்வாக ஒரு அணுகுமுறையாக வெளிப்படுத்தி இருக்கின்றது.
ஆனால் மக்களை பொறுத்தவரையில் அதனை ஏற்றுக்கொள்ளாத வகையிலேயே தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அரசாங்கம் இரண்டாவதாக ஒரு அணுகுமுறையை முன்வைத்து இருக்கின்றது.
அதாவது அரசாங்கமானது மீண்டும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கிய விடயங்களை உள்வாங்கி 21 ஆவது திருத்தச் சட்டமாக கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருக்கின்றது.
அதாவது அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் புதிதாக அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
விரைவில் இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்திருக்கிறார்.
கட்சி தலைவர் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சியின் எம்.பி .யான அமைச்சர் தினேஷ்குணவர்த்தன 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவரும் நோக்கில் 21 ஆவது திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ,மற்றும் பிரதமர் தலைமையில் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அறிவித்திருக்கிறார்.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபே வர்த்தன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இதன்போதுகருத்து வெளியிட்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் 19 ஆவது திருத்த சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதற்குதாம் ஆதரவு அளிப்பதாகவும் அது தொடர்பில் தம்மிடமும் யோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்
இதே வேளை கடந்த திங்கட்கிழமை அமைச்சரவை நியமனத்தின் பின்னர் அறிக்கை யொன்றை வெளியிட்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் நலன்கருதிஅரசியலமைப்பு திருத்தம் ஒன்றை அமைச்சரவைக்கு விரைவில் முன்வைக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
அத்துடன் செ வ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கிய விடயங்களை உள்ளடக்கி புதிய திருத்தத்தை கொண்டுவருவதாக அறிவித்தார்.
எனினும் எதிர்க்கட்சிகள் 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் 21 ஆவது திருத்தச்சட்டமாக கொண்டுவருவதற்கு ஆதரவு வழங்கினாலும் தற்போதைய நெருக்கடிக்கு அதனை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்து இருக்கின்றன.
அதாவது தற்போதைய நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கம் பதவி விலகவேண்டும் என்ற விடயத்தையே எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மிகத்திட்டவட்டமாக அறிவித்தன.
இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்படும் பட்சத்தில் அது நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். காரணம் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையானது ஜனாதிபதிக்கு சர்வ வல்லமை பொருந்திய அதிகாரங்களை வழங்கியது. அதற்கு எதிராக அப்போதிருந்தே பல எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்நிலையில் 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 18 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக அந்த நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை மேலும் பலப்படுத்தப்பட்டது.
எனினும் 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு ஜனாதிபதியின் நிறை வேற்று அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கும் பிரதமருக்கும் வழங்கப்பட்டன.
அது ஒரு மிக முக்கியமான திருப்பமாக காணப்பட்டது. எனினும் 2020ஆம் ஆண்டு மீண்டும் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு நிறை வேற்று அதிகாரம் கொண்ட சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையிலேயே தற்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தை 21 ஆவது திருத்தச் சட்டமாக மீண்டும் கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
19ஆம் திருத்தச் சட்டத்தை 21 ஆவது திருத்தமாக கொண்டுவருவது ஆரோக்கியமான விடயமாகவே காணப்படுகின்றது.அதனை சகல தரப்பினரும் வரவேற்கின்றனர்.
ஆனால் அதன் ஊடாக தற்போதைய நெருக்கடிக்கு உடனடியாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்வியாக இருக்கின்றது.
காரணம் 19ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவது ஊடாக மட்டும் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்று எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் மிகத்திட்டவட்டமாக அறிவித்துஇருந்தன.
இந்தநிலையில் இன்னும் நெருக்கடி தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.அடுத்தகட்டமாக எவ்வாறான செயற்பாடு அரசியலில் இடம்பெறும் என்பதை எதிர்வு கூறமுடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது.
தற்போது அரசாங்கம் அமைச்சரவை நியமனத்தை செய்துள்ளதுடன் 19 ஆம் திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இருக்கின்றது.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. நாடளாவிய ரீதியில்ஆர்ப்பாட்டங்களும் தீவிரமடைந்து இருக்கின்றன. வீதிகளை மறித்து மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
இந்நிலையில் இலங்கைக்கு டொலர் கடனை பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவில் பேச்சுவார்த்தைகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பின்னணியில் அடுத்ததாக என்ன நடக்கும் என்பதையே சகலரும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.